2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘ஆணைக்குழுக்களை ஜனாதிபதி அச்சுறுத்தவில்லை’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு  

“இலஞ்சம், ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியன, அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றனவோ என, தனக்குச் சந்தேகம் உள்ளது என்றுதான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

தவிர, அந்நிறுவனங்களை அவர் அச்சுறுத்தவில்லை” என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,  

“குறித்த நிறுவனங்களை, தொலைபேசி மூலமாக அழைத்தோ, தனிப்பட்ட ரீதியில் கலந்தாலோசனை செய்தோ, தனிப்பட்ட ரீதியாக ஜனாதிபதி அச்சுறுத்தவில்லை. குறித்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து தாம் எந்த ஒரு விடயமும் தெரியாது என்பதையும் குறித்த நிறுவனங்கள் தமது சுயாதீனத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கிணங்கவே செயற்படுகின்றன என்பதையே ஜனாதிபதி சொல்ல முயன்றார். குறித்த கருத்தை ஊடகங்களும் சரி பலரும் சரி, தங்களது கருதுகோளுக்கு இணங்க, அக்கருத்தை திரிபுபடுத்த முயல்கின்றனர்.  

அமைச்சர் பௌசி, தனது முன்னாள் அமைச்சுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை, புதிய அமைச்சுக்குக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அபிவிருத்திக்கெனப் பயன்படுத்தப்படும் நிதியையே தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனப் பயன்படுத்துபவர்கள், அமைச்சுப் பதவியில் இருக்கையில், அமைச்சர் பௌசி எதற்கு நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என்ற காரணம் எனக்கு இன்னமும் புரியவில்லை என்பதையே ஜனாதிபதி தெரிவிக்க முயன்றார். குறித்த கைது, விசாரணைகளை தன்னிச்சையாகவேச் செயற்படுத்த முற்படுகின்றனர்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  

இதேவேளை, அவ்வூடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, “ஜனாதிபதி என்பவர், தனக்கு வாக்களித்தவருக்கு மாத்திரம், ஜனாதிபதி இல்லை. முழு நாட்டுக்கும் ஜனாதிபதி. ஜனாதிபதி என்பவர், தமக்கு வாக்களித்த மக்களுக்காகவோ தனது இனத்துக்காகவோ, தான் பிரதிபலிக்கும் கட்சிக்காகவோ, தன்னுடைய மாவட்டத்துக்காகவோ பணியாற்ற முடியாது. கடந்த காலங்களில், நல்லாட்சி ஒரு நாடகம் எனத் தெரிவித்தனர். அதனை நாங்கள் பொய்ப்பித்துக் காட்டிவிட்டோம். நோ போல் போடாதீர்கள். சிக்ஸர் அடிக்க முடியாது. மக்கள் மத்தியில் பிரிவினைவாதக் கருத்துக்களை முன்வைத்து, நல்லாட்சியை கவிழ்க்கலாம் என நினைக்காதீர்கள், ஆட்சி கவிழாது” என்றார்.  

கடந்த காலங்களில், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக, கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில், குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்துச் சந்தேகம் எழுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கருத்தினை ஏற்றுக்கொள்ளும் விதமாகவே, இது அமைகின்றது. தொப்பி சரி என்றால் அணிந்துகொள்ளலாம். குறித்த நிறுவனங்கள் அரசியல் தலையீட்டின் மத்தியில் செயற்பட முடியாது. சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டியவை” என, அவர் மேலும் எனத் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .