2025 மே 08, வியாழக்கிழமை

விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 ஜூலை 04 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார்.   

முதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு. 

இரண்டாவது சந்தர்ப்பம், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன், தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக, கடந்த வருடம் தொடுத்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் மாகாண சபையினதும், முதலமைச்சரினதும் அதிகார எல்லை சம்பந்தப்பட்டது.   

விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சர் தன்னுடைய அதிகாரங்களுக்கு அப்பால் நின்று, உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார் என்று கூறப்பட்டிருந்தது.   

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு, அரச சேவைகள் ஆணைக்குழுவாலேயே உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். முதலமைச்சரினால் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தது.   

பா.டெனீஸ்வரன் தொடுத்த பதவி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம், முதலமைச்சரின் பதவி நீக்க உத்தரவு மீது, இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது. அத்தோடு, டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவும் மாகாண சபையின் அமைச்சரவை உறுப்பினராகவும் செயற்பட முடியும் என்றும் கூறியிருக்கின்றது.   

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகார எல்லைகள் தொடர்பில், நீதிமன்றங்களிலும், நீதிமன்றங்களுக்கு வெளியிலும் கடந்த முப்பது ஆண்டுகளில், பல தடவைகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.   

2009 மே 18க்குப் பின்னர், அரசியல் தீர்வு பற்றிய பேச்சுகள், 13ஆவது திருத்தத்தை ஓர் எல்லைக்கோடாக வரையறுத்துக்கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன.  இரா.சம்பந்தனும் இதையே அடிக்கடி மேடைகளில் கூறியும் வருகின்றார். 

அப்படியான நிலையில், சமஷ்டி பற்றிய நம்பிக்கைகளை மக்களிடம் விதைத்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், சட்ட ரீதியாகவும் அரசியல் அதிகார ரீதியாகவும் விடயங்களை எவ்வளவு தூரம் கையாண்டிருக்கின்றன என்றால், அது கேள்விக்குறியே.   

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய, இணைந்த வடக்கு- கிழக்கின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள், “வடக்கு மாகாண சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்து, நான்கு  ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அது எத்தனை நியதிச் சட்டங்களை இயற்றியிருக்கின்றது? நீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டவர்கள் இருக்கின்ற கூட்டமைப்பு, நியதிச் சட்டங்களை இயற்றி, அவற்றின் சட்ட எல்லைகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியிருந்தால், மாகாண சபைகள் சட்டத்தின் அதிகாரங்களின் அளவு தொடர்பில், இன்னும் இன்னும் தெளிவான பதில்களைப் பெற்றிருக்க முடியும்” என்றார்.   

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக் காலம், நிறைவடைவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், மாகாண சபையின் ஒவ்வோர் அமர்விலும், ஏதோவொரு தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு வந்திருப்பதைக் காண முடியும்.   

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எண்ணிக்கை ஐநூறை அண்மிக்கின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்து, விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவியேற்ற சில வாரங்களுக்குள்ளேயே நியமச் சட்டங்களை உருவாக்குவது சார்ந்து, கூட்டமைப்பின் தலைமையால், கொழும்பு சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி என்.செல்வக்குமரன் அணுகப்பட்டிருந்தார்.   

அவரும் நியதிச் சட்டங்களை வரைந்து, முதலமைச்சரிடம் கையளித்திருந்தார். ஆனால், அதன் பின்னர், நியதிச் சட்டங்களை இயற்றுவது சார்ந்த விடயங்கள் வடக்கு மாகாண சபையால் முன்னெடுக்கப்படவேயில்லை.   

அதைப் பற்றிய உரையாடல்கள் முதலமைச்சரினாலோ, அமைச்சர்களாலோ, மாகாண சபை உறுப்பினர்களாலோ கூட பெரியளவில் மேற்கொள்ளப்படவில்லை. மாகாண சபையின் அதிகார எல்லை சார்ந்த வரையறைகளை அடையாளப்படுத்துவதற்காகவாவது, நியதிச் சட்டங்களை இயற்றுங்கள் என்று ஊடகங்களும் புலமையாளர்களும் விடுத்த கோரிக்கைகளும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன.   

 இந்த நிலையில்தான், டெனீஸ்வரன் தொடுத்த வழக்கில் முதலமைச்சரின் உத்தரவு மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலும் ஊடகப் பரப்பிலும் விவாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தையோ, அதன் பிரகாரம் உருவான மாகாண சபைகளையோ, தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரக் கோரிக்கைகளுக்கான இறுதித் தீர்வாகக் கருதவில்லை.  

 ஆனால், சந்தர்ப்பம் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஓர் எல்லைக்கோடாக வரையறுத்து வைத்திருக்கின்றது. சமஷ்டி பற்றிய இலக்குகளை அடைவதற்கான முனைப்புகளை எல்லைக்கோட்டில் இருந்து பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கி செல்வதன் மூலமே சாத்தியப்படுத்த முடியும்.   

தற்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரனை தோற்கடிக்க, டெனீஸ்வரன் முயற்சிக்கின்றார் என்கிற உரையாடல் தொனியொன்று மேலெழுந்திருக்கின்றது. ஆனால், விடயம் ஆரம்பித்தது என்னவோ, விக்னேஸ்வரனிடம் இருந்துதான்.  

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை அடுத்து, கடந்த வருடம் முதலமைச்சரால் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையில், அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகியோர், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கூறப்பட்டது.   

ஆனால், அமைச்சர்களான ப. சத்தியலிங்கமும், பா.டெனீஸ்வரனும் முறைகேடுகளிலோ, அதிகார துஷ்பிரயோகங்களிலோ ஈடுபட்டதற்கான கட்டங்களைக் காண முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐங்கரநேசனையும் குருகுலராஜாவையும் இராஜினாமாச் செய்யுமாறு முதலமைச்சர் கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால், அவர் சத்தியலிங்கத்தையும் டெனீஸ்வரனையும் கூட இராஜினாமாச் செய்யுமாறு கோரினார்.   

குற்றச்சாட்டுகளோ, முறைகேடுகளோ நிரூபிக்கப்படாத தாங்கள் இருவரும், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் இழைத்த இரு அமைச்சர்களோடு சேர்ந்து, இராஜினாமாச் செய்தால், அது தமது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்கிற நோக்கில், இராஜினாமாச் செய்யக் கோரும் கோரிக்கையை, சத்தியலிங்கமும் டெனீஸ்வரனும் நிராகரித்தார்கள்.   

வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரின் அதிகார துஷ்பிரயோகங்கள் சார்ந்து, மாகாண அமைச்சரவை பொறுப்புக் கூற வேண்டுமாக இருந்தால், முதலமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேரும் இராஜினாமாச் செய்யலாம் என்கிற விடயமும் மேற்கொண்டு வரப்பட்டது. ஆனால், விக்னேஸ்வரன் அந்த விடயத்துக்கு உடன்படாத புள்ளியிலேயே, இராஜினாமாக் கோரிக்கையை சத்தியலிங்கமும் டெனீஸ்வரனும் தீர்க்கமாக நிராகரித்தார்கள்.   

 இதன்பின்னராக இழுபறியில், சத்தியலிங்கத்தையும் டெனீஸ்வரனையும் பதவி நீக்கியதாகத் தெரிவித்து, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கடிதமொன்று அனுப்பப்பட்டது. அதன்பின்னர், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள்.   

இந்த நிலையில்தான், டெனீஸ்வரன் தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். குற்றம் நிரூபிக்கப்படாத ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படியான நிலையில், அடிப்படை நீதியைப் பெற்றுக் கொள்ளும் தகுதி டெனீஸ்வரனுக்கு உண்டு. அதன் போக்கில் அவர் நீதிமன்றத்தினை நாடியதை தவறாகக் கருத முடியாது.   

ஆனால், இன்னொரு கட்டத்தில் விக்னேஸ்வரனின் தன்முனைப்பு (ஈகோ) மனநிலைக்கு எதிரான கட்டத்தை நீதிமன்றத்தினூடு நிகழ்த்த முடியும் என்று, தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் நினைத்திருக்காது என்று சொல்ல முடியாது.   

ஏனெனில், அடிப்படை நீதியையும் தனக்கான அதிகார வரம்பையும் அறியாது, விக்னேஸ்வரன் நடத்து கொள்ளும் போது, அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சார்ந்து, அவருக்கு எதிரான தரப்புகள் செயற்பட எத்தனிக்கும். அப்படியான கட்டத்தில், பெரும் இடர்நிலையொன்றை எதிர்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ முதலமைச்சர் தான்.   

 மாகாண அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்கிற நிலையில், பதவி நீக்கும் அதிகாரமும் அவருக்கே இருப்பதாகவே டெனீஸ்வரனின் வழக்கு விவாதங்களின் போது, சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது.

ஓய்வுபெற்ற நீதியரசராக விக்னேஸ்வரன் சட்ட அறிவின் கட்டங்களை அறிந்து, அவர் நடத்து கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர் புத்திக்கு வேலை கொடுக்காமல், தன்முனைப்பு மனநிலைக்கு இசைந்ததன் விளைவு, இன்றைக்கு இடைக்கால உத்தரவொன்றை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கின்றது.   

புதிய பயணத்தை (தனிப் பயணத்தை) ஆரம்பிக்கும் கட்டங்களைக் கண்டு நிற்கின்ற விக்னேஸ்வரனுக்கு, இதுவொரு பெரும் பின்னடைவு. ‘நீதியரசர்’ என்கிற அவரின் அடையாளத்தின் மீதான பெரும் கறை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X