Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
எஸ்.கருணாகரன் / 2017 நவம்பர் 28 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீண்டும் ஒரு குழப்பமான சூழலுக்குள் இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் சென்று கொண்டிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணிக்கும் மஹிந்த அணிக்குமிடையிலான பிரச்சினை மறுபடியும் தீவிரமாகி உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினை, எப்படி நாட்டின் அரசியலில் குழப்பங்களை உண்டாக்க முடியும்? என்று யாரும் கேட்கலாம். தற்போது நடந்து
கொண்டிருக்கும் ‘கலப்பாட்சி’ (ஐ.தே.க - சு.க கூட்டாட்சி) யைச் சிதைக்கக் கூடிய வெடிகுண்டாகவே உள்ளது, மஹிந்த அணி அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் அணி. அது தனக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்ததற்கு ஏற்றவாறு, உள்ளூராட்சி தேர்தல் வந்துள்ளது. எனவே, தனக்கான வாய்ப்பை அது பயன்படுத்த விளைகிறது.
எனவே, தொடரும் ஆட்சியானது, நெருக்கடிக்குள்ளாகும் என்றால், அது முன்னெடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அரசமைப்புத் திருத்தம், ஜனநாயக மேம்பாடு, பொருளாதாரத் திட்டங்கள் போன்ற அத்தனை வேலைகளும் கைவிடப்பட்டு விடும். அல்லது வேறு மாதிரி ஆகிவிடும். ஆகவே, எதிர்க்கட்சிகளின் கூட்டை, அதன் வீரியத்தை, இன்றைய நிலையில் குறைத்து மதிப்பிட முடியாதுள்ளது.
“ஐக்கிய தேசியக் கட்சியுடன் வைத்திருக்கும் கூட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்குப் பாதிப்பை உண்டாக்கும். ஐ.தே.கவின் சூழ்ச்சி வலைக்குள்ளிருந்து சு.கவைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதி (மைத்திரிபால சிறிசேன) ஐ.தே.க வுடன் செய்துள்ள உடன்படிக்கையைக் கைவிட வேண்டும். சுதந்திரக் கட்சியை மீள்நிலைப்படுத்திப் பலப்படுத்த வேண்டும்” என்று எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது ஒருவகையில் நடப்பிலுள்ள ஆட்சியை நெருக்கடிக்குள்ளாக்கும் தந்திரோபாயமாகும். ஆனால், இந்தக் கோரிக்கை தவிர்க்க முடியாத வகையில், எதிரணியினருக்கு அவசியமான ஒன்றாகவே உள்ளது. இதற்காகவே, சுதந்திரக் கட்சியைக் காப்பாற்ற வேண்டும், ஐ.தே.க கூட்டைக் கைவிட வேண்டும் என மஹிந்த அணியில் இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தொடர்ந்தும் எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
இது சுதந்திரக் கட்சியில், பலரிடத்திலும் ஒரு மெல்லிய பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. அதிலும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், சுதந்திரக் கட்சி பலமடைய வேண்டுமாக இருந்தால், அது தனக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சீராக்கி, மீளமைத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்சியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கருதுகிறார்கள். இல்லையெனில் ஐ.தே.கவுக்கும் பிற சக்திகளுக்கும் வாய்ப்பாகி விடும் என எச்சரிக்கிறார்கள்.
இந்த எச்சரிக்கை, ஏனெனில், சுதந்திரக் கட்சியின் முக்கிய முனைகளாக இன்றிருக்கும் மஹிந்தவும் மைத்திரியும் அதிகாரத்தின் உச்சத்தைத் தொட்டவர்கள். ஆகவே, அவர்கள் இதற்கு மேல் உச்சத்துக்குச் செல்ல முடியாது.
ஆனால், இவர்களுடன் மட்டுப்பட்டதல்ல கட்சி. அதில் அடுத்த நிலை உறுப்பினர்கள் எதிர்காலத்தில் உச்சங்களுக்குச் செல்ல வேண்டிய கனவுகளோடிருப்பவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள், சுதந்திரக்கட்சி பலமான ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர்கள்.
எனவே, அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்தே சிந்திக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் மைத்திரி, மஹிந்த என்பதற்கு அப்பால், கட்சியே முக்கியமானது. கட்சியின் கட்டுக்கோப்பும் பலமும் அதனுடைய செல்வாக்குமே அவர்களுடைய எதிர்காலத்துக்கு உதவும். ஆகவே, அவர்கள் இந்த இருவருக்காகவும் எதையும் விட்டுக் கொடுப்பார்கள் என்றில்லை.
ஆனால், தற்போதைய சூழலில் இந்த இருவரும் தவிர்க்க முடியாதவாறு வலுவானவர்களாக இருப்பதால், இவர்களை வைத்துக் கொண்டே கட்சியை வலுவாக்குவதற்கு முயலப்படுகிறது. ஓர் எல்லை வரையில் இந்தநிலை தொடரும். ஆகவேதான் (கட்சியின் கட்டுக்கோப்புக்காகவே) இத்தனை இழுபறிகளும் நடக்கின்றன.
இதனாலேயே எப்படியாவது சுதந்திரக் கட்சியை மறுபடியும் ஒருங்கிணைத்து ஓர் அணியாக்க வேண்டும் என்பது கட்சியின் பெரும்பாலானவர்களின் விருப்பமாகியுள்ளது.
இதன் விளைவாக, மைத்திரி தரப்புக்கும் மஹிந்த தரப்பினருக்குமிடையிலான பேச்சுகளும் சந்திப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னும் ஒன்றிணையக் கூடிய சாத்தியப்பாடுகள் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
இருந்தும் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. மஹிந்தவுக்கு இந்த நிலை ஒரு சாதகமான வாய்ப்பைக் கொடுத்துள்ளது. சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் தன்னுடைய செல்வாக்கைப் பலப்படுத்திக் கொள்வதற்கு அவர் முயற்சிக்கிறார்.
அதேவேளை, மைத்திரிக்கும் ரணிலுக்குமிடையிலான நெருக்கத்தைக் குறைப்பதற்கும் இது வழியேற்படுத்தும் என எதிர்பார்க்கிறார். ஆகவே, மஹிந்த ராஜபக்ஷ இதைத் தனக்குச் சாதகமாகவே கையாள முற்படுவார் என்பதில் சந்தேகமேயில்லை.
மறுபக்கத்தில் மைத்திரிபால சிறிசேனவும் இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கே முயற்சிப்பார். பலரும் கருதுவதைப்போல, மைத்திரிபால சிறிசேன ஒன்றும் சாதாரணமான அரசியல்வாதியல்ல.
விடயங்களை மிக மென்மையாகக் கையாளும் முறையினால், தனக்கு ஏற்படும், ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளைக் கடந்து செல்லும் வழிமுறையைக் கொண்டிருக்கும் தலைவர் அவர். இதுவரையில் அவரை நோக்கி எழுந்த பிரச்சினைகளையெல்லாம் அவர் அப்படித்தான் கடந்து வந்திருக்கிறார்; சமாளித்து வெற்றி கொண்டிருக்கிறார்.
பிலவுக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்பு தொடக்கம், மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கான அனுமதி வரையில் அவர் கையாண்டு வரும் யுக்தி சாதாரணமான ஒன்றல்ல. ஏன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க மீதான குற்றச்சாட்டை முன்னிட்டு ரவியை பதவியிலிருந்து அகற்றியது வரையில் இதை நாம் அவதானிக்க முடியும்.
அதிகாரத்துக்கு வந்தவுடனேயே அதிரடியாக எதையும் செய்யாமல், பிரகடனங்கள், அறிவிப்புகளை விடுக்காமல், மெல்ல மெல்லத் தளர்வுகளையும் நகர்வுகளையும் செய்து, தான் நினைக்கின்றவற்றை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் மைத்திரி.
இதனால் அவர், பிரச்சினைக்குரிய தரப்புகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எதிர்தரப்புகளிடமும் நம்பிக்கையை இழக்காமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறார். இவ்வாறே தற்பொழுது சு.கட்சியினரிடத்திலும் தடாலடியாக எதையும் மேற்கொள்ளாமல், மெல்ல மெல்லக் காய்களை நகர்த்த முற்படுகிறார். இதன்மூலம் தனக்கு ஏற்படுத்தப்படுகின்ற நெருக்கடிகளைக் கடந்து விட முயற்சிக்கிறார்.
ஆகவேதான், மஹிந்த அணியுடனான பேச்சுகளை மைத்திரி விசுவாசமாகச் செய்கிறாரா? அல்லது தனக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தணித்துக் கொள்வதற்கான ஒரு தந்திரோபாயமாகச் செய்கிறாரா? அல்லது மஹிந்த தரப்புக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்காகச் செய்கிறாரா? என்ற குழப்பங்கள் பலரிடமும் ஏற்பட்டுள்ளன.
இருந்தும், மைத்திரிபால சிறிசேனவுக்கு பல விடயங்கள் இன்று நெருக்கடியாக மாறியுள்ளன. ஒருபக்கத்தில், அவர் தொடரும் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின்படி நடக்க வேண்டும்.
மறுவளத்தில், அவருடைய கட்சியின் அழுத்தங்கள், அதனுடைய எதிர்காலம் போன்றவற்றுக்கு ஏற்ப நடக்க வேண்டும். எனவே, இப்பொழுது அதிகமதிகம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தலைவர் ஜனாதிபதியே ஆவார்.
நடப்பிலுள்ள ஆட்சியானது, பல்வேறு தரப்பினரின் கடுமையான முயற்சிகளின் விளைவாக உருவாகிய ஒன்று. அதை இப்பொழுது நெருக்கடிக்குள்ளாக்குவது இவர்களுடைய முயற்சிக்கு, ஏற்படுத்தப்படும் நெருக்கடியாகவே அமையும்.
இந்த முயற்சியின் விளைவாக, எதிர்பார்க்கப்படும் நாட்டுக்குரிய அடிப்படை மாற்றங்கள், இடைநிற்கக் கூடிய அபாய நிலை ஏற்படும் என்ற கவலைகள் பலரிடத்திலும் ஏற்பட்டுள்ளன. இது கட்சி அரசியலை, அதனுடைய நலனை மையமாக வைத்துச் சிந்திப்பதால் ஏற்படும் விளைவு.
ஆனால், இலங்கையின் அரசியல் விதியே இப்படித்தானுள்ளது. நாட்டு நலன், மக்கள் நலன் என்பதற்கு அப்பால்,கட்சி நலன், தலைமைகளின் நலன் குறித்தே அதிகம் சிந்திக்கும் பாரம்பரியமாக வலுப்பெற்றுள்ளது.
ஆகவே, கட்சி நலனைப் புறக்கணித்து விட்டு, எந்தத் தலைமையும் தீர்மானங்களை எடுக்கும் என்று சொல்வதற்கில்லை. அவ்வாறான மகத்தான குணங்களைக் கொண்ட மேதமையுள்ள தலைவர்கள் இன்னும் இங்கே இத்தகைய யதார்த்தத்தில், சுதந்திரக் கட்சிக்குள் ஏற்படும் நெருக்கடி, தற்போதைய ஆட்சியில் என்னவகையான தாக்கங்களை, நிர்ப்பந்தங்களை உண்டாக்கும் என்று உடனடியாகத் தெரியவில்லை. எனினும், இது ஏற்படுத்தும் அதிர்வுகள் நாட்டின் அரசியல் சூழலில் நெருக்கடிகளை, குழப்பங்களை உண்டாக்கலாம்.
நடப்பிலுள்ள கலப்பாட்சிக்கான உடன்படிக்கையானது, அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து இதே ஆட்சி நீடிப்பதற்கு மேலும் இந்த உடன்படிக்கையை நீடிக்க வேண்டும். அல்லது இதைப் புதிய திருத்தங்களோடு தொடர வேண்டும். அப்படித் தொடருவதற்கான சாத்தியங்களே அதிகமாக உண்டு.
ஏனெனில் இந்த ஆட்சியின் பங்குதாரரும் ஆதரவாளரும் தனியே உள்நாட்டினர் மட்டுமல்ல; வெளியே உள்ள வலுவான சக்திகளுமாகும். அதனால், என்னவிதப்பட்டும் இதைக் காபாந்து பண்ணித் தொடருவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படும்.
அப்படியான சூழலில் ஐ.தே.க சில விட்டுக்கொடுப்புகளைச் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, மைத்திரிக்குச் செய்யக்கூடும். அந்த விட்டுக்கொடுப்புகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன சில சாதகமான கொடைகளை ஒன்றிணைந்த எதிரணிக்கு வழங்கலாம்.
இப்படியே நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செல்லக்கூடிய ஓர் அரசியல் தொடர்ச்சியின் பின்னணியிலேயே இலங்கையின் அரசியல் தொடர்ச்சி அமையவுள்ளது.
இதற்குள்தான் நாடு எட்டவேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஆகவே, அரசமைப்புத் திருத்தம், தமிழ் மக்களின் விருப்பங்கள் அல்லது அரசியல் தேவைப்பாடுகள், நாட்டின் பொருளாதார மாற்றங்கள் அல்லது முன்னேற்றம் போன்றவற்றின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியின் முன்னாலேயே உள்ளன.
இந்த நெருக்கடிகள் தனியே தெற்கில் மட்டும்தான் என்றில்லை; வடக்குக் கிழக்கிலும் உண்டு. குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உண்டாகியிருக்கும் வெடிப்பு, புதிய அணியொன்றை உருவாக்க முடியாமல் தத்தளிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - சுரேஷ் - பேரவைக் கூட்டு போன்றவைக்கும் உண்டு.
இதைவிட, அரசமைப்பை உருவாக்குவதிலும் நிறைவேற்றுவதிலும் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எதுவும் முடிவில்லாமல் உறுதியில்லாமலே உள்ளன. அடுத்து என்ன நடக்கும் என்பதை எவராலுமே உறுதியுரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் எதிர்காலம் குறித்து எவ்வாறு திட்டமிட முடியும்?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
48 minute ago
5 hours ago