2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

'கறுப்புப் பூனைப் படையணி நீக்கப்பட்டுவிட்டது'

Kanagaraj   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ள விவகாரம் அவையில் நேற்றுப் புதன்கிழமை சூடுபிடித்திருந்தது. நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார்.

பாதுகாப்புக் குறைப்புத் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட இராணுவம் நீக்கப்பட்டு, பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விடுக்கப்பட்டுள்ள கட்டளையின் பிரகாரம், கமாண்டோ படையணியைச் சேர்ந்த படைவீரர்கள் 50 பேரும், ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இராணுவத் தலைமையகத்துக்கு முழுமையாகத் திருப்பியழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

'இது, பயங்கரவாதத்தை ஒழித்த நாட்டுத்தலைவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயலாகும். அவரை அநாதரவாக்கும் செயற்பாடாகும்.

அவரது பாதுகாப்பில், பயிற்சி, அனுபவமில்லாத பொலிஸாரை மட்டுமே ஈடுபடுத்துவது பாதுகாப்பற்றதாகும்.
பிரமுகர்களின் பாதுகாப்பில்,  நல்ல உடலமைப்பைக் கொண்டுள்ளவர்கள், பிரமுகர்களின் பாதுகாப்புக்கு உசிதமானவர்கள், விசேட பயிற்சிகளை பெற்றிருப்பவர்கள், அவசர நிலைமையின் போது செயற்படுவது தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இருத்தல் வேண்டும்.

அவ்வாறானவர்கள் இருந்தமையினால்தான் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தபோது, இந்தப் பிரமுகருக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மட்டுமன்றி, பயங்கரவாதத்தை ஒழித்த அரச தலைவனுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இந்தியப் பிரதமரின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படும் கறுப்புப் பூணை படையணிக்கான பயிற்சி பெற்றோர், உக்ரேன், பிரான்ஸ் ஆகிய படையணிகளில் பயிற்சிபெற்றோரை, மஹிந்த ராஜபக்ஷவின் கமாண்டோ படையணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்று ஒன்றரைவருட காலத்தில், அவ்வாறான விசேட பயிற்சிகளை பெற்றவர்கள், நீக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் தற்கொலை அங்கி உட்பட, பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தை விலகிக்கொள்ளுங்கள்' என அவர் கோரிநின்றார்.

இதற்குப் பதிலளித்த அவைத்தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, 'மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்பது, உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் முக்கியமானதாகும். அரச தலைவனுக்குப் பாதுகாப்பு வழங்குவது எங்களுடைய கடமையாகும். ஆனால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது நீங்கள்தான்' என்று கூட்டு எதிரணியைப் பார்த்து கூறினார்;.

இன்று (நேற்று புதன்கிழமை) காலை கிடைத்த தகவல்களின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராணுவத்தினர் 103 பேரும், பொலிஸார் 103 பேருமென மொத்தமாக 206 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பயங்கரவாதத்தை ஒழித்தார். பயங்கரவாதத்தை ஒழித்த, அவரது பாதுகாப்பானது, 2010ஆம் ஆண்டு தேர்தல் நிறைவடைந்த 5 நிமிடங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னாள் இராணுவத்தளபதியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் பாதுகாப்பு நீக்கப்பட்டமையால், வடமேல் மாகாணத்தில் வைத்து அவர் படுகொலைசெய்யப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் எம்மிடத்தில் வேறு நிகழ்ச்சி நிரல் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது எழுந்த, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 'மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது 106 இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். அவர்கள் அனைவரையும் ஏப்ரல் 10ஆம் திகதியுடன் விலக்கிக்கொள்வதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அக்கட்டளை தொடர்பில் பதிலளிக்கவேண்டும்' எனக்கேட்டார்.

இதனிடையே எழுந்த அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 'யுத்தக்காலத்தில் உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட விசேட அனுமதியின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கான பாதுகாப்புக்கு, 30 பொலிஸார் மட்டுமே வழங்கப்படுள்ளனர்.

இந்த முடிவு தொடர்பில் பாதுகாப்பு பேரவையில் நான்மட்டுமே எதிர்த்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பாதுகாப்புகளுக்கு பொலிஸாரே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர், எனக்கான பாதுகாப்பு முழுமையாக வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்னர் சிறையிலடைத்தனர் அங்கு, எனக்கான பாதுகாப்புக்கு ஒருவர் கூட அமர்த்தப்படவில்லை. அங்கு புலிகள் மட்டுமே இருந்தனர்' என்றார்.

குறுக்கிட்ட மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி, 'ரணில், மைத்திரி மற்றும் மஹிந்தவை ஒன்றாகப் பார்க்கவேண்டாம்.

மஹிந்தவுக்கு வழங்கப்பட இராணுவப் பாதுகாப்பு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விலக்கிக்கொள்ளப்பட்டால், நீங்கள் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துக்கொள்ளவேண்டும்' என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை பார்த்து கூறினார்.

இதனிடையே எழுந்த சேனசிங்க எம்.பி., இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஊடகங்களுக்கு நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை இரவு) தெரிவித்துள்ளார். என்று சுட்டிக்காட்டியதுடன், மஹிந்தவுக்கு பாதுகாப்பளிக்கும் 30 பேரையும் நீக்கமாட்டோமென தீர்மானத்தை தாருங்கள் என ரோஹித அபேகுணவர்தன எம்.பி கேட்டுநின்றார்.

மீண்டும் எழுந்த அமைச்சர் சரத் பொன்சேகா, பிரமுகருக்கு 200 பேரும் பாதுகாப்பு வழங்கலாம், ஆனால், நாட்டின் பாதுகாப்பு மாறும்போது பிரமுகர்களின் பாதுகாப்பும் மாறும் என்று சுட்டிக்காட்டி அமர்ந்தார்.

இந்த வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்திருந்த நிலையில் எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, யாழ்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலமளித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ், இந்த விவகாரம் தொடர்பில் தன்னைவிடவும் உங்களுக்கு நிறையவிடயம் தெரியுமென சாட்சியமளித்துள்ளாரே என, தினேஷ் குணவர்தன எம்.பியை பார்த்துக் கேட்டார். அத்துடன் அந்த  விவகாரம் தொடர்பான சூடு தணிந்துவிட்டது.  

மஹிந்தவுக்கு, இராணுவ அதிகாரிகள் 12 பேர் உட்பட 89 இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கினர். அவர்களில் 50 பேர், இராணுவத் தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பியழைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் எதிர்காலத்தில் திருப்பியழைக்கப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X