2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘மனோவையும் சந்திரிகாவையும் கைது செய்யவும்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படும் அமைச்சர் மனோ கணேசனையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 

“நானோ, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவோ அல்லது கலபொட அத்தே ஞானசார தேரரோ, நல்லிணக்கத்தைச் சீர்க்குலைப்பவர்கள் அல்லர்” எனவும் அவர் குறிப்பிட்டார். 

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைமையகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“புதிய வரித் திருத்தமானது, அரசியலமைப்பின் 3ஆம், 4ஆம், 12ஆம், 14ஆம் அத்தியாயங்களை மீறும் வகையிலேயே, அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.  

கடந்த மே மாதம் 2ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 11ஆம் திகதி வரை, சட்டவிரோதமான முறையில் அறவிடப்பட்ட வரியை சரியாக்கும் முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதனை மாற்றியமைக்க, சட்டமொன்றை இயற்றுவது குறித்தும் அது பேச்சு நடத்தி வருகின்றது. 

இந்தக்  காரணங்களுக்காகவே, நாம் புதிய வரித் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளோம். இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப, இந்தப் புதிய திருத்தமானது, அரசியலமைப்பின் 3ஆவது அத்தியாயத்தை மீறும் வகையில் காணப்பட்டால், நிச்சயமாக சர்வஜன வாக்குரிமைக்குச் சென்றே அரசாங்கத்தால் இந்த வரித் திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.  

நாம் நல்லிணக்கத்தை சீர்க்குலைப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் சி.மயூரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால், எம்மை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள், அமைச்சர் மனோ கணேசனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுமே ஆவர். எனவே, அவர்களையே முதலில் கைது செய்ய வேண்டும்” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .