2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் விளையாடிய எதிர்க்கட்சிகள்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

நவம்பர் 26ஆம் திகதி முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் பெய்த பெரு மழையை அடுத்து, முன்னொரு போதும் இல்லாதவாறு பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகக் கடந்த திங்கட்கிழமை வரை 635 பேர் உயிரிழந்து மேலும் 192 பேர் காணாமற்போயுள்ளனர்.

அரசினதும் பொது மக்களினதும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் இன்னமும் மதிப்பிடப்படாத போதும் அது ஒன்றரை இலட்சம் கோடி ரூபாவுக்கு அதிகமாகும் என சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. விவசாயம், வர்த்தகம் கடற்றொழில் மற்றும் போக்குவரத்து போன்ற சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள சேதத்தைப் பார்க்கிலும் அவற்றால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு வரப் போகும் காலத்தில் நாட்டை மிக மோசமாகப் பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் நாட்டில் எதிர்க்கட்சிகளின் நடத்தை கேள்விக்குரியதாகவே தெரிகிறது. இலங்கையில் அரசியலில் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான். ஆயினும், இந்த மாபெரும் அனர்த்தத்தோடு, எதிர்க்கட்சிகள் காட்டிய நெறிமுறையற்றத் தன்மை மிகவும் மோசமானதாகும்.

இந்த அனர்த்தத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்பதிலும் மீட்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் எப்போதும் மந்த கதியில் இயங்கும் அரச இயந்திரத்தை வழி நடத்த அரசாங்கம் பெரு முயற்சியை மேற்கொள்ளும்போது, இந்த அனர்த்தத்துக்குக் கடந்த வருடம் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே காரணம் என்று நிரூபிப்பதில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் முழு மூச்சாக ஈடுபட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறான பாரியதோர் அனர்த்தம் ஏற்படப் போவதாக காலநிலைத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே அறிவித்து இருந்தும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீரை முன்கூட்டியே வெளியேற்றியிருந்தால் இவ்வளவு பாரியதோர் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு இருக்காது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

நவம்பர் மாதம் 12ஆம் திகதி காலநிலை அவதான நிலையம் இந்த எச்சரிக்கையை விடுத்ததாகவே அவர்கள் கூறுகின்றனர். ஆயினும், இந்நிலையம், அவ்வாறானதேர் எச்சரிக்கையை 12ஆம் திகதி விடுக்கவில்லை என்றும் அவ்வாறான எச்சரிக்கை அறிக்கையொன்று இருந்தால், சபையில் சமர்ப்பிக்குமாறும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் கூறினார்.

எதிர்க்கட்சிகள் அவ்வாறானதோர் உத்தியோகபூர்வ அறிக்கையை இது வரை சமர்ப்பிக்கவில்லை.காலநிலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க நவம்பர் 12ஆம் திகதி தனியார் தொலைக்காட்சியொன்றில் நடத்திய நேர்காணல் ஒன்றின்போது, தெரிவித்த கருத்தையே எதிர்க்கட்சிகள் காலநிலை திணைக்களம் முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டுகின்றன.

எனினும், அவர் அதில் இவ்வாறான மாபெரும் விபத்தொன்றைப் பற்றி 
எச்சரிக்கை விடுக்கவில்லை.அப்போதைய நிலைமையில், மழை குறையும் அறிகுறியே தென்படுவதாகவும் ஆனால், தற்போது வளிமண்டலத்தில் காணப்படும் கொந்தளிப்பு அதிகரித்தால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகலாம் என்றும் எனினும், அதைப் புயல் காற்றாகத் தாம் குறிப்பிடப் போவதில்லை என்றுமே அவர் கூறினார்.

இறுதியில் அவரது கருத்தில் தாம் கிரகித்துக்கொண்டதை அத்தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் இவ்வாறு அவரிடம் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
அதாவது, தற்போதைய எதிர்வு கூறல்களின் படி மழை குறையலாம், அதேவேளை, வளிமண்டலத்தின் கொந்தளிப்பு அதிகரித்தால் நிலைமை மாறலாம்.”

இந்த உரையாடலின் படி நாடு அனுபவித்த படி பாரியதோர் புயல் காற்றைப் பற்றியோ அதனைத் தொடர்ந்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைப் பற்றியோ எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

நவம்பர் 25ஆம் திகதியே காலநிலைத் திணைக்களம் புயல் காற்று, மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைப் பற்றி எச்சரிக்கை விடுத்தது. புயல் காற்றின் பெயர் ‘டிட்வா’ என்றும் அறிவிக்கப்பட்டது. ஆறுகளின் பள்ளத்தாக்குகளில் வாழ்வோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.

மண்சரிவு ஏற்படும் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சில பிரதேசங்களில் 200 மில்லி மீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டது. எனினும், நாட்டில் சில பகுதிகளில் காணப்பட்டதைப் போல் 400, 500 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்படவில்லை.

நவம்பர் 27ஆம் திகதி சில ஆறுகள் பெருக்கெடுத்தன. களனி கங்கையின் பள்ளத்தாக்கில் வெள்ள அறிகுறிகள் காணப்படவே ஆற்றுப் பள்ளத்தாக்கில் மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நிலைமையைப் பற்றிக் கலந்துரையாடினார்.

அவ்வாறாயின் எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல் எப்போது முன்கூட்டியே நீர்த்தேக்கங்களின் நிலை வெளியேற்றியிருக்க வேண்டும்? அவர்களுக்கு அது தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவித்து இருக்க வேண்டும். மேற்படி கூட்டத்தின்போது, ஜனாதிபதியிடமும் அதனை அறிவித்து இருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் முன்கூட்டியே நீரை வெளியேற்றியிருக்கலாம் என்று டிசெம்பர் மாதம் 1ஆம் திகதியே பாராளுமன்றத்தில் கூறினார்கள். அவர்கள் கூறுவதைப் போல் நவம்பர் 12ஆம் திகதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தால், அன்று முதல் டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரை வரவு-செலவுத் திட்ட விவாதத்துக்காக பாராளுமன்றம் கூடியிருந்தும் அவர்கள் அதனை பாராளுமன்றத்திலாவது கூறவில்லை.

உண்மையிலேயே அவர்கள் கூறுவதைப் போல் நவம்பர் 12ஆம் திகதி அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தும் அதனை பகிரங்கப்படுத்தி மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அழிவு இடம்பெற விட்டு அதன் மூலம் அரசியல் இலாபம் பெற அவர்கள் நினைத்திருக்கிறார்கள் என்று ஆளும் கட்சி இப்போது வாதிடலாம்.

2016ஆம் ஆண்டும் இதே போன்றதோர் பாரிய வெள்ள அனர்த்தம் களனிப் பள்ளத்தாக்கிலும் மாத்தறை மாவட்டத்திலும் ஏற்பட்டது. அப்போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கமொன்றே ஆட்சியிலிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியின் பலர் அவ்வரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது அவர்கள் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றி வெள்ளத்தைத் தடுத்திருக்கலாமே.

இம்முறை வெள்ளத்தினால் களனி பள்ளத்தாக்கில் வாழும் மக்களே மிக நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், நீர்த்தேக்கங்களின் நீர் அதற்கு முக்கிய காரணமாகவில்லை. அப்பிரதேசத்தில் வெள்ளம் வடிந்து செல்லும் வரையிலும் அப்பிரதேசத்துக்கு மேலால் உள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கமான மவுஸாகலை நீர்த்தேக்கம் திறந்துவிடப்படவில்லை.

இம்முறை மிகப் பெரும் உயிர்ச் சேதம் மண்சரிவுகளாலேயே ஏற்பட்டது. 
அதற்கு நீர்த்தேக்கங்களின் நீர் எவ்வகையிலும் காரணமாகவில்லை. அந்த வகையிலும், எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு அடிப்படையற்றதானது என்பது புலனாகிறது.

இந்த ‘டிட்வா’ புயல் காற்றினால் இலங்கை மட்டுமன்றி இநதோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் மட்டும் அதன் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாகும். அங்கு இடம்பெற்ற அனர்த்தத்தையும் நீர்த்தேக்கங்களின் நீரை முன்கூட்டியே வெளியேற்றித் தடுத்திருக்கலாம் என்று கூறலாமா?

இலங்கையில் நீர்த்தேக்கங்களின் நீரை முன்கூட்டியே வெளியேற்றியிருந்தால் இந்த அனர்த்தம் ஏற்படாது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? களனி பள்ளத்தாக்குக்கு நீர் வழங்கும் மிகப் பெரும் நீர்த்தேக்கமான மாவுஸாகலை நீர்த்தேக்கம் வெள்ளம் இடம்பெற்ற காலத்தில் திறக்கப்படாமல் இருந்துள்ளது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

காலநிலை திணைக்கள அதிகாரிகளும் நவம்பர் 12ஆம் திகதி மழை குறையலாம் சிலவேளை தாழமுக்க நிலை ஏற்படலாம் என்று முடிவான கருத்தைத் தெரிவிக்காத நிலையில், மோசமான நிலைமையே ஏற்படும் என்று நினைத்து நீர்த்தேக்கங்களைத் திறந்து விட்டு அதன் பின்னர் மழை குறைந்து மின் உற்பத்திக்கும் விவசாயத்துக்கும் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் அதனை எவ்வாறு விமர்சிக்கும்?

குறிப்பிட்டதோர் சந்தர்ப்பத்தில் நீர்த்தேக்கங்களில் எவ்வளவு நீர் இருக்க வேண்டும் எப்போது அவற்றிலிருந்து நீரை வெளியேற்ற வேண்டும் எவ்வளவ வெளியேற்ற வேண்டும் என்பவை அரசியல்வாதிகளால் தீர்மானிக்க முடியாது. அதற்காக நீர்ப்பாசன திணைக்களத்தில் அத்துறையைப் பற்றிய நிபுணத்துவ அறிவுள்ள அதிகாரிகள் இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அது அதன் பிரதான பொறுப்பாகும் ஆனால், ஆதாரமற்ற கருத்துக்களை முன்வைத்து மக்களைக் குழப்பக் கூடாது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கம் முறையாக நீர்த்தேக்கங்களைக் கையாளாத காரணத்தால் கம்பளையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெள்ளத்தால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றார்.

தற்போதைய தகவல்களின்படி, அங்கு நூறு பேராவது உயிரிழக்கவில்லை. இப்போது அந்த உறுப்பினர் தமது கூற்று நிரூபிக்கப்படுவதை விரும்புவாரா? நிராகரிக்கப்படுவதை விரும்புவாரா? இது அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வரும் அவசரத்தில் வெளியிடப்பட்ட நெறிமுறையற்ற கருத்தாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X