Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூலை 18 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.கே.அஷோக்பரன் LLB (Hons)
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 49)
திருப்புமுனை
இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றின் 1976 மே 14 ஆம் திகதி முக்கியமான நாள். யாழ். வட்டுக்கோட்டை, பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) பெயர் மாற்றம் பெற்றதோடு, தனிநாட்டுக்கான 'வட்டுக்கோட்டைத் தீர்மானமும்' இங்குதான் நிறைவேற்றப்பட்டது. இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதன் வழியில் அமைந்த தமிழர் அரசியலையும் திரும்பிப் பார்க்கையிலே தமிழர்களின் அரசியலில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது பெரும் திருப்பு முனையாக அமைந்தது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. சில விமர்சகர்கள் இது திருப்புமுனையல்ல‚ மாறாக தமிழ் அரசியல் தலைமைகளின் இயலாமையின் வெளிப்பாடு என்பார்கள். இதனை விரிவாக ஆராய முன்பதாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முக்கிய பகுதிகளை பார்ப்பது அவசியமாகிறது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலமைந்த குறித்த மாநாட்டில் செல்வநாயகத்தால் முன்மொழியப்பட்டு, மு.சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இப்படி அமைந்தன:
'இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளும்; வரை பல
நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.
மேலும், 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.
மேலும், தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகி உள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:
(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித் தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்கு உட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றதாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.
(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச் சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.
(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கான செயற்றிட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு, சுதந்திரத்துக்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது'.
வட்டுக்கோட்டைத் தீர்மானமானது இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசை முன்வைத்ததோடு அதனை அடையப்பெறுவதற்கு தமிழ் இளைஞர்களை 'புனிதப் போருக்கு' அழைக்கும் அறைகூவலாகவும் அமைந்தது. இந்த அறைகூவலை 'ஈழத்துக் காந்தி' என்று அழைக்கப்பட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் விடுத்திருந்தார். இதன் பின்புலத்தில் ஏறத்தாழ 20 வருடங்களாகத் தோல்வி கண்ட பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் சமரசமுயற்சிகளும் இருக்கின்றன.
தமிழர் உரிமைகள் காவுகொள்ளப்பட்ட ஒரே இரவில் அந்த அநீதிக்கு தீர்வு தனியரசுதான் என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வரவில்லை. மாறாக 20 வருடகாலமாக இலங்கையின் இரு பெரும் கட்சிகள் மாறி மாறி அரசாங்கக் கட்டிலில் வந்தபோது அவற்றுடன் பல்வேறு வகையான சமரச முயற்சிகளை மேற்கொண்டு, அவை தோற்கடிக்கப்பட்ட பின்னரே, அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு முயற்சிகள் மீது நம்பிக்கையிழந்த பின்னரே, 'தனியரசு'என்பதே தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வந்தன. இதிலே ஒரு முக்கிய தற்செயல் நிகழ்வும் நடந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றப்படுவதற்கும் ஒன்பது நாட்களுக்கு முன்பாக 'தமிழ் புதிய புலிகள்' என்ற ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் இயக்கம் தன்னை 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றிக் கொண்டது. இது தற்செயலா, இல்லை இரண்டும் ஒரே திட்டத்தின்படி நிகழ்ந்தனவா என்பது பற்றிய ஆதாரங்கள் எதுவுமில்லை. எது எவ்வாறாயினும் 1976 மே 14 ஆம் திகதி செல்வநாயகம் விடுத்த அறைகூவல் காட்டிய பாதையில், அது காட்டிய இலட்சியத்திற்காக அடுத்த 33 வருடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள்.
வரலாற்றின் முக்கியத்துவம்
'வரலாறு, எத்தனை வலிமிக்கதாக இருப்பினும், அதனை எம்மால் மாற்றிவிட முடியாது. ஆனால் அதனை தைரியத்துடன் எதிர்கொண்டால், அதனை மீண்டும் அனுபவிக்கத் தேவையில்லை' என்று மாயா அஞ்சலூ ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். வரலாறு என்பது பொற்காலங்களையும் இருள்சூழ் காலங்களையும் கொண்டது. பல சரிகளும் பல தவறுகளும் நிறைந்தது. நாம் பூரிப்படையத்தக்க பெருமைகளையும் வெட்கப்படத்தக்க சிறுமைகளையும் வேதனையளிக்கும் கொடுமைகளையும் கொண்டது. எது எவ்வாறு அமையினும் அன்று நடந்தவற்றை இன்று நாம் மாற்றிவிட முடியாது. ஆனால் அந்த வரலாற்றை தைரியத்துடன் எதிர்கொள்வதன் மூலம், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மீண்டுமொருமுறை அதுபோன்றதொரு நிலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள முடியும். வரலாற்றை அறிவதன் பயன் அதுவாகத்தான் இருக்க முடியும்.
'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' சரி, பிழை என்று இருநிலைகளில் ஒன்றில் நின்று ஆராய்வது பொருத்தமற்றது என்று கருதுகிறேன். மேலும் எந்தவொரு விடயத்தையும் அது நடந்ததன் பின்நின்று தீர்மானிப்பதன் (judging in hindsight) பொருத்தப்பாடு பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. உதாரணமாக 1976 இன் பிற்பகுதியில் இலண்டன் பி.பி.சிற்கு பேட்டியளித்த சா.ஜே.வே.செல்வநாயகம் 'நாங்கள் ஒரு தமிழ் 'ஜின்னா'வை உருவாக்கத் தவறிவிட்டோம்' என்றார். இந்தக் கூற்றின் அர்த்தம், எப்படி இந்திய சுதந்திரத்தின் முன்பதாக முஹமட் அலி ஜின்னாஹ் முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டை பெற்றுக்கொண்டாரோ, அதுபோல தமிழர்களுக்காக தமிழ்த் தலைமைகள் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டன என்பதே. ஆனால் இதே செல்வநாயகமும் 'தனிச்சிங்களச் சட்டம்' பிறந்த 1956 முதல் 1976 வரை இரண்டு தசாப்தங்களாக தனிநாடு கேட்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கையினுள் அதிகாரப் பகிர்வையே கோரினார். ஆகவேதான் இரண்டு தசாப்தங்களாகச் செய்ய விளையாத ஒன்று தனக்கு முற்பட்டோர் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை தூரம் பொருத்தமானது என்ற கேள்வி இவ்விடத்தில் நிச்சயம் எழுகிறது. இதுதான் எந்தவிடயம் பற்றியும் அது நடந்தேறியதன் பின்நின்று தீர்மானிப்பதில் உள்ள சிக்கல்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய விமர்சனம்
'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது மேற்குறிப்பிட்டது போல இரண்டு தசாப்தகால ஏமாற்றங்களின் பின்னர் தமிழர்களுக்கு வேறுவழியின்றிப் பிரிவினையைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று நியாயம் சொல்லும் ஒரு தரப்பினர் உள்ள அதேவேளையில், வட்டுக்கோட்டைத் தீர்மானமென்பது தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள தமிழரசுக் கட்சியினரால் தமிழ் மக்களின் உணர்வைத் தூண்டுவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட தீர்க்கதரிசனமற்ற பிரச்சாரமேயன்றி வேறில்லை என விமர்சிக்கும் ஒரு தரப்பும் உண்டு. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' எடுக்கப்பட்ட காலத்தில் சா.ஜே.வே. செல்வநாயகத்தின் உடல்நிலை சிறப்பாக இருக்கவில்லை. அவரது செவிப்புலனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கட்சியின் அடுத்த தலைமைக்கான போட்டியும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கட்சியின் 'தளபதியாக' அறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இளைஞர்களிடையே தனக்கான ஆதரவினைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். 1970 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய அ.தியாகராஜாவிடம் 725 வாக்குகளால் தோல்வி கண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு எப்பாடுபட்டேனும் அடுத்த தேர்தலில் வெற்றியீட்டிவிட வேண்டிய தேவையிருந்தது. மேலும் 1965 - 1970 வரை டட்லி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததன் பின்னர் தமிழரசுக் கட்சியின் பிரபல்யம் வீழ்ச்சி கண்டிருந்தது. ஆகவே இவை எல்லாவற்றையும் சரிசெய்யத்தக்க அரசியல் தந்திரோபாயமாகவும் இளைஞர்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டவல்ல வியூகமாகவுமே 'தனிநாட்டுக் கோரிக்கை' பயன்படுத்தப்பட்டது என இமயவரம்பன் தனது 'தந்தையும் மைந்தரும்' என்ற நூலில் கடும் விமர்சனமொன்றை முன்வைக்கிறார்.
தனியரசுக் கோரிக்கையை ஏற்காத தொண்டமான்
தமிழ் ஐக்கிய முன்னணியின் முக்கிய மூன்று தலைவர்களில் ஒருவரான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாற்றப்பட்டு, தனியரசுப் பிரகடனத்தை முன்வைத்ததும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். அவரைப் பொறுத்தவரையில் தமிழீழம் என்பது தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்ற நிலைப்பாடே காணப்பட்டது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் 1977 தேர்தலில் ஆதரவளித்திருந்தாலும், மலையகத்தில் தன்னுடைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சேவல் சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொண்டார். 'வடக்கு கிழக்கில் உதயசூரியன் மலரும் வேளையில், மலையகத்தில் சேவல் கூவும்' என்பதே அன்றைய மகுடவாசகமாக இருந்தது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக அமைந்த இந்த வடக்கு கிழக்கு மற்றும் மலையகக் கூட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தோடு நடைமுறை ரீதியில் முடிவுக்கு வந்தது எனலாம்.
1977இல் தொடர்ந்த இருதரப்பு ஆதரவுநிலை அரசியலும் காலப்போக்கில் இல்லாது போய்விட்டது. விடுதலைப் போராட்டம் பற்றிய தொண்டமானின் பார்வை வேறாக இருந்தது என்பதை அவரது கூற்றுக்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 'தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு பேச்சுவார்த்தைக் கலை தெரியாது. அவர்கள் சட்டத்தரணிகள்; அவர்களுக்கு தமது வழக்கை சிறப்பாக எடுத்துரைக்கத் தெரியுமேயன்றி, எதிர்த்தரப்பிலிருந்து தமக்கான சலுகைகளை இலாவகமாகப் பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கலை அவர்களுக்குத் தெரியாது' என்று சௌமியமூர்த்தி தொண்டமான் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மக்களாணையைப் பெறும் முயற்சி
இந்நிலையில், இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள, 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தத் தீர்மானத்தை தமது விஞ்ஞாபனமாக மக்கள் முன் சமர்ப்பித்து தனியரசுக்கான மக்களாணையைப் பெற தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தீர்மானித்தது.
(தொடரும்...)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago