2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

“வாக்களித்த பிறகு: உள்ளூராட்சி மன்றங்களில் ஏ(மா)ற்றமா?”

J.A. George   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜே.ஏ.ஜோர்ஜ்

“எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் தம்பி, நானும் காலம் காலமாக இதனை பார்த்து வருகின்றேன். அவர்கள் தேர்தலுக்கு முன்னதாக சொல்வது ஒன்று தேர்லுக்கு பின்னர் செய்வது ஒன்று, இதை பற்றி கதைத்து வேலையில்லை” - ஒரு 60 வயது முதியவரின் ஆதங்கமே இது.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிலுள்ள லின்போட் தோட்டத்துக்கு செல்லும் பாதை வருடக்கணக்கில் செப்பனிடப்பாடாதவாறு உள்ளதுடன், குறித்த பாதையை தார் வீதியாக மாற்றியமைத்து தருமாறு மலையகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எந்தவோர் அரசியல்வாதியும் அதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

குறித்த வீதியில் உள்ள பாலமொன்று சில வருடங்களுக்கு முன்னர் புனரமைக்கப்பட்ட போது, அந்த வீதியும் புனரமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்ட போதும், இதுவரை அதனை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

தேர்தல்கள் காலங்களில் அங்கு வரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாதையை புனரமைப்பதாக வாக்குறுதி வழங்குவதும், பின்னர் அதனை மறந்துவிடுவதும் காலம் காலமாக நடைபெற்றுவருவதுடன், பாதை சீரின்மை காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் பயணிப்பதில் பெரும் சிரமம் உள்ளதுடன், அந்தப் பாதையின் ஊடாக பஸ் போக்குவரத்தும் இல்லை என்பதால், முச்சக்கரவண்டியில் பயணம் செய்ய ஒன்று – இரண்டு கிலோமீற்றர் பயணிக்க 400 ரூபாய் கட்டணமாக அறவிடப்படுவதால், போக்குவரத்துக்கு அதிக பணத்தை செலவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்வதாக தோட்டத் தொழிலாளியான கணேசன் தெரிவிக்கின்றார்.

“நாட்டில் இப்போது ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. இதற்கு முன்னர் எமது வாக்குகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதையை புனரமைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் அது நடக்கவில்லை. புதிய அரசாங்கத்தின் ஊடாகவாவது அதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இருந்தாலும், ஐந்து வருங்களில் எமது நம்பிக்கை வெறும் நம்பிக்கையாகவே இருந்து விடுமோ என்று தெரியவில்லை” என்கிறார் மோகன்.

இலங்கையில் 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு, இன்று மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இத்தேர்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவற்றில் இருந்து மீள் எழுச்சிப்பெற்று வந்த நமது நாட்டில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்றது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா? உள்ளூராட்சி உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை சுயாதீனமாக நிறைவேற்றுகிறார்களா, அல்லது கட்சி அரசியலின் கீழ் செயல்படுகிறார்களா?  என்ற கேள்விகளை முன்வைத்தால். அதற்கு இன்னும் சில காலம் தேவை என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

இலங்கையில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டதுடன், பெரும்பாலான உள்ளூராட்சி  மன்றங்களில் ஓர் அரசியல் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றிராத நிலையொன்றை காணமுடிந்தது.

அத்துடன், உள்ளுராட்சி தேர்தல்கள் நிறைவடைந்த நிலையிலும், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கப்பட்டு நிர்வாக நடவடிக்கைகள் தொடங்குவதற்கு சுமார் ஒரு மாதத்துக்கும் அதிக காலம் இழுபறி நிலையொன்று காணப்பட்டிருந்தது.  
தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக எதிர் பிரசாரத்தை மேற்கொண்ட அரசியல் கட்சிகள் வேறு வழியின்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டன.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை வெற்றிகொண்ட தேசிய மக்கள் சக்தியும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தச் சுழலில் சிக்கிகொண்டது. ஏனென்றால் கொள்கை பிடிப்புடன் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேரமாட்டோம் எனக்கூறி வந்த ஆளும் தேசிய மக்கள் சக்தி, ஏனைய கட்சிகளுடன் வாய்மூல ஒப்பந்தம் செய்து  பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றியதை அவதானிக்க முடிந்தது.

மலையகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகள் மக்களை ஏமாற்றி வந்த நிலையில், அந்தக் கட்சிகளை கடந்த தேர்தல்களில் மக்கள் புறக்கணித்தனர். இவ்வாறான நிலையில், மக்கள் புறக்கணித்த கட்சிகளுடன் ஆளும் தேசிய மக்கள் சக்தி, கைகோர்த்து சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைத்தமை மலையக மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
நாட்டில் இருவரை ஆட்சியில் இருந்தவர்கள் இலஞ்சம், ஊழல், மோசடி செய்ததாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது இறுக்கமான கொள்கையை கைவிட நேரிட்டது. 

மலையகத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, எதிரணியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏழு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளதுடன், சில உள்ளூராட்சி மன்றங்களின் துணை தவிசாளர் பதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைமையில், தமது பகுதியில் பாரிய அபிவிருத்தி மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மலையக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பில் தொடர்ந்து தனது உரைகளில் குறிப்பிடுவதுடன், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மலையக மக்களுக்கு காணி, வீடு மற்றும் பொது வசதிகளை பெற்றுக்கொடுத்து, அவர்களுக்கு காணி உட்பட உரிமைகளை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்திலும் மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்பதாக மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பிரகடனமொன்றையே வெளியிட்டு இருந்தது. 

இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் பிரதேச சபைகள் மூலமாக தோட்டக் குடியிருப்புகளில்  பல அடிப்படை அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

வருடம் முழுவதும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சியை எதிர்நோக்கும் மலையத்தில் உள்ள பெருந்தோட்டங்களின் பிரதான வீதிகள் இன்றும் சேறும் சகதியுமாக மழை பெய்யும் நாட்களில் மக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையிலேயே உள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாது நோயாளர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொழும்பு உள்ளிட்ட நகரப்புறங்களில் முச்சக்கரவண்களுக்கு கிலோமீற்றருக்கு 100 ரூபாய் கட்டணமாக அறவிடப்படும் நிலையில், மலையக பெருந்தோட்டங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பிரதான காரணமாக பாதை சீரின்மையை சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றன.

காணிப் பிரச்சினையும் வீட்டுப் பிரச்சினையும் உட்கட்டமைப்பு பிரச்சினையும் மலையக மக்களின் தீராத பிரச்சினையாகத் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சேவைகளை வழங்கும் பிரதேச சபையின் தவிசாளராக, உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தாம் நினைத்தால் தமக்குக் கிடைக்கும் நிதியைக் கொண்டு, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சிறு வேலைத்திட்டங்களைத் காத்திரமான முறையில் முன்னெடுக்க முடியும்.

ஏனென்றால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்போம் என்ற ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில், கடந்த ஆட்சிகளின் போது மேற்கொள்ளப்பட்டது போன்று இம்முறை பிரதேச சபைகளில் ஊழல்களை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு ஊழல் நடைபெற்றால் தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையில் அது கைவைத்துவிடக்கூடும்.

கடந்த தேர்தலில் புதிய முகங்களுக்கு வாக்களித்த இளைஞர்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னரும் காட்சி மாற்றம் தாமதமாகுவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக ஊடகங்களின் ஊடாக அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதை காணமுடிகின்றது. 

இதேவேளை, பழைய அரசியல் கட்டமைப்புகளில் நம்பிக்கை வைத்திருக்கும் மூத்தவர்கள், கட்சி உத்தரவுகளுக்கு அடிபணிந்து செயல்படும் உறுப்பினர்களால் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், "மாற்றம் காலப்போக்கில் வரும்" என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இத்தேர்தலில் பெண்களுக்கு 25% பிரதிநிதித்துவம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், உள்ளூராட்சி மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

தேர்தலில் வாக்களித்து விட்டோம் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. இனி நமக்கென்ன என்று இருக்காமல், வாக்காளர்கள் என்ற ரீதியில், உள்ளூராட்சி மன்றங்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் கண்டறிய வேண்டும். அத்துடன், இளைஞர்கள் அரசியலில் தீவிரமாக பங்கேற்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த சமூக அரசியல் மாற்றங்களை காண முடியும்.

அத்துடன், உள்ளூர் தேவைகள் கட்சி நலன்களை கருத்தில் கொண்டு முன்னெடுக்காமல் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், உள்ளூராட்சி செயல்பாடுகளை கண்காணித்து அது தொடர்பான பக்கசார்பற்ற தகவல்களை  ஊடகங்கள் தொடர்ந்து வெளிக்கொண்டு வர வேண்டும். அப்போதுதான், அரசியலில் மக்களின் பங்களிப்புத் தொடர்ந்து அதிகரிக்கும். இல்லையென்றால், தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை மக்கள் மத்தியில் அதிகரித்து விடலாம்.

இலங்கையில் புதிதாக தெரிவான உள்ளூராட்சி மன்றங்கள், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அடுத்த தேர்தலில் மக்கள் மீண்டும் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது.

"வாக்கு என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, மாற்றத்தின் ஆயுதம்" – இந்த உணர்வை மக்கள் மீண்டும் நினைவுகூர வேண்டிய நேரம் இதுவாகும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X