2026 ஜனவரி 17, சனிக்கிழமை

வாசிப்பை நேசிப்போம்

Editorial   / 2026 ஜனவரி 16 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவசாமி மனோகரன்,
ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர்,
மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி,
பொல்கொல்ல.

மனித வாழ்வின் நிலைப்புக்கும் விருத்திக்கும் மிக அவசியமானதும் ஆதாரமானதுமான அம்சமாக வாசிப்பு விளங்குகிறது. மனிதனது சிந்தனைத் திறன் விருத்திக்கும் மன ஆரோக்கியத்துக்கும் படைப்பாற்றல் திறன் விருத்திக்கும் இது வழியமைக்கிறது. வாசிப்பானது கவனத்தை ஒருமுகப்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் புதிய கருத்துக்களையும் சொற்களையும் அறிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் உதவுகிறது. இது பகுத்தறிவை விருத்தி செய்து நினைவாற்றலை மேம்படுத்தி சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் வழிகாட்டுகிறது.

இன்று பாடசாலை மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் வாசிப்புப் பழக்கமானது மிக அருகி வருவது கவலைக்குரியதான விடயமாக உள்ளது. வாசிப்பு தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் அதன் சடுதியான வீழ்ச்சியை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டுகின்றன. சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வு முடிவுகள் வாசிப்பின் வீழ்ச்சி நிலைகளை  தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொப்பர் விக்கி ஆய்வு உலகளாவிய ரீதியில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணங்களாக விளங்குவதாகக் குறிப்பிடுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் 57 வீதமானோரது வாசிப்பு வீதமானது 50-75 வீதமாகக் குறைந்துள்ளதாக  ஆய்வு குறிப்பிடுகிறது. சிங்கப்பூரிலே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அங்குள்ள மாணவர்களில் 57.6 வீதமானவர்கள் இணையத்தளங்களில் அதிகளவாக நேரத்தைச் செலவிடுவதன் காரணத்தால் வாசிப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

ஜெர்மனியில் 30 இலட்சம் பேர் வாசிப்பு மற்றும் எழுதும் ஆற்றல்களை இழந்துள்ளதாக  அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இத்தாலியிலே 80 வீதமானோர் புத்தக வாசிப்பை முட்டாள்தனமாகக் கருதுவதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுமுடிவுகள் சுட்டுகின்றன. 85 சதவீதமான பிள்ளைகள் வாசிப்பதை விடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக உலகளாவிய பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இலங்கையிலும் கடந்த காலத்திலே மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் வாசிப்பு சடுதியாக வீழ்ச்சி கண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் போது செய்யப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையில் 84.2 வீதமான மாணவர்கள் வாசிப்புக்  குறைபாட்டின் காரணமாகக் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா காலங்களில் மாணவர்கள் தொழில்நுட்ப சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியமையால் நூலகப் பயன்பாடு குறைவடைந்து 72 வீதமான மாணவர்கள் தொழில்நுட்ப சாதனங்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களின்  அதிக வேலைப்பளுவின் காரணத்தால் வீட்டுச் சூழலில் மாணவர்கள்  வாசிக்க ஊக்கப்படுத்தப்புடுவதில்லை. தனியார் வகுப்புக்களின் ஆக்கிரமிப்பால் மாணவர்கள் வாசிப்பதற்காக நேரத்தை ஒதுக்குவதில்லை.

இத்தகைய சூழலில் வாசிப்பிலே விருப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டியவை பற்றிச் சிந்திப்பது பொருத்தமானதாயிருக்கும் என நான் கருதுகிறேன். தினமும் குறிப்பிட்டதொரு நேரத்தை வாசிப்பதற்காக ஒதுக்குவதன் ஊடாக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கலாம் இதற்காக இரவு நேரங்களில் 30 நிமிடத்தை ஒதுக்கி தினசரி இதனை செயற்படுத்தும் போது அதுவே சிறந்ததொரு பழக்கமாக மாறும். குடும்பமாக சேர்ந்து வாசிப்பதன் ஊடாக பிணைப்பை வலுப்படுத்தி நல்லதொரு வாசிப்புக் கலாசாரமாக இதனை உருவாக்கலாம். வாசிப்பை நேசிக்க வேண்டுமாயின் எப்போதும் நல்ல நூல்களையும் பத்திரிகைகளையும் கையில் வைத்திருங்கள். எமது வாழ்க்கையிலே காத்திருப்பு நேரங்களுக்கோ குறைவில்லை. காத்திருப்பு நேரங்களை வாசிப்புக்குப் பயன்படுத்துங்கள். இதுவே வாசிப்பைச் சிறந்ததொரு பழக்கமாக்கிவிடும். அதே நேரத்திலே வீட்டிலே சிறிய நூலகங்களை அமைத்தல், புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லல் என்பனவும் வாசிப்பை நேசிப்பதற்கான சிறந்த வழிமுறைகளாகும்.

பாடசாலை மாணவர்களிடையே வாசிப்பை நேசிக்கச் செய்வதற்கு ஆசிரியர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்திச் சிறந்த வாசிப்புக் கலாசாரமொன்றை உருவாக்க வேண்டும். 'வாசிக்கக் கற்றுக் கொடுங்கள் அவர்கள் வாசித்துக் கற்றுக் கொள்வார்கள்' என்ற பிரபல்யமான கூற்றுக்கு ஏற்ப மாணவர்கள் விருப்பத்துடன் வாசிப்பதற்கு உகந்த உத்திகளை  கற்றுக் கொடுக்க வேண்டியது ஆசிரியர்களது பொறுப்பாகும். வாசிக்கக் கற்றுக் கொடுப்பதற்கான சில நுட்ப முறைகள்:

1.  Francis P. Robinson என்பவரால் 1941 இல் அறிமுகப்படுத்தப்பட்ட SQRRR முறையைப் பயன்படுத்தி வாசிக்கச் செய்தல்.

S-Survey   (வாசிப்புப் பகுதியின் தலைப்பு, துணைத் தலைப்புகள், படங்கள், அட்டவணைகள் என்பனவற்றை மேலோட்டமாக ஆராய்தல்)

Q - Questioning (மேலோட்டமாகப் பார்த்த உள்ளடக்கப் பகுதிகளை வினாக்களாக உருவாக்கிக் கொள்ளல்)

R 1 - Read (உருவாக்கிய வினாக்களுக்கு விடைகளைத் தேடியவாறு விரிவாக வாசித்தல்)

R2 - Recite (வாசித்தவற்றை உங்களது சொற்களில் நினைவுபடுத்திச் சொல்லுதல் அல்லது எழுதுதல்)

R3 - Review (மீண்டும் முழுமையான கருத்தைச் சுருக்கி நீண்ட கால நினைவுக்கு உதவும் வகையில் மறுபரிசீலனைச் செய்தல்)

2.  வாசித்தவற்றை உரத்து சொந்த வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லுதல்.

வாசிக்கின்ற பாடப் பகுதிகளைச் சிறு பகுதிகளாக்கி 20 நிமிடங்களில் வாசிக்கும் வகையில் மாணவர்களுக்கு வழங்குதல். மாணவர்கள் நன்கு வாசித்ததன் பின்னர் வாசிப்புப் பகுதியை மனனம் செய்து (mind map) ஆக தனது சகபாடிகளுடன் விவாதிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குதல்.

3.  வாசிப்புக்கான இலக்கை நிர்ணயித்தல்.

மாணவர்களிடம் சிறந்த வாசிப்புப் பழக்கமொன்றை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பக்கங்களை அல்லது குறிக்கப்பட்ட நேரத்தை நிர்ணயித்து வழங்குதல். ஆரம்பத்தில் 1-2 பக்கங்களில் தொடங்கி படிப்படியாக வளர்த்துச் செல்லலாம். இது மாணவர்களிடையே சிறந்த வாசிப்புக் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக அமையும்.

4.   மாணவர்கள் விரும்பக் கூடிய புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிப்பில் விருப்பை ஏற்படுத்துதல்.

மாணவர்கள் விரும்பக் கூடிய புனைக் கதைகள், படங்களுடன் கூடிய வாசிப்பு நூல்கள் இவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்கச் செய்வதன் ஊடாக வாசிப்பில் ஈரப்பை ஏற்படுத்தலாம். மாணவர்கள் வாசிப்பை விருப்பத்துக்கு உரித்தான பழக்கமாக ஆக்கிக் கொண்டதும் அறிவு சார்ந்த நூல்களை அவர்களாகத் தேடி வாசிப்பதில் ஈடுபடுவார்கள்.

5.   பாடசாலையில் அல்லது வகுப்பறைகளில் புத்தக குழாம்களை  (Books Clubs) உருவாக்கி மாணவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பமளித்தல்

பாடசாலையில் அல்லது வகுப்பறைகளில் மாணவர்களை ஒன்றிணைத்து வாசிப்பு கிளப்புகளை உருவாக்கி மாணவர்களிடையே சந்திப்புக்களை உருவாக்கி நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கச் செய்தல். வாசித்ததன் பின்னர் கருத்துப் பகிர்வு, வினாவிடை முறைகளில் வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் வழங்குங்கள். வாசிப்பை ஊக்கவிக்கும் வகையில் போட்டிகள் நடாத்தி பரிசுகள் வழங்கலாம்.

எனவே, வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை மாற்றியமைக்கும் வகையில் நல்லதொரு வாசிப்பக் கலாசாரத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. குடும்பச் சூழலில் இருந்து தொடங்கி பாடசாலைகளில் முiறைமை சார்ந்த வேலைத்திட்டங்கள் ஊடாக வாசிப்பை நேசிப்பதற்கான வளமான சூழலொன்றை உருவாக்க  எம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X