Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 08 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் அடங்கலாக 339 உள்ளூராட்சி சபைகளுக்கு 8,287 ஆசனங்களுக்காக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வடக்கு மக்கள், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமது தவறைத் திருத்திக் கொண்டு
தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாகியவற்றுக்குப் பேராதரவை வழங்கி தமிழ்த் தேசியத்தைப் பாதுகாத்துள்ளதுடன், தமிழர் வாக்குகளைப் பெற்றுக் கொண்டே அவர்களை அழிக்கும், ஆக்கிரமிக்கும், அடையாளங்களை இல்லாதொழிக்கும், ஏமாற்றும் வேளைகளில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்திக்கும் பாடம் புகட்டியுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 3 ஆசனங்கள் வன்னி மாவட்டத்தில் 2 ஆசனங்கள் என யாருமே எதிர்பாராத வகையில், 5 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தி வடக்கு அம்மக்கள் தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு தம்முடன் இணைந்து
விட்டதாகக் கூறிக்கொண்டு நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வடக்கை வளைத்துப்போட ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் பட்டாளம் என வடக்கிற்குப் படையெடுத்தபோதும் அவர்களின் திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.
வடக்கில் தேசிய மக்கள் சக்தி அடைந்த படு தோல்விக்கு யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் 3 எம்.பிக்கள். அவர்களை வழிநடத்தும் அமைச்சர் ஆகியோரும் அண்மையில் அரசினால் வெளியிடப்பட்ட
வடக்கில் 6000 ஏக்கர் காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவிப்பும் பெரும் பங்கு வகித்துள்ளன. அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ‘மாற்றம்’ என்ற கோஷத்தை நம்பி வாக்களித்த தமிழ் இளையோர், அதன்பின்னர் தேசிய மக்கள் சக்தியினால் மெல்ல மெல்ல வெளிப்படுத்தப்பட்ட
இன வாதத்தைப் புரிந்து கொண்டமையும் அரசின் இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம்.தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களினால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் அவர்கள் அடைந்த
படுதோல்விக்கான காரணங்களை மட்டும் இந்த பத்தியில் பார்ப்போம்.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரங்களின் போது,‘‘அன்பான வாக்காளரே... மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.
யாழ்ப்பாண கல்விச் சமூகம்’’ என்று யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், யாழ். மாவட்ட வாக்காளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் செய்த வரலாற்று தவறையும் அதன் விளைவால் யாழ். சமூகம் எதிர்கொள்ளும்
அவமானங்கள்,அசிங்கங்கள்,கேலி ,கிண்டல்களின் வேதனைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.இந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் யாரெனத் தெரியாதவர்களல்ல.
இது ஒரு தேர்தல் கால சுவரொட்டிகளாக இருந்ததால் இதன் பின்னணியில் இருப்பது அரசியலா அல்லது உண்மையில் யாழ். மக்களின் ஆதங்கமா என்பது ஒருபுறமிருக்க மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை இவ்வாறு விமர்சிப்பது
தவறானதாக இருந்தாலும், மேற்குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தமிழ் மக்களைக் குறிப்பாக கற்றோர் சமூகம் என இன, மத வேறுபாடின்றி போற்றப்படும் யாழ். மக்களைத் தலைகுனியவும் வேதனைப்படவும் வெட்கப்படவும் வைத்ததன் விளைவே இந்த சுவரொட்டிகள் என்றே கருதப்படுகின்றது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திலிருந்து 6 எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் கருணநாதன் இளங்குமரன் (32,102 வாக்குகள். இவர் தேர்தல் அரசியலுக்கு வர முன்னர் மக்கள் விடுதலை முன்னணியிலும் அதன் தொழிற்சங்க இயக்கத்திலும் பங்கெடுத்து வந்துள்ளார்)
டொக்டர் சிறீபவானந்தராஜா சண்முகநாதன் (20,430 வாக்குகள்), ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (17,579வாக்குகள். களனிப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர், பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார்)
ஆகியோர் தேசிய மக்கள் சக்தியிலிருந்தும் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் (20,487 வாக்குகள்) சுயேச்சை குழு 17இல் ஊசி சின்னத்திலும் சிவஞானம் சிறீதரன் (32,833 வாக்குகள்) தமிழரசு கட்சியிலிருந்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (15,135 வாக்குகள்) அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்தும் தெரிவானார்கள்.
இவர்களில் யார் மூவர் கோமாளிகள் என்பதும் யார் பைத்தியம் என்பதும் நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அந்த நால்வருமே தமது கோமாளித்தனமான, பைத்தியக்காரத்தனமான பாராளுமன்ற பேச்சுக்கள், ஒருங்கிணைப்புக்குழுக்கூட்ட அடாவடிகள், அசிங்கங்கள் தொலைக்காட்சி விவாதங்கள், ஊடகங்களுக்கான கருத்துக்கள். அள்ளிவிடும் பொய்கள், வெளிவிடும் தவறான புள்ளி விபரங்கள், சேறு பூசல்கள், சண்டித்தனங்கள் என தங்களில் யார் கோமாளிகள், யார் பைத்தியம் என்பதனை தாமாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் பொது வெளிகளில், ஊடக கருத்துக் கூறல்களில் இலங்கையின் சனத் தொகை இரண்டரை இலட்சம் பேர் (இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 ), விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
(2001ஆம் ஆண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது) ஏழாலைக்குள்தான் யாழ்ப்பாணம் உள்ளது, வடக்கில் காணிகள் அரசுடைமையாக்குவது தொடர்பான வர்த்தமானி வெளிவந்துள்ளது என்பது பொய் (அரசினால் அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டு, அது ஊடகங்களில் வெளிவந்த பின்னர்) என்ற கோமாளித்தனமான கருத்துக்களை வெளியிட்டு
தனக்கு கணக்குதான் தெரியாது என்றால், புவியியலும் தெரியாது, பொது அறிவும் கிடையாது என்பதனை நிரூபித்து வருகின்றார். அதுமட்டுமன்றி, பொது இடங்களில், படித்தவர்கள் அதிகமுள்ள கூட்டங்களில் கூட இவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறும்
கருத்துக்கள், சக எம்.பிக்களுடன் வாதிடும் போது, கூறும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்கள் ஆக்ரோஷமாக வாதிடுகின்றேன் என தலைமைக்குக் காட்டுவதற்காக இவர் வாய்க்கு வந்தபடி பேசும் பேச்சுக்கள் இவரை ஒரு கோமாளியாகவே அடையாளப்படுத்துகின்றன.
இவரின் இவ்வாறான கோமாளித்தனமான செயற்பாடுகளினால் அவரின் கட்சியினை சேர்ந்த ஏனைய அரசியலும் தெரியாத, பேச்சாற்றல்களும், செயற்பாடுகளும் இல்லாத அப்பாவி மக்கள் பிரதிநிதிகளும் கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் வசைபாடல்களுக்குள்ளாகியுள்ளனர்.
அதன் விளைவாகவே மூன்று கோமாளிகள் என்ற பட்டத்தை இவர்கள் பெற்றுள்ளனர். இவர்கள் பொது வெளிகளில்தான்
இவ்வாறு என்றால் பாராளுமன்றத்தில் கூட ‘பேசா மடந்தை’ களாகவே இருக்கின்றனர்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஒவ்வொரு எம்.பிக்களின் செயற்பாடுகள் பட்டியலில் இவர்களில் ஒருவர் 134ஆவது இடத்தையும் அடுத்தவர் 207ஆவது இடத்தையும் இன்னுமொருவர் 210ஆவது இடத்தையும் பெற்றுள்ளதன் மூலம் இவர்கள் பாராளுமன்றத்தில் பிரயோசனம் அற்றவர்கள் என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
சரி இவர்கள்தான் கோமாளிகள் போல் செயற்படுகின்றார்கள் என்றால், இவர்களைக் கட்டுப்படுத்தும், வழிநடத்தும் பொறுப்பில் யாழில் உள்ளவரோ ‘நானும் ரவுடி’ தான் என்கின்றார். இந்நாட்டின் முன்னாள் போராளிகளின் கனவை தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால் நிறைவேற்ற முடியாது.
போராளிகளின் அர்ப்பணிப்புக்கு அவர்களால் அருகில்கூட வரமுடியாது. ஆனால், போராளிகள் கண்ட கனவை (தமிழீழம்-தனிநாடு) நனவாக்குவதற்குரிய வேலையை நாம் செய்கின்றோம். இயக்கங்கள் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் நாம் என்று பிதற்றுகின்றார்.
வெற்றியை (இறங்குதுறை) ‘ஜட்டி’ என்கின்றார். பாராளுமன்றத்தில் யாழ் எம்.பியை ‘நாய்’ என்கின்றார், கரடி என்கின்றார். பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைத் தனது உதவியாளரைக் கொண்டு தாக்குகின்றார்.
சண்டித்தன அரசியல் செய்கின்றார்.
தமக்குள் முட்டிமோதும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குப் பாடம் படிப்பிக்கின்றோம் என்றவகையில், கற்றறிந்த சமூகமான யாழ். சமூகத்தினால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளினதும் ‘மாற்றம்’ என்ற கோஷத்தினுள் மூழ்கிப்போன,
தமிழர் போராட்ட வரலாற்றையும் சிங்களக் கட்சிகளினதும் சிங்களத் தலைவர்களினதும் தமிழருக்கு எதிரான இனவாதங்களையும் தமிழின அழிப்புக்கள், ஆக்கிரமிப்புக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத யாழ். இளைஞர், யுவதிகளின் தவறான தெரிவுகளினாலுமே
‘‘அன்பான வாக்காளரே ...மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் . இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம் -யாழ்ப்பாண கல்விச் சமூகம்’’ என்ற சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்துச் சுவர்களை ஆக்கிரமிக்கக் காரணம்.
இவ்வாறான நிலையில்தான் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) என்ற தமிழர் விரோத, இனவாத கட்சியின் பினாமியான தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகத்தை அறியாது
மாற்றத்தை நம்பி பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களித்த
தமிழ் இளையோர் கடந்த சில மாத ஆட்சியிலேயே ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தியின் இனவாத முகத்தையும் அவர்களின் யாழ். மாவட்ட
பிரதிநிதிகளின் கோமாளித்தனங்களையும் அறிந்து கொண்டதன் பிரதிபலிப்பே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் தேசிய மக்கள் சக்தி அடைந்த
படுதோல்வி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago