2025 மே 15, வியாழக்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம் பூரணமான விசாரணை அவசியம் : முஸ்லிம் கவுன்ஸில்

Kanagaraj   / 2015 ஜூலை 22 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய அரசு ஒன்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து, சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இலங்கையர் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி, சட்டத்தை எவரேனும் மீறியிருப்பார்களாயின் அவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் இந்த பயங்கரவாத இயக்கத்தில் இலங்கையர் மேலும் சேராதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில், முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீனினால் -ஜூலை 21ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

'ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட முதலாவது இலங்கையர் தொடர்பில் ஊடகங்களில் வெளியான அறிக்கைகளையிட்டு முஸ்லிம் சமுதாயம் சார்பில் இலங்கை ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.

கலீபா தேசம் எனவும் இஸ்லாமிய அரசு எனவும் தம்மை தாமே கூறிக்கொண்டு திரியும் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர், இஸ்லாத்துக்கு எதிரானவர்களாக இருப்பதுடன் ஷரியா சட்டத்துக்கும் மனிதாபிமான சட்டத்துக்கும் அச்சுறுத்தலாகவும் உள்;ளனர்.

இஸ்லாமானது பரிவு, சகிப்புதன்மை என்பவற்றை கடைப்பிடிக்கும் ஒரு மதம். அப்பாவிகளின் உயிர்களை பறிப்பதற்கு அது தடைசெய்துள்ளது. பயங்கரவாதி அல்லது வன்முறை வழியாக மேற்கொள்ளப்படும் கொடூரங்களுக்கு சமய அடிப்படை எதுவுமே இல்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் அதன் தலைவர் அபூ பக்கீர் அல் பக்தாதியும், இஸ்லாமிய போதனைகளை மதிக்கத் தவறியதை கண்டிக்கும் உலகிலுள்ள முஸ்லிம் தலைவர்களுடனும் இஸ்லாமிய அறிஞர்களுடனும் இலங்கை முஸ்லிம்கள் இணைந்துள்ளனர். அவர்களின் செயல்கள் இஸ்லாமுக்கு எதிரானவை, மனித தன்மை அற்றவை. இந்த குரூர செயல்கள், வழிதவறிப்போன சிலருடையது என்பதை வலியுறுத்தி கூறுகின்றோம். 

இந்த விவகாரம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும். நாட்டின் சட்டத்தை எவரேனும் மீறியிருப்பின், அவர்களை தண்டிக்க வேண்டும். இந்த பயங்கரவாத இயக்கத்தில் இலங்கையர் மேலும் சேராதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தங்களிடமும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்' என அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .