2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வடக்கில் செம்மணி; கிழக்கில் குருக்கள்மடம்

R.Tharaniya   / 2025 ஜூலை 22 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

வடக்கில் தோண்டப்படும் செம்மணி புதைகுழிகள் பூதாகரமான விவகாரமாக மாறியுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் இன்னும் தோண்டப்படாத குருக்கள்மடம் புதைகுழி விவகாரமும் சூடுபிடித்துள்ளது. 

நீண்டகாலமாக யுத்தம் நடைபெற்ற நாடு என்ற வகையில், மனித குலத்திற்கு எதிரான பல சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. கடத்தல், கப்பம் பெறல், படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு, இடம்பெயர்வு, சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படல், கற்பழிப்பு, காணாமலாக்கப்படுதல், உடல் ஊனமடைதல், சகோதரக் குழுக்கள் மற்றும் மக்களைக் கொலை செய்தல்.... ஏன்? இவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

இலங்கையில் இவ்வாறு இடம்பெற்ற மீறல்களுக்குத் தனியே ஒரு தரப்பு மட்டும் பொறுப்பல்ல. விடுதலைப் புலிகள் தமிழ் ஆயுதக் குழுக்கள், அடிப்படைவாத பயங்கரவாதக் குழுக்கள், படைத் தரப்பில் ஒரு பிரிவினர், இந்திய அமைதி காக்கும் படைகள், ஒட்டு ஆயுதக் குழுக்கள், அந்தந்த பிரதேசங்களில் இயங்கிய சண்டியர்கள் மட்டுமன்றி ஜே.வி.பி. மற்றும் கடும்போக்கு இயக்கங்கள், அரசியல் சக்திகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 

இதில் ஒன்றான செம்மணி விவகாரம் இன்று நேற்று உருவெடுத்ததல்ல. 1990இல் யாழ்ப்பாணம், சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி அரச படையினரால் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டமை அதனுடன் இணைந்ததாகப் பலர் கொல்லப்பட்டமை அக்காலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வழக்கில் நீதிமன்றத்தால் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட படைச் சிப்பாயான சோமரத்ன ராஜபக்‌ஷ வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே சிந்துப்பாத்தி மயானப் பகுதியை தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 

இப் புதைகுழியில் இருந்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை பல களநிலை மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. 

 ஆயுததாரிகள் கொல்லப்படுவதும், போர்க்களத்தில் சண்டையிடுபவர்கள் மரணிப்பதும் உலக ஒழுங்கில் சாதாரண விடயம்.

படையினர் அல்லது ஆயுதக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படுபவர்களும் 
வேறு கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட வேண்டும்.

ஆனால், எந்த இனத்தை, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அப்பாவிகள், நிராயுதபாணிகள் மற்றும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களை கொல்வது மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். இதனை சர்வதேச சட்டங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

எனவே, இலங்கையில் இவ்வாறு கொல்லப்பட்ட அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் 
மாற்றுக் கருத்தில்லை.

அந்த வகையில், செம்மணி புதைகுழியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்தால் அதற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். செம்மணியில் மட்டுமல்ல வேறு இடங்களிலும் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்டவர்களுக்கும் காலம் தாழ்ந்த நிதியையாவது பெற்றுக் 
கொடுப்பது கட்டாயமாகும். 

இது இவ்வாறிருக்க,, வேறு பல படுகொலைகள், புதைகுழிகள் மற்றும் வதைமுகாம்கள் பற்றிய கருத்துக்களும் முன்வைக்கப்படுவதைக் காண முடிகின்றது. 

இதில்  ஒன்றுதான் 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 165இற்கு குறைவில்லாத முஸ்லிம்களின் மட்டக்களப்பு, குருக்கள்மடம் புதைகுழியாகும். இந்தப் புதைகுழி தோண்டப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரி நிற்கின்றனர். 

80களின் இறுதி மற்றும் 90களில் விடுதலைப் புலிகளும் வேறு சில ஆயுதக் குழுக்களும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான பல அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட்டன. வடக்கில் இருந்து பூர்வீக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் ஏறாவூர், காத்தான்குடி, முதல் அக்கரைப்பற்று வரை பல பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், வயல்வெளிகள், வீதிகளில் நடத்தப்பட்ட பலியெடுப்புக்கள், கப்பம், கடத்தல் என நீளமான பட்டியல் உள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழ் ஆயுதக் குழுக்கள், இந்திய இராணுவம் உள்ளடங்கலாக ஆயுதம் தரித்த தரப்புக்களால் நடத்தப்பட்ட அநியாயங்களை, சர்ஜூன் ஜமால்தீனின் ‘சாட்சியமாகும் உயிர்கள்’ போன்ற 
வரலாற்று நூல்களில் மட்டுமன்றி, இப்போது இணையத்தளங்களிலும் 
காணக் கூடியதாக உள்ளது. 

ஆனால், தங்களது இழப்பிற்காக முஸ்லிம்கள் ஒரு சமூகமாகத் தொடர்ச்சியாகப் போராடவில்லை என்பது உண்மைதான். இது மிகப் பெரும் சமூக, அரசியல் தவறு என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், முஸ்லிம்கள் நீதிக்காகக் கொஞ்சமும் போரடவில்லை என கூற முடியாது. 

ஒரு கட்டத்தில் இறைவனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அலுத்துப் போனார்கள் என்பதுதான் உண்மை. ஆயினும், மேற்குறிப்பிட்ட விவகாரங்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்பட வேண்டிய தேவை மீதமிருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.

 அவற்றுள், வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம், பள்ளிவாசல் படுகொலைகள் போல மிக முக்கியமான ஒரு விடயம்தான், குருக்கள்மடம் படுகொலை ஆகும். 

 1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி, புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு நாடு திரும்பிய நிலையில் கல்முனை,  மட்டக்களப்பு வீதியால் சென்று கொண்டிருந்த ஹஜ்ஜாஜிகள் சுமார் 150 பேர் உட்பட 165 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து புலிகளால் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, கடற்கரைப் பக்கத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டு காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டனர். 

அக்காலத்தில் இப்பகுதியின் ஊடாக முஸ்லிம்கள் தனியே பயணிப்பதற்கு அஞ்சியதால், பல வாகனங்கள் ஒன்று சேர்ந்தே பெரும்பாலும் பயணிப்பதுண்டு. அப்படி கல்முனை பக்கமாக இருந்து காத்தான்குடிப் பக்கமாக தொடரணியாக வந்த வாகனங்களில் இருந்த முஸ்லிம்களே இவ்வாறு கொல்லப்பட்டனர். 

ஹஜ் கடமையை நிறைவு செய்து விட்டு பஸ்ஸில் வந்தவர்கள், வீதியால் வந்த முஸ்லிம் வியாபாரிகள், தொழிலுக்குச் சென்றவர்கள். வைத்தியசாலைக்குப் போய்க் கொண்டிருந்தவர்கள் என முஸ்லிம்கள் மட்டும் வடித்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 

இவர்களுள் பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும் இருந்தனர். அவர்கள் கெஞ்சி மன்றாடியதாகவும், ஆனால், மிக ஆவேசமாக வெறிபிடித்தவர்களாக நடந்து கொண்ட  புலிகளின் காதில் இந்த மன்றாட்டங்கள் எடுபடவில்லை என்றும் முஸ்லிம் தரப்பில் மட்டுமன்றி, சம்பவத்தைத் நேரில் பார்த்த தமிழ் 
மக்களும் கூறுகின்றார்கள். 

கூடியதாகவுள்ள தகவலின் படி, பசீர் என்ற ஒருவரைத் தவிர வேறெந்த முஸ்லிமும் உயிருடன் தப்பிவரவில்லை. இது சர்வசாதாரணமான படுகொலையல்ல. தமது சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிய விடுதலைப் புலிகள், நிராயுதபாணியான, இன்னுமொரு சிறுபான்மை சமூகத்தவர்களை இலக்கு வைத்து, ஒரு சில மணி நேரங்களுக்குள் 165 பேரைக் கொலை செய்தது என்பது மிகப் பெரும் குற்றமும் மீறலும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட முஸ்லிம் சமூகம், இவர்கள் ‘கடத்தப்பட்டு இருக்கின்றார்கள்’ என்று கருதி அவர்களை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டனர். ஒரு சமாதானக் குழுவாகப் புலிகளைத் தொடர்புகொள்ள முயன்றனர். இதற்காக கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் உதவியை நாடினர். ஆனால், அந்த முயற்சி பயனளிக்கவில்லை. 

‘முஸ்லிம் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம்’ என்ற தொனியில் அந்த மதகுருவுக்கு புலிகள் கடிதம் அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்தை மதகுரு முஸ்லிம் தூதுக் குழுவிடம் காட்டிய போதுதான், இதனைப் புலிகளே செய்துள்ளார்கள் என்பது உறுதியானது என்று சம்பந்தப்பட்டோர் கூறியுள்ளனர். 

அதன்பிறகு, அந்த முஸ்லிம்கள் இனி திரும்பி வர மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு உங்களது முறைப்படி இறுதிக்கிரியை செய்யுங்கள் என்ற தகவல்களும் முஸ்லிம் தரப்புக்குக் கிடைத்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள். 

ஆகவே, இந்த சம்பவத்தை நேரில் கண்ட தமிழர்கள், தப்பிவந்த நபர், விடயமறிந்து ஊரை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள். சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள், கிறிஸ்தவ மதகுரு என பலரது சாட்சியங்கள் உள்ளன. ஏன், சில விடுதலைப் புலி உறுப்பினர்களும் உலகில் எங்கோ உயிருடன் இருக்கலாம். 

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைக் கொன்று, குருக்கள்மடம் கடற்கரையோரமாக இருந்த ஒரு கிடங்கிவ் போட்டு விட்டுச் சென்று விட்டதாகவும், சில தினங்களின் பின்னர் அப்பகுதிக்கு வந்த தமிழர்களே ஒரு பெரிய குழியில் இட்டு சடலங்களை மூடியதாகவும் கூறப்படுகின்றது. எனவே, அவர்களும் சாட்சியமாகின்றனர்.

இதற்கு நீதியைப் பெற முஸ்லிம்கள் பல முயற்சிகளை 2014ஆம் ஆண்டு இதனைத் தோண்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து அது பின்னர் கைவிடப்பட்டது. 2020ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமையக் கிடப்பில் போடப்பட்டது. இப்போது அந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் மீள ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அல்லது முஸ்லிம் சமூகம் ஏன் இப்போது இதனைப் பற்றிப் பேசுகின்றது என்று யாராவது கேட்பது, புலிகள் செய்ததாகக் கூறப்படும் இக்குற்றத்திற்கு நீதி கிடைப்பதற்கு எதிரான எத்தனமாகவே அமையும். 

எனவே, செம்மணியிலும், குருக்கள்மடத்திலும் மட்டுமன்றி, அரந்தராவையிலும் தலதா மாளிகையிலும், கொழும்பிலும், கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட தேவாலயங்களிலும் என எல்லா இடங்களிலும் மேற்கொள்னப்பட்ட படுகொலைகளின் வலி என்பது சமமானது. எல்லாவற்றுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .