2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'கச்சதீவை மீண்டும் பெறுவதுதான் ஒரே தீர்வு'

George   / 2016 மார்ச் 15 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினையைத் தீர்க்க கச்சதீவை மீண்டும் பெறுவதுதான் ஒரே தீர்வு' என தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
'தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 4 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ள அண்மைய சம்பவம் குறித்து மிகுந்த மனவேதனையுடன் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 
 
இதுபோன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், பாரம்பரிய பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்; கைதுசெய்து வருகின்றனர். 
 
முதலாவது சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் 13ஆம் திகதி அதிகாலையில் கைது செய்யப்பட்டு, காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
 
மற்றொரு சம்பவத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து 3 மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்ற 23 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 12ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டு, தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
 
இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்கக்கூடாது என்றும் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இதற்காக தூதரகம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் தொடர்ந்து உங்களுக்கு கடிதம் எழுதி வருகிறேன். 
 
13ஆம் திகதி பிடித்துச் செல்லப்பட்ட 4 மீன்பிடி படகுகள் உட்பட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 82 படகுகள் இலங்கையில் தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன. நீண்டகாலமாக பிடித்து வைத்திருப்பதாலும், பயன்படுத்தப்படாமல் உள்ளதாலும், கடுமையான பருவநிலை காரணமாகவும் இந்தப் படகுகள் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டன. எனவே, இந்தப் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் புதுப்பித்து விரைவில் தமிழக மீனவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். 
 
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் தமிழக மீனவ சமுதாயத்தினரிடையே விரக்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாக் நீரிணை பாரம்பரிய மீன்பிடி கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அந்த உரிமை இலங்கை அரசால் அடிக்கடி மீறப்பட்டு வருகிறது. 
 
மீனவர்கள் சந்தித்து வரும் இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஒரே வழி, இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவதுதான் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன்மூலம் தமிழக மீனவர்களுக்கு தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தரமுடியும். 
 
இந்தியா-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை என்பது, தற்போது உயர் நீதிமன்றத்தின் விசாரணையின் கீழ் நிலுவையில் உள்ளது. 1974 ஆம் ஆண்டு மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்பாட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
 
இலங்கை விவகாரத்தில், உங்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டில் முக்கிய மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். நீண்டகாலமாக இருந்து வரும், மிகவும் உணர்வுபூர்வமானதும், தமிழகத்தின் பாதுகாப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதுமான இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கும் வகையில், தூதரகம் மூலமாக தீர்க்கமான மற்றும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 
 
நீங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, 13ஆம் திகதி பிடித்துச் செல்லப்பட்ட 28 தமிழக மீனவர்கள் மற்றும் 4 மீன்பிடி படகுகள் உட்பட 96 தமிழக மீனவர்களையும், 82 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X