Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gopikrishna Kanagalingam / 2017 ஜூன் 15 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதிலும், அண்மைக்காலமாகவே இந்த “வெறுப்புப் பேச்சு” பற்றிய கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, சாதாரண மக்களின் கலந்துரையாடல்களில் மாத்திரமன்றி, அரசியல்வாதிகளும் அடிக்கடி உச்சரிக்க வேண்டிய ஒன்றாக, இதுபற்றிய கலந்துரையாடல்கள் காணப்படுகின்றன.
முஸ்லிம்களின் வழிபாட்டிடங்களையும் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் இலக்குவைத்து, அவர்களுக்கு அச்சுறுத்தலையும் பொருளாதார நட்டத்தையும் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அண்மைக்கால முயற்சிகள், வெறுப்புப் பேச்சுப் பற்றிய கவனத்தையும் கலந்துரையாடலையும் அதிகரித்திருக்கின்றன.
இவை பற்றிய கவனம், உலகம் முழுவதும் காணப்பட்டாலும் கூட, வெறுப்புப் பேச்சு என்றால் என்ன என்பதற்கான தெளிவான வரைவிலக்கணம் ஒன்று இதுவரை கிடையாது.
ஆனால், ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடிய வரைவிலக்கணமாக, “குழுவொன்றுக்கு அல்லது குழுவொன்றின் அங்கத்தவராக இருக்கும் தனிநபர் ஒருவருக்கு எதிராக, வன்முறையை அல்லது பாகுபாடான நடவடிக்கைகளைத் தூண்டும் விதத்தில் அல்லது அச்சுறுத்தும் விதத்தில் முன்னெடுக்கப்படும் பேச்சு, சைகை, நடத்தை, எழுத்து அல்லது வெளிப்படுத்துகை ஆகியன வெறுப்புப் பேச்சுகள் ஆகும்” என்பது காணப்படுகிறது.
பொதுவான புரிதல் என்னவெனில், “அ என்ற இனத்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள்” என்பது, வெறுப்புப் பேச்சாகக் கருதப்படாது. மாறாக, “ஆ என்ற இனத்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள். எனவே, அவர்களின் தலைகளைக் கொய்ய வேண்டும்” என்பது, வெறுப்புப் பேச்சு. இரண்டாவது வகை, அச்சுறுத்தலை விடுப்பதாகவோ அல்லது வன்முறையைத் தூண்டுவதாகக் காணப்படுவதே காரணமாகும்.
இங்குதான், இன்னொரு பிரச்சினை எழுகிறது. அது, நீண்ட காலமாகவே நடைபெற்று வரும் விவாதமாகும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை, வெறுப்புப் பேச்சுக்கான சட்டரீதியான கட்டுப்படுத்தல்கள் பாதிக்கின்றனவா என்பதுதான் அது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, விரும்பியதை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய சுதந்திரம் என்றால், எதற்காக அதற்குக் கட்டுப்பாடு வேண்டுமென்பது, ஒரு தரப்பினரின் வாதமாகக் காணப்படுகிறது.
இலங்கை உட்பட பல நாட்டுச் சட்டங்களில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் வெறுப்புப் பேச்சுக்குமிடையிலான தெளிவான இடைவெளியை, வரைவிலக்கணப்படுத்தவில்லை. ஆனால், தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பு, அந்த விடயத்தில் தெளிவான ஒன்றாகக் காணப்படுகிறது.
அந்நாட்டு அரசியலமைப்பின்படி, “பத்திரிகைகள், ஏனைய ஊடகங்கள் ஆகியவற்றை அடைவதற்கான சுதந்திரம்; தகவல்களை அல்லது எண்ணங்களைப் பெறுவதற்கு அல்லது அனுப்புவதற்கான சுதந்திரம்; கலைப் புத்தாக்கத்துக்கான சுதந்திரம்; கல்விச் சுதந்திரம், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான சுதந்திரம் ஆகியன உட்பட, அனைவருக்கும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் காணப்படுகிறது” என்று கூறப்படுகிறது. ஆனால், அதன் அடுத்த உப பிரிவில், முன்னைய உப பிரிவில் காணப்பட்ட சுதந்திரம், “போருக்கான பிரசாரம்; வன்முறைக்கான தூண்டல்; பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தூண்டப்படும் இனம், பாலினம், அல்லது மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு” ஆகியவற்றை உள்ளடக்காது என்று கூறப்படுகிறது. இது, ஓரளவு தெளிவான வரைவிலக்கணமாகும்.
ஆனாலும் கூட, உலக மட்டத்தில், குறிப்பாக மனித உரிமைகள் குழுக்களிடையே, வெறுப்புப் பேச்சைக் குற்றவியல் குற்றமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள், பெரிதளவு வரவேற்பைப் பெறுவதில்லை. இதற்குக் காரணம், அவ்வாறான சட்டங்கள், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதுதான்.
இதனால்தான், சில காலத்துக்கு முன்னர், இலங்கையிலும் அவ்வாறான சட்டத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, சிறுபான்மையினத்தவரிடையே, அதற்கான எதிர்ப்புகள் எழுந்திருந்தன.
இலங்கை போன்ற நாடுகளில், சட்ட அமுலாக்கத்துறையினரில், இன விகிதாசாரம் பேணப்படுவதில்லை. இலங்கையின் சட்ட அமுலாக்கத்துறையில், சிங்கள இனத்தவர்களே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர். சிறுபான்மையினங்கள், போதியளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை. தவிர, இலங்கையின் நீதித் துறையிலும், அவ்வாறான அமைப்புக் கிடையாது. இது, வெறுப்புப் பேச்சுத் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதில் காணப்படும் சிக்கலாகும்.
இலங்கையில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள இன முறுகல்களை, இதற்கான உதாரணமாகக் கருத முடியும். முஸ்லிம் மக்கள், வெளிப்படையாகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது, போதுமான நடவடிக்கைகள், பொலிஸாரால் எடுக்கப்படவில்லை. வெறுப்புப் பேச்சுகளும் வன்முறைகளும் தொடர்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான நேரடியான வெறுப்பை உமிழ்பவர்கள் பலர் மீது, இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏப்ரல் தொடக்கம் நடைபெறும் இச்சம்பவங்கள் தொடர்பாக, ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக, பொலிஸார் அண்மையில் தெரிவித்தனர். அதில் மூவர், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் முஸ்லிம்; மற்றையவர், திருகோணமலையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய தமிழர் எனவும் அறிவிக்கப்படுகிறது.
குறித்த தமிழ் இளைஞர், பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்படும் இந்து அமைப்பொன்றுடன் சேர்ந்து இயங்கியவர் என்று ஒரு தரப்புச் செய்திகள் தெரிவிக்க, அந்தப் பள்ளிவாசல்களுக்கும் அந்தப் பகுதியிலுள்ள குழுவொன்றுக்கும் இடையிலான முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என, இன்னொரு தரப்புச் செய்தி தெரிவிக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்ட கைதுகளைப் பார்த்தால், குறித்த சம்பவங்களைத் தூண்டிய எவரும் கைது செய்யப்படவில்லை. யாரோ ஒருவரின் தூண்டுதலால், இச்சம்பவங்களைச் செய்ததாகக் கூறப்படும் நபர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் பொதுபல சேனா, “எங்களால் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட முடியும். ஆனால், நாங்கள் அதைச் செய்யவில்லை” என்று பகிரங்கமாகக் கூறுகிறது. தமிழ் அல்லது முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று, “எங்களால் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட முடியும்” என்று கூறிவிட்டு, சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? இல்லவே இல்லை.
அதேபோல, பொலிஸாரால் தேடப்பட்டுவரும் ஞானசார தேரரை, இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அமைச்சர் ஒருவரின் தயவில் அவர் ஒளிந்திருப்பதாக, சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மையினத்தவர் ஒருவரின் விடயத்தில், ஞானசாரர் அளவுக்குப் பொறுமை காக்கப்படுமா? இல்லவே இல்லை.
இந்த இன முரண்பாடுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில், முஸ்லிம் ஒருவர் உள்ளடங்குகிறார் என்று முன்னரே கூறப்பட்டது. பேஸ்புக்கில், கௌதம புத்தர் பற்றி, அவதூறான விடயங்களைப் பகர்ந்தார் என்பதுதான், அவர் மீதான குற்றச்சாட்டு. மதங்களையும் இனங்களையும் அவதூறாகப் பேசியவர், ஒரேயொரு முஸ்லிம் தானா?
வெளிப்படையாகவே இனத்துவேசத்தைக் கக்கும் பெரும்பான்மை மொழியிலுள்ள பேஸ்புக் பக்கங்கள், எந்தவிதப் பிரச்சினையுமின்றி, தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல பேஸ்புக் பக்கங்கள், பல்லாயிரம் இரசிகர்களுடன், தங்களுடைய வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? இல்லவே இல்லை.
மேற்கூறப்பட்ட காரணங்கள்தான், வெறுப்புப் பேச்சுப் பற்றிய சட்டமூலம் பற்றிய தயக்கங்களை ஏற்படுத்துகின்றன. சட்டமானது, ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் மீதுதான் அதிகமாகப் பிரயோகிக்கப்படும் என்றால், அதை வரவேற்பது, முட்டாள்தனமானது.
பொலிஸாரின் பாகுபாடு பற்றிய தரவுகளைக் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவில், வீதியில் செல்பவர்களை மறித்து, அவர்கள் மீதான உடற்சோதனைகளை மேற்கொள்ளும் நடைமுறை இருந்தபோது, அதில் கறுப்பினத்தவர்கள்தான், மிகப்பெரியளவு பெரும்பான்மையில் சோதனையிடப்பட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அது, அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை என்று நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. அவ்வாறான வாய்ப்புகள், இலங்கையில் உள்ளனவா?
ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று, அண்மையில் இடம்பெற்றது. அதில், இலங்கையின் முக்கியமான ஆணைக்குழுவொன்றைச் சேர்ந்த ஆணையாளர் ஒருவர் கலந்துகொண்டார்.
சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அவர், தன்னுடைய சமுதாயத்தில், மேலும் ஒரு சிறுபான்மை மதப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், தான் சந்தித்த வெறுப்புப் பேச்சுகளைப் பற்றி விவரித்தார். “ஆனால், இவை அனைத்துக்கும் மத்தியில், வெறுப்புப் பேச்சு மீதான சட்டங்களைக் கொண்டு வருவதற்கு நான் எதிரானவன்” என்று கூறிய அவர், அதற்கான காரணங்களை விவரித்தார்.
“கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சாரதியாக இருந்தால், வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் மறிக்கப்படும்போது, பொலிஸாருடன் கதைத்து, அவர் தப்பிவிடுவார்; அபராதம் விதிக்கப்படுவதில்லை.
கொழும்புக்குள்ளும் இது நடப்பது வழக்கம். ஆனால், தமிழ் சாரதியென்றால், என்ன தான் கதைத்தாலும், அவர்கள் இறுதியில் அபராதத்துக்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டுதான் வருவார்கள்” என்று அவர், தனது அனுபவத்தை விவரித்தார்.
இவ்வாறு, சட்டத்தை அமுல்படுத்துவதில் இந்தளவுக்குப் பாகுபாடு காணப்படும் போது, வெறுப்புப் பேச்சுப் போன்ற, நேரடியாக வரைவிலக்கணப்படுத்த முடியாத ஒரு விடயத்துக்கான நடவடிக்கைகள், சிறுபான்மையினரைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் தேவை இருக்கிறது. இதனால் தான், இதற்கான தனியான சட்டம் என்பது, இப்போதைக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
பாகுபாடு இருக்கிறது என்பதற்காக, சட்டத்தையே கொண்டுவராமல் விட முடியுமா, அப்படியாயின் ஏனைய சட்டங்களும் அப்படித் தானே என்று கேள்வியெழுப்பப்படலாம்.
ஆனால், ஒருவரைக் கத்தியால் குத்துவது தவறு அல்லது ஒருவரைத் துன்புறுத்துவது தவறு என, சட்டத்தின் மூலமாக, இலகுவாக வரைவிலக்கணப்படுத்த முடியும்.
ஆனால், வெறுப்புப் பேச்சு என்பது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, வெவ்வேறான அளவில் கருதப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
இந்த இடத்தில்தான், அதிகமான பாகுபாடு காட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான், ஏனைய சட்டங்களை விட, வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், சிறுபான்மை இனங்களை அதிகம் பாதிப்பனவாக இருக்கின்றன என்பதுதான் குறிப்பிட வேண்டிய ஒன்றாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago