Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் பெரியளவில் களைகட்டவில்லை என்ற தோற்றப்பாடு ஏற்பட்டிருந்த போதும், வாக்களிப்பு தினத்தை நெருங்கி விட்டோம். தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது.
தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ‘குட்டித் தேர்தல்’ என்று இந்தத் தேர்தல் அழைக்கப்பட்டாலும் இதன் முக்கியத்துவத்தை, இதன் பின்னாலுள்ள அரசியலை, எதிர்கால தேசிய அரசியல் ஆளுகையில் இது எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும் என்பதைக் கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று மக்கள் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
ஏந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இயல்பாகவே, சிங்கள மக்களின் நலன்களை அந்த ஆட்சியாளர்கள் கவனித்துக் கொள்வார்கள். சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல்லின நாடு என்பதால் அது தானாகவே நடந்தேறி விடும். ஆனால், ஏனைய சமூகங்களின் நிலை இதிலிருந்தும் மாறுபட்டது.
முஸ்லிம்களும். தமிழர்களும் அதேபோன்று மலையக மக்களும் இந்தத் தேர்தல் எவ்வாறான சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை இப்போதே உணர்ந்து கொண்டு, தாங்கள் யாருக்கு புள்ளடியிடுவது என்பதைத் தீர்க்கமாக முடிவெடுப்பது அவசியம்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்ற காலங்களை விட நாட்டில் இப்போது ஒரு ஸ்திரமான நிலை இருப்பதான தோற்றப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. நாட்டு நிலைவரம் காரணமாக:, அவ்விரு இரு தேர்தல்களையும் எதிர்கொள்வதற்கான மனநிலை குறைவாக இருந்தாலும், ஜனாதிபதி மற்றும் ஆட்சி மாற்றத்தை மக்கள் வெகுவாக அவாவி நின்றனர் எனலாம்.
ஆனால், அந்தத் தேர்தல்களில் மக்கள் காட்டிய ஆர்வத்தை விட ஒரு சதவீதமாவது குறைந்த ஆர்வத்தை, ஈடுபாட்டையே உள்ளூராட்சித் தேர்தல்களில் வெளிப்படுத்துவதைக் காண முடிகின்றது. இதனைப் பல அவதானிகளும் அமைப்புக்களும் கூட சுட்டிக்காட்டியுள்ளன. இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.
வேட்புமனுக்கள் நிராகரிப்பு, அதற்கெதிரான மனுக்கள் மீதான நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகப் பல வாரங்கள் சென்றமை, சிறிய தேர்தல் என்பதால் பெரிய அரசியல்வாதிகள் களத்தில் இறங்கிப் பரபரப்பை ஏற்படுத்தாமை, தேர்தல் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கி விடுகின்றமை, தேர்தல் பிரசாரத்தின் முக்கியத்துவம் அறியாத வேட்பாளர்கள் எனப் பல உள்ளன.
ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட கட்சி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் பெரிதாக என்ன நடந்து விடப் போகின்றது என்ற ஒரு எண்ணமும் குறிப்பாகப் பல பகுதிகளில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்களிடையே ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாகத் தெரிகின்றது. இது ஒரு ஆரோக்கியமற்ற நிலைப்பாடாகும்.
உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதித்துவம் தான் நேரிடையாக மக்களுக்கு நெருக்கமான அரசியல் பிரதிநிதித்துவமாக இருக்கப் போகின்றது. ஜனாதிபதியை, எம்.பியை விட மாநகர, நகர, பிரதேச சபையின் உறுப்பினர்தான் மக்களுக்கு நெருக்கமான ஒருவராக இருக்கப் போகின்றார். இது ஒவ்வொரு வீடுகளிலும் தாக்கம் செலுத்தும்.
அதுமட்டுமன்றி, நாம் முன்னைய பத்திகளில் குறிப்பிட்டதைப் போல, இலங்கை அரசியலின் கடந்தகால பதிவுகளின் அடிப்படையில் நோக்கும் போது, மேல்மட்ட அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான கீழ்மட்ட அரசியல் மேடையாக உள்ளூராட்சி சபை பிரதிநிதித்துவங்கள் அமைகின்றன.
அநேக சந்தர்ப்பங்களில், உள்ளூராட்சி சபைகளில் இருந்துதான் மாகாண சபைகளுக்கும் பிறகு பாராளுமன்றத்திற்கும் செல்வதற்காகப் போட்டியிடுகின்றனர். எனவே, இது ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் ஆகும்.
உள்ளூராட்சி சபைகளுக்கு சரியான உறுப்பினர்களைத் தெரிவு செய்யவில்லை என்றால், அடுத்த 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மாகாண சபைகளுக்காகவும் நாடாளுமன்றத்திற்காகவும் நல்ல அரசியல்வாதிகளைப் புடம்போட முடியாமல் போய்விடும் என்பதை மறந்து விடக் கூடாது.
ஆகவே, சிறுபான்மைச் சமூகங்கள் சில விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழ்ச் சமூகத்தில் ஓரளவுக்கு தெளிவூட்டல் நடைபெறுகின்றது. ஆனால், முஸ்லிம் சமூகத்திலும் மலையக மக்கள் விடயத்திலும் அந்த நிலைமையைக் காண முடியாதுள்ளது.
சிறுபான்மைச் சமூகங்கள் பொருத்தமான, மிகச் சிறந்த ஒப்பீட்டுத் தெரிவாகக் கருதப்படும் வேட்பாளர்களுக்கு, கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற அதேநேரத்தில், தமக்கான சொந்த அரசியலின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட தனித்துவ முஸ்லிம் அரசியலை, அதன் தலைவர்களும் தளபதிகளும் நாசமாக்கியிருக்கின்றார்கள் என்பதும், அதனால் மக்கள் வெறுப்படைந்திருக்கின்றார்கள் என்பதும் பட்டவர்த்தனமானது.
இந்நிலையில், இதனை சரிப்படுத்துவதற்கான அல்லது மக்கள் விரும்பிய மாற்றத்தை இத் தேர்தலிலாவது கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட முஸ்லிம் கட்சிகள் மிகக் குறைவாகவே எடுத்திருக்கின்றன.
உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சி எம்.பிக்கள், வேட்பாளர்களை களமிறக்கினால் அவர்கள் எதையாவது பேசி குழப்பி விடலாம் என்று எண்ணி ஜனாதிபதியே நேரடியாகக் களமிறங்கியிருக்கின்றார் என்று சொல்வதை விட, இந்த தேர்தலின் முக்கியத்துவம் உணர்ந்து பிராசாரக் களத்தில் அவர் இறங்கியுள்ளார் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது.
ஆனால், இந்த தாற்பரியத்தை உணர்ந்து முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் வியூகங்களை வகுத்ததாகவோ, நல்ல வேட்பாளர்களை நூறு சதவீதம் எல்லா வட்டாரங்களிலும் களமிறக்கியுள்ளதாகவோ கருத முடியவில்லை.
ஆனால், இதனையெல்லாம் மீறி ஏனைய சிறுபான்மைச் சமூகங்களைப் போல முஸ்லிம் பொது மக்களுக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பிருக்கின்றது. தமக்கான சொந்த அரசியல் பற்றி தூரநோக்கோடு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் இன, மத பேதங்களுக்கு அப்பால், தமது வட்டாரத்தில் போட்டியிடுகின்ற பொருத்தமான ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். இங்கு முஸ்லிம் வாக்காளராக அவர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது. அங்கு வாழும் ஏனைய சமூகங்களின் மக்களுக்கு ஒத்திசைவான முடிவை எடுப்பதே நல்லது.
ஆனால், வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் இதற்கப்பாலான சில கடப்பாடுகளைக் கொண்டுள்ளனர். ஒரு ஆபத்துக்கு உதவுவதற்காகவாவது தங்களுக்கான சொந்த அரசியல் கட்டமைப்பைத் தக்கவைப்பது அவசியம் என்று முஸ்லிம் சமூகம் கருதுமாயின், அதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.
இதுபோன்ற கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்தில் கடந்த சில நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்பதும், முஸ்லிம் சமூக அமைப்புக்கள் இது விடயத்தில் யாரையோ பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு நழுவல் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்பதும், ஒருவித மனக் கிலேசத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
மக்கள் வாக்களிக்கும் போது தமது வட்டாரத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சியைச் சரிவர ஆராய வேண்டும். ஒரு வேட்பாளர் என்ன கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்றார்? அவரது பின்னணி என்ன? கடந்தகாலத்தில் அவர் இந்த சமூகத்திற்கு என்ன செய்துள்ளார்?
என்று பார்க்க வேண்டும்.
உங்களது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், சமூகம் என்ற பார்வையில்
இதனைச் சிந்திக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் முஸ்லிம் கட்சிகளால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் உண்மையிலேயே பொருத்தமற்றவர் என கருதப்படும் பட்சத்தில், மறுபுறத்தில் பெரும்பான்மைக் கட்சி ஒன்றில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் பொருத்தமானவராக, கட்சி அரசியலை விட சமூக அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பவராக நம்பப்பட்டால், அவர்தான் ஒப்பீட்டுத் தெரிவாக இருப்பார்.
ஒரு குறிப்பிட்ட உள்ளூராட்சி சபையில் முஸ்லிம் தனித்துவ கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடாதவராக, தடுக்கப்பட்ட தொழில் பின்னணியைக் கொண்டிராதவராக, குறுக்கு வழியில் பணம் உழைப்பவராக அன்றி, சமூக நலன் பற்றிச் சிந்திப்பவராகச் சிறப்பானவராக, மக்களுக்குச் சேவை செய்பவராக, நம்பிக்கைக்குரியவராக இருந்தால், அவருக்கு வாக்களிக்காமல் விடுவதன் பின்விளைவுகள் குறித்து பலமுறை சிந்திக்க மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.
ஒருசில வட்டாரங்களில் எந்தக் கட்சியாலும் நிறுத்தப்பட்டுள்ள எந்த வேட்பாளரும் பொருத்தமில்லை என்று, ஆய்வுத்திறன் கொண்ட வாக்காளர் ஒருவர் கருதலாம். ஆனால், அதற்காக வாக்களிக்காமல் விட்டு விடக் கூடாது.
ஏனைய தேர்தல்களை விட ஒரு வகையில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. குறிப்பாக, முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை சமூகத்திற்கு உகந்ததாக மீளப் புனரமைக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் நினைக்கின்றனர் என்றால்
அதற்கான களமும் இதுவாகும்.
எனவே, எல்லா சமூகங்களைச் சேர்ந்த மக்களும் கட்டாயம் இத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணத்தை தம்முடன் கொண்டு செல்வது அவசியம்.
வாக்குச் சீட்டில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள், சின்னங்கள் மாத்திரமே இருக்கும். விருப்பு இலக்கங்கள் இருக்காது.
எனவே, நீங்கள் விரும்பிய கட்சிக்கு, சுயேச்சைக் குழுவுக்கு எதிரே உள்ள
கூட்டில் சரியாக புள்ளடியிடுவதன் மூலம், அந்தக் கட்சியில் உங்களது வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
எனவே, தமது உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரம், வட்டாரங்களின் பிரதிநிதித்துவம் யார் கையில் இருப்பது நீண்டகால அடிப்படையில் ஒரு சமூகமாக நமக்கு நல்லது என்பதை ஆற அமர சிந்தித்து முஸ்லிம்களும் ஏனைய சமூகங்களும் வாக்களித்தால் போதுமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago