2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

10 ஆண்டுத் திட்டம் 5 ஆண்டாக குறைப்பு

Gavitha   / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட, பத்தாண்டுக்கான தேசிய நடவடிக்கைத் திட்டம், ஐந்தாண்டுத் திட்டமாக மாற்றப்பட்டு, அதற்கான அங்கிகாரத்தினை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கிகாரம் கிடைக்கப் பெற்றதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட தேசிய நடவடிக்கைத்திட்டத் தயாரிப்புப் பணிகள், 2005ஆம் ஆண்டில் ஆரம்பமாகின. இதற்கான வேலைத்திட்டத்தில், மலையக சிவில் சமூகப் பிரதிநிதிகள் அக்கறை காட்டியிருந்தனர். எனினும், அப்போதைய மலையக அமைச்சர்கள் போதிய அக்கறையுடன், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை. இந்த நிலையில் அது, கிடப்பில் போடப்பட்டது.

2015ஆம் ஆண்டு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை, அமைச்சர் பழனி திகாம்பரம் பொறுப்பேற்றதும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் முதல் நடவடிக்கையாக, பத்தாண்டுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளுக்கு, ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மலையக சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட ஆலோசகர்களைக் கொண்ட குழு, இந்தத்  திட்டத்தைத் தயாரித்ததுடன், அதனை அமைச்சரவை அங்கிகாரத்துக்காகச் சமர்ப்பித்தபோது, திட்டத்தைத் துரிதப்படுத்தும் வகையில் பத்தாண்டுக் காலத்தை, ஐந்தாண்டுத் திட்டமாக மாற்றியமைக்குமாறு, ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளின் பேரில் மாற்றியமைக்கப்பட்டது.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கான ஐந்தாண்டுக்கான தேசிய நடவடிக்கைத் திட்டத்துக்கு, அமைச்சரவை இன்று அங்கிகாரம் வழங்கியுள்ளது. எனவே, திட்டத்தில் உள்ளடங்கியுள்ள அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதியீட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள், விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X