2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

2017ஆம் ஆண்டில் 2 கப்பல்கள் வரும்

Gavitha   / 2016 ஜனவரி 27 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

'இலங்கைக் கடற்படைக்கு இதுவரை, மூன்று போர்க் கப்பல்களே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவையனைத்தும், வேறு நாடுகளால் பாவிக்கப்பட்டு இரண்டாம் தரமாகவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.  எதிர்காலத்தில், 10 கப்பல்களைக் கொள்வனவு செய்ய யோசனை முன்வைத்துள்ளோம். அதில், போர்க்கப்பல்கள் இரண்டு, அடுத்த வருடம் (2017) பெப்ரவரி மற்றும் டிசெம்பர் மாதங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன' என்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்ர விஜயகுணரத்ன தெரிவித்தார்.

அத்துடன், கடந்த 6 மாதங்களில், 9 நாடுகளைச் சேர்ந்த 25 போர்க்கப்பல்கள்;, கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் பிரித்தானியா, தென்னாபிரிக்கா, ஓமான், நைஜீரியா, மலேஷியா ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்களும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

'ஒரு காலத்தில், விடுதலைப் புலிகளின் கடற்படையை அழிப்பதுதான், கடற்படையினரின் இலக்காக இருந்தது. இந்த இலக்கை அடைந்தும் விட்டோம். கடல் வளம் என்பது, ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. அது தான் எமது நாட்டின் செல்வமும் கூட. அதனைப் பாதுகாப்பது, எமது முக்கிய கடமையாகும்.

யுத்தக்காலத்தில், இலங்கைக் கடற்படைக்காக, மூன்று போர்க்கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட்டன. கப்பல் ஒன்றை உருவாக்க, குறைந்தது இரண்டரை வருடங்கள்; ஆகும் என்பதால், அவ்வளவு கால அவகாசம் இல்லாத நிலையில், ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கப்பல்கள்  இரண்டைக் கொள்வனவு செய்தோம். மற்றுமொரு கப்பல், இந்தியாவால் இலவசமாக வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஏனைய நாடுகளுடன் போட்டியிட்டு முன்னிலைக்கு வர, அதிக நவீன கப்பல்கள் எமக்குத் தேவை.

எம்மிடம் இருக்கும் 3 கப்பல்கள் போதாது. இன்னும் 10 கப்பல்களாவது எமக்குத் தேவை. தற்போது, எமக்குத் தேவையான தொழில்நுட்பங்களுடன், இரண்டு போர்க்கப்பல்கள், இந்தியாவில் தயாராகி வருகின்றன. அதிலொன்று, அடுத்தாண்டு பெப்ரவரி மாதம், நாட்டுக்குக் கொண்டு வரப்படும். மற்றையது, 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமளவில், கிடைக்கப்பெறும்.

தற்போது எம்மிடம் உள்ள பெரிய கப்பல், சயூரா ஆகும். இது, 103 மீற்றர் நீளமுடையது. சமுத்ரா, சாகர என்பன, ஏனைய இரண்டு கப்பல்களாகும். ஒவ்வொரு நாடும், தமது போர்க்கப்பல்களை அனுப்பும் போது, அதற்குத் தேவையான பாதுகாப்பை, அந்த நாட்டால் வழங்க முடியுமா என்பதைப் பார்த்த பிறகே அனுப்புகின்றன. அந்த வகையில், இலங்கைக் கடற்படை மீது, சர்வதேச நாடுகள் மத்தியில், சிறந்த மரியாதை உள்ளது. அதனையிட்டு நாம், பெருமைப்பட வேண்டும்.

கடற்படைப் பயிற்சி நிலையமொன்றை, இலங்கையில் நிறுவுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். எனினும், இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே, அது பற்றிச் சிந்திக்க முடியும் என்றும்' அவர் மேலும் கூறினார்.

கடற்படைனரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளால், கடந்த மூன்று வருட காலத்தில், இலங்கையில் இருந்து எந்தவோர் ஆட்கடத்தல் படகும், அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை.  ஆட்கடத்தலில் ஈடுபடும் டோறா படகுகள் கடலில் சென்றுவிட்டால், அவற்றைத் தடுப்பது மிகவும் சிரமமாகிவிடும். எனவே, கரையிலிருந்து அவை கடலுக்குச் செல்லாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு,பொலிஸாரும் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

2012ஆம் ஆண்டிலேயே, இலங்கையிலிருந்து அதிகளவான ஆட்கள், அவுஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட்டனர்' என்றும் கடற்படை தளபதி கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X