2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

'புலி தலைதூக்காது': சி.வி.கே

Kanagaraj   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும், மீண்டும் தலைதூக்காது. தமிழ் மக்கள், ஒருபோதும் மீண்டுமொரு யுத்தத்துக்குள் தள்ளப்பட மாட்டார்கள். தெற்கைச் சேர்ந்த சில அரசியல் சக்திகளுக்கே, யுத்தமொன்றின் தேவை அவசியமாகியுள்ளது' என்று வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துரைக்கையில், 'புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தனித்தீர்மானத்துக்கு அமையவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அவர் மரணித்ததை அடுத்து, அவ்வியக்கத்துக்கு உயிர்கொடுக்க எவரும் இல்லை' என்றார்.

'உலக நாடுகள் பலவற்றில், புலி இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்கியிருக்கின்றனர். இருப்பினும், பிரபாகரன் இல்லாத சூழலுக்குள் ஆயுதப் போராட்டமொன்றை நடத்துவதற்கு எவரம் இல்லை. அதனை வேறு யாராலும் செய்யவும் முடியாது. பிரபாகரனின் தனித்தீர்மானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. தமிழ் மக்கள், மீண்டும் இவ்வாறானதோர் ஆயுதப் போராட்டத்துக்கோ அல்லது யுத்தமொன்றுக்கோ போகப்போவதில்லை. அவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை' என்றும் அவர் கூறினார்.

'இருப்பினும், தெற்கைச் சேர்ந்த சிலஅரசியல் சக்திகள், அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வாய்க்கு வந்தவையெல்லாவற்றையும் பேசித் திரிந்துகொண்டிருக்கின்றனர். நாட்டில், மீண்டுமொரு யுத்தம் உருவாகப்போகிறது என்று அவர்கள் கூறும் கருத்துக்கள், அவர்களுக்கே அந்த யுத்தத்தின் அவசியம் காணப்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. தவிர, தமிழ் மக்களுக்கு மீண்டுமொரு யுத்தம் தேவையில்லை.

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் தங்கொலை அங்கிகள் என்பன, சுமார் பத்து வருடங்கள் பழமையானவையாகவே இருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். இவ்விடயத்தை வைத்துக்கொண்டு, அரசியல் இலாபம்பெற எண்ணும் சூத்திரதாரிகளின் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று அவைத்தலைவர் சிவஞானம் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X