Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிமாக இராணுவத்தினரின் பிரசன்னத்தை எதிர்த்து நேற்றைய தினம் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் ஒரு இளைஞர் உயிரிழந்ததற்கு இராணுவமே காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சி இதற்கு அழைப்பு விடுத்தது. வேறு பல கட்சிகளும் அமைப்புக்களும்; ஆதரவளித்துள்ளன. சில தென்னிலங்கை மலையக கட்சிகளும் ஆதரவை அறிவித்திருந்தன. சமகாலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இதற்கான ஆதரவைப் பகிரங்கமாக அறிவித்திருந்தது.
ஜனநாயக நாடொன்றில் மக்கள் எதிர்ப்பின் வடிவமாக இவ்வாறான கடையடைப்புக்கள் இடம்பெறுகின்றன. ஆனால், இலங்கைச் சூழலில் ஹர்த்தால் என்பது வர்த்தக நிலையங்களை மூடுவதும், போக்குவரத்தைத் தடை செய்வதும், நகர்ப்பகுதியில் உள்ள வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களை முடக்குவதுமாகவே இருந்து வருகின்றது.
தவிர, அரச மற்றும் தனியார்த் துறை ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ இப்படியான ஜனநாயக முயற்சிகளுக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆதரவளிப்பதை விடவும், கடமைக்குச் சென்று எப்படியாவது ஒப்பமிட வேண்டும் என்ற மனப்பாங்கிலேயே இருக்கின்றனர். அதுதான் யதார்த்தமும் ஆகும்.
அந்த வகையில், நேற்றைய ஹர்த்தால் வெற்றிகரமாக, பூரண ஹர்த்தாலாக அமைந்ததா என்பது வேறு விடயம். ஆனால், நிச்சயமாக அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியைச் செய்தியைச் சொல்லியிருக்கும் என்பதை மறுக்க முடியாது.
ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு பல நாட்களின் பின்னரே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோ அல்லது இராணுவப் பிரசன்னம் குறித்த வாக்குறுதிகளை வழங்கியோ இதனைத் தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி நடந்ததாக அறியக் கிடைக்கவில்லை.
இந்த ஹர்த்தாலுக்குப் பயந்து வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தை அரசாங்கம் குறைக்குமா என்ற கேள்வி எழுகின்றது? என்னதான் ஜே.வி.பி.யும் என்.பி.பியும். ஜனநாயகம் பேசினாலும், ஆட்சிக் கதிரைக்கு வந்த பிறகு நிலைமைகள் வேறு என்பது பட்டவர்த்தனமான விடயமாகும்.
இவ்வாறான பின்னணியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இந்த ஹர்த்தாலுக்கான ஆதரவை தெரிவித்திருந்தது. மு.கா. ஒரு கட்சியாக, அனைத்து முக்கிய உறுப்பினர்களினதும் சம்மதத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது தலைவர் றவூப் ஹக்கீமும் இன்னும் ஒரு சிலரும் எடுத்த முடிவா எனத் தெரியவில்லை.
வடக்கு, கிழக்கு என்று வருகின்றபோது, மொழியால் ஒன்றுபட்ட தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதும், பரஸ்பரம் மற்றையவரின் விடயங்களில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதும், இப்படியான ஆதரவு தமிழ் முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவதற்கான சமிக்கைகளாக அமையும் என்பதும் அனுமானி;க்கக் கூடிய விடயங்கள்தாம்.
மு.கா. தலைவர் சொன்னார் என்பதற்காக முஸ்லிம்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்;றோ இல்லாவிட்டால் கொஞ்சம்கூட ஆதரவளித்திருக்க மாட்டார்கள் என்றோ முஸ்லிம் காங்கிரஸின் எல்லா அழைப்புக்களுக்கும் முஸ்லிம் சமூகம் ஆதரவளிக்கும் என்றோ யாரும் கருத முடியாது. அது அஷ்ரபின் காலத்தோடு முடிந்து விட்டது.
வடக்கு, கிழக்கில் உள்ள பல தமிழ்க் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் இன்னும் ஒரு சில அரசியல் அணிகளும், அமைப்புக்களும்; இதற்கு ஆதரவளிக்கவில்லை. இது தன்னிச்சையான முடிவு என்ற காரணத்தை அவை பெரும்பாலும் கூறியிருக்கின்றன.
ஆனால், வடக்கு, கிழக்கில் அதாவது றவூப் ஹக்கீமின் சொந்த மாவட்டத்திற்கு வெளியே நடைபெறுகின்ற ஒரு ஹர்த்தாலுக்கு மு.கா. ஆதரவளித்துள்ளது. அதனை வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் செவிமடுத்தார்களா என்பது வேறு விடயம்.
மு.கா. ஆதரவளித்தது தவறில்லை.
ஆனால், இதன் எதிர்விளைவுகள் பற்றி கட்சித் தலைவர் சிந்தித்தாரா? அப்படியாயின் அதிலுள்ள சாணக்கியம் என்ன என்பதுதான் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.
அண்மைக் காலத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாரிய ஜனநாயக போராட்டங்களை நடத்தியிருக்கவில்லை. பள்ளிவாசல் படுகொலைக்கான நீதியை வேண்டி மு.கா. ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம்.
குருக்கள்மடம் புதைகுழி உள்ளடங்கலாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு நீதியை வலியுறுத்தி இப்படியொரு ஜனநாயக போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.
ஆயினும், பாராளுமன்றத்தில் குருக்கள்மடம் பற்றி பேசியதோடு நிறுத்திக் கொண்டார் தலைவர்.குறிப்பாக, அறுகம்பே உள்ளிட்ட இடங்களில் யூதர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கக் கோரி ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு ஒரு ஜனநாயக எதிர்ப்பை தெரிவிக்க ஹக்கீம் தலைமையிலான மு.கா. கட்சி முன்னின்றிருக்கலாம். அப்படி நடக்கவில்லை.
அவ்வாறில்லாவிட்டால். இராணுவத்தினரின் பிரசன்னத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நேற்றைய ஹர்த்தாலுக்கு, முஸ்லிம்கள் தரப்பில் சில கோரிக்கைகளையும் முன்வைத்து, மேற்படி முஸ்லிம் கட்சி இதற்கு ஆதரவளித்திருக்கலாம். குறிப்பாக உரிமை மீறல்கள், காணிப் பிரச்சினை போன்றவற்றை மு.கா. வலியுறுத்தியிருக்கலாம்.
ஆனால், அவ்வாறு முஸ்லிம் சமூகம் தொடர்பான நீதிக்காகப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்காமல், வேறு தரப்பிற்குப் பின்னால் ஒழிந்து கொண்டு அல்லது வேறு விதமான அரசியலை மேற்கொள்வது நல்ல முன்மாதிரியல்ல. மு.காவின் முடிவுக்குப் பின்னால் வடக்கு, கிழக்கின் அனைத்து முஸ்லிம்களும் போகத் தயங்குவதற்கு அக்கட்சியின் இவ்விதமான போக்கே காரணம் எனலாம்.
எவ்வாறாயினும், இலங்கையில் பிரதானமான முஸ்லிம் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான். எனவே இது தமிழரசு கட்சிக்கு சாதகமானது, மறுபுறத்தில், மு.காவின் ஆதரவை தூதரகங்களும் வெளிநாடுகளும் முஸ்லிம்களின் ஆதரவாகவே கருதும் வாய்ப்புள்ளது. களத்தில் என்ன நடக்கின்றது என்ற நிலவர அறிக்கை பல தரப்பினருக்கு கிடைக்காது.
இதுவெல்லாம் அரசாங்கத்தையும் படையினரையும் சந்தோஷப்படுத்தும் விடயங்களாக இருக்கப் போவதில்லை. எனவே, இந்த ஆதரவை அரசாங்கமும் சிங்கள மக்களும் இராணுவத்தினரும் எப்படி நோக்குவார்கள் என்று மு.கா. சாணக்கியமாகச் சிந்தித்திருக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கவும் அளவுக்கதிகமான இராணுவ மயமாக்கலைத் தடுக்கவும் வேண்டிய தேவையிருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதற்குப் பகரமாக அரசும், படைத்தரப்பும் முஸ்லிம்களை நோக்கி மறைமுக எதிர்வினையை ஆற்ற மாட்டாது என்பதற்கு மு.கா. தரும் உத்தரவாதம் என்னவோ!?
30 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
59 minute ago
3 hours ago