2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'தாஜூதீனின் மரணம் கொலைக் குற்றமாகும்': சந்தேகநபர்களை கைதுசெய்து ஆஜர்படுத்த உத்தரவு

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய றகர் அணியின் வீரரான வசீம் தாஜூதீனின் மரணத்தைக் கொலைக் குற்றமாகக் கருத்திற்கொண்டு, அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ், நேற்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.

நீதிமன்ற வைத்திய அதிகாரி, அரச இரசாயனப் பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட ஆறு அறிக்கைகளைக் கவனத்திற்கொண்டே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

வெள்ளவத்தை முருகன் வீதியை வசிப்பிடமாக கொண்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், நாரஹேன்பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து, 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக, அந்தக் காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.

அவருடைய சடலம், மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதெனவும் பொலிஸார், நீமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர், பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைகால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டுவரப்பட்டிருந்தது.

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் மரணம், விபத்தினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசியப் பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு, கடந்தாண்டு ஜூலை 27 ஆம் திகதியன்று கொண்டுவந்திருந்தனர்.

பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகன், இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் இதற்கு முன்னர் கூறியிருந்தமையும் தெரிந்ததே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .