2025 மே 15, வியாழக்கிழமை

விலங்கு வதை: சின்சினாட்டி முதல் தெஹிவளை வரை

Thipaan   / 2016 ஜூன் 09 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

அமெரிக்காவின் சின்சினாட்டியைச் சேர்ந்த சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில், அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்று, உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்தது. அரியவகைக் கொரில்லா ஒன்றை, சிறுவனொருவனைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்ட சம்பவமே அது. அந்த விலங்கு கொல்லப்பட்டிருக்க வேண்டுமா, சிறுவனில் தவறா, சிறுவனின் பெற்றோரில் தவறா, மிருகக்காட்சிச் சாலையில் தவறா என, பல்வேறான கேள்விகள் எழுப்பப்பட்டு, விவாதங்கள் தொடர்ந்து வந்தன. இவ்வாறான சம்பவமொன்று, அமெரிக்காவில் மாத்திரம் நடக்கக்கூடியதன்று. இதனாலேயே, இது தொடர்பான கருத்துப்பரிமாற்றங்கள் அவசியமானவை.

ஹராம்பே என்ற குறித்த கொரில்லாவின் கூண்டுக்குள், 3 வயதுச் சிறுவன் ஒருவன் வீழ்ந்ததைத் தொடர்ந்து, அச்சிறுவனை அந்தக் கொரில்லா, அது தங்கியிருந்த நீர்ப்பகுதியில் இழுத்துச் சென்றிருந்தது. சிறுவனைக் காப்பாற்றும் நோக்கில், அந்தக் கொரில்லா சுட்டுக் கொல்லப்பட்டதோடு, சிறிய கீறல் காயங்களுடன் மாத்திரம், அச்சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தான்.

மிகவும் அரியவகை உயிரினமான அந்தக் கொரில்லா, தனது 17ஆவது பிறந்தநாளுக்கு மறுநாள் கொல்லப்பட்டிருந்தது. சுமார் 200 கிலோகிராம் எடையுள்ள அக்கொரில்லா, தான் செய்யாத தவறொன்றுக்காகப் பரிதாபமாக இறந்திருந்தமை, பெருமளவினாரோரின் அனுதாபங்களைச் சம்பாதித்திருந்தது. ஆனால், அது கொல்லப்பட்டிருக்க வேண்டுமா என்பது, குழப்பகரமான பதிலையே கொண்டுவரக்கூடியது.

இதில் முதலாவது விடயமாக நோக்க வேண்டியது, எவ்வாறான நிலைமையில் இச்சம்பவம் இடம்பெற்றது என்பது தான். கூண்டைப் பிரித்துக் கொண்டு கொரில்லா வெளியே வந்து, சிறுவனொருவனைத் தாக்க முனைந்ததா? இல்லை, அந்தக் கொரில்லாவின் கூண்டுக்குள் சென்ற சிறுவனையே, அது தன்வசம் வைத்துக் கொண்டது. ஆகவே தான், மேலே கூறப்பட்டது போல, அது செய்யாத தவறொன்றுக்காக அது கொல்லப்பட வேண்டுமா என்பது, நியாயமான கேள்வியே. எங்களுடைய வீட்டுக்குள் புகுந்த திருடனைக் கொல்வதற்காக, எங்களைக் கொல்வது போன்று தான் அந்தச் சம்பவம் என, கொரில்லாக்களின் பார்வையில் அது அமையும்.

அடுத்ததாக, அந்தச் சிறுவனைக் காயப்படுத்தத்தான் அந்தக் கொரில்லா முயன்றதா என்பது முக்கியமான கேள்வி. மனிதர்களான நாம், கூர்ப்பின் அடிப்படையில் முன்னேறி, நாகரிகடைந்தவர்களாக மாறியிருக்கிறோம். அன்பையும் கோபத்தையும் நாகரிகமானதும் மென்மையானதுமான விதத்தில் வெளிப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளோம், அல்லது அவ்வாறு வெளிப்படுத்துவதை நியமமாகக் கருதுகிறோம். விலங்குகள் அவ்வாறில்லை. நாய்களும் பூனைகளும் சிறுத்தைகளும் புலிகளும் சிங்கங்களும், தங்களுடைய குட்டியை, வாயில் சுமந்துகொண்டு திரிவதைக் கண்டிருக்கிறோம். மேற்கூறிய விலங்குகளுக்குக் கை என்பது தனித்து இல்லாத நிலையில், வாயே அவற்றினது ஒரே தெரிவு. தனது குட்டியை வாயில் கொண்டு செல்லும் நாய், அதை உண்பதற்காகக் கொண்டு செல்வதில்லை. ஆகவே, கூண்டுக்குள் விழுந்த சிறுவனை, அந்தக் கொரில்லா இழுத்துச் சென்ற போதிலும், அது அவனைத் தாக்குவதற்குத் தான் முயன்றதா என்பது கேள்விக்குரியதே. சில தரப்பினர் சொல்வது போல, அந்தச் சிறுவன் ஆபத்திலிருக்கிறான் எனக் கருதி, அவனைப் பாதுகாக்க அது முயன்றிருக்கலாம். சூழலியலாளர்கள் சிலரின் கருத்தின்படி, தனது கூண்டுக்குள் வீழ்ந்த சிறுவனைக் கண்டு அது குழப்பமடைந்ததாகவும், வெளியிலிருந்து சத்தம் ஏற்படுத்தப்பட, அவனைக் காப்பாற்றவே அது அவ்வாறு குழப்பமான முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு விடயங்களுமே, கொரில்லாவைச் சுட்டுக்கொன்றமை சரிதானா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றன.

மறுபுற வாதமாக, சிறுவனை அது தாக்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. அது நீரில் இழுத்துச் செல்லும்போது, சிறுவனுக்கு மயக்கம் போன்ற நிலை ஏற்பட்ட நிலையில், தவறுதலாகவேனும் சுவரோடு அவனது தலையை முட்டியிருந்தால், அவனது உயிர் போயிருக்கும். என்னதான் அரிதான விலங்கு என்ற போதிலும், சிறுவனா, கொரில்லாவா என்ற நிலை வரும்போது, சிறுவன் என்ற முடிவை எடுப்பதே சாதாரணமானது. சிறுவனைக் கொல்வதற்கு 20 சதவீத வாய்ப்புகள் காணப்பட்டன என்று வைத்துக் கொண்டாலும் கூட, அந்த மிருகத்தைக் கொல்வதைத் தவிர, வேறு முடிவை எடுப்பது உசிதமாக அமையாது.

இங்கு முக்கியமான இன்னொரு விடயம், அந்தச் சிறுவன், கறுப்பினத்தைச் சேர்ந்தவன். வேறு வழிகளில் காப்பாற்ற முனைந்து, அச்சிறுவனுக்கு ஆபத்தேதும் ஏற்பட்டிருந்தால், கறுப்பினச் சிறுவன் என்பதால் தான், உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு அந்த மிருகக்காட்சிச் சாலை தவறியிருந்தது என்ற இனவாதக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கும். அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது காணப்படும் இனவாதம், உலகம் முழுவதும் அறியப்பட்டது என்ற நிலையில், அந்த விடயத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டிய நிலை, மிருகக்காட்சிச் சாலை ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

உண்மையிலேயே அந்தச் சிறுவனை அந்தக் கொரில்லா தாக்க முனைந்தது என்று வைத்துக் கொண்டாலும், வேறு வழிகளில் சிறுவனை மீட்பது குறித்த திட்டங்கள், அந்த மிருகக்காட்சிச் சாலையில் காணப்பட்டனா என்பது அடுத்த முக்கியமான கேள்வி. இதேபோன்றதொரு அவசர நிலைமைகளில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான பயிற்சி, அங்கிருந்த ஊழியர்களுக்குக் காணப்பட்டனா என்பது ஆராயப்பட வேண்டியது. எடுத்த எடுப்பில் சுட்டுக் கொல்வது தான் தீர்வா?

முக்கியமாக, சிறுவனொருவன் கூண்டுக்குள் செல்லுமளவுக்கு, அங்கிருந்த பாதுகாப்பு நிலைமை காணப்பட்டதா? அவனோடு சென்ற தாய், கூண்டுக்குள் அவன் செல்லும்வரை என்ன செய்துகொண்டிருந்தார்? இவை யாவும், விடைகள் அறியப்பட வேண்டிய வினாக்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வியாக, கூண்டுக்குள் கொரில்லாவுக்கு என்ன வேலை? காட்டில் வாழ வேண்டிய விலங்கைக் கூண்டில் அடைத்து வைப்பது, எவ்வளவு தூரத்துக்கு நியாயமானது? அவ்வாறு செய்துவிட்டு, அதைக் கொல்லுதல், எவ்வளவு மோசமானது?

மனிதர்களின் களிப்பூட்டலுக்காக, விலங்குகளை இவ்வாறு அடைத்து வைப்பதன் மூலம், அவற்றின் இயற்கையான சூழலில் அவை வாழ்வதைத் தடுக்கும் நாம், இயற்கையான சூழலில் வாழத்தெரியாத சந்ததியொன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கு கொல்லப்பட்ட ஹராம்பேயை, காட்டில் கொண்டுசென்று விட்டால், அதனால் உயிர்வாழ முடியாது. கூண்டிலேயே பிறந்து, கூண்டிலேயே வாழ்வதற்குத் தான் அது பழக்கப்பட்டிருக்கும். அதனால் தான், இவ்விடயம் மேலும் அதிகம் கவனஞ்செலுத்தப்பட வேண்டியதொன்றாக இருக்கிறது.

மிருகக்காட்சிச் சாலைகளில் நாம் பார்க்கின்ற விலங்குகள், உண்மையிலேயே காட்டில் வாழும் விலங்குகளன்று. மிருகக்காட்சிச் சாலையில் பார்க்கும் குரங்குக்கும், அதே இனக் குரங்கில் காட்டில் வாழும் ஒன்றுக்குமிடையில், ஏராளமான வித்தியாசங்கள் காணப்படும். ஆக, வாழத்தகுதியற்ற, வாழும் இயல்புகளற்ற ஒரு சந்ததியை, எமது குறுகியநேர, பொய்யான மகிழ்ச்சிக்கு (ஏனெனில், நாம் பார்ப்பது, உண்மையான விலங்குகளையன்று. அவை போலிகள்) உருவாக்குவது, எவ்வளவு சரியானது?

அதேபோல், மிருகக்காட்சிச் சாலைகளில் இருந்தாலும், அவை சரியாகப் பேணப்படுகின்றனவா என்பது அடுத்த கேள்வி. இலங்கையின் புகழ்பூத்த தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையிலுள்ள உயிரினங்கள், சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்பது, காலங்காலமாக எழுந்துவரும் குற்றச்சாட்டாகும். அவற்றுக்குச் சரியான உணவுகள் வழங்கப்படுவதில்லை, போஷாக்கான உணவுகள் வழங்கப்படுவதில்லை, போதுமான உணவுகள் வழங்கப்படுவதில்லை, அவை துன்புறுத்தப்படுகின்றன போன்றனவெல்லாம், சாதாரணமான குற்றச்சாட்டுகளன்று. இது தெஹிவளைக்கு மாத்திரமன்று, உலகிலுள்ள ஏராளமான மிருகக்காட்சிச் சாலைகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டாகும். எனவே தான், மிருகக்காட்சிச் சாலைகள் தேவைதானா என்ற கேள்வியை எழுப்புவதற்கு, ஹராம்பேயின் மரணம், ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தையைப் பார்ப்பதை விட, அதனுடைய இருப்பிடமான காட்டில் அது கம்பீரமாக நடந்து திரியும் போது பார்ப்பது, உண்மையான அனுபவமில்லையா? பார்ப்பதற்கும் அது அழகு என்பதோடு, அந்த விலங்குக்கும் அது சுவாத்தியமானது. இலங்கையில் அவ்வாறான முயற்சிகள் எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை தொடர்பாகவும், முடிவெடுக்கப்பட வேண்டும். கட்டங்கட்டமாக, கண்காணிக்கப்பட்ட விதத்தில், அங்கிருந்த உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களிலேயே விடப்பட வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்களுக்கும் நேயமான சூழலொன்று உருவாக்கப்பட்டாலேயே, அது உண்மையிலேயே மகிழ்ச்சியான நாடாகும். அது, அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டியாக இருக்கலாம், இல்லாவிடின் இலங்கையிலுள்ள தெஹிவளையாகவும் இருக்கலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .