2025 மே 15, வியாழக்கிழமை

சி.வி தொடர்பில் தேர்தலின் பின்னர் சம்பந்தர் தீர்மானம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என்ற, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அறிவிப்பு தொடர்பில், பொதுத் தேர்தலின் பின்னரே அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

பிரித்தானிய வானொலியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், 'கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற தீர்மானம் குறித்து விக்னேஸ்வரன், தனக்கு அறிவிக்கவில்லை எனவும் இது தொடர்பில் தேர்தலின் பின்னர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடப்போவதாகவும்' குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்காக மேடையேறி பிரசாரம் செய்யமாட்டேன் என்றும் நடுநிலைமையாக செயற்படுவேன் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் அறிவித்தார். 

வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ஆம் ஆண்டில் பொது வேட்பாளராக தான் நிறுத்தப்பட்டதாகவும் பதவிக்கு வந்ததும், கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பல, தான் நடுநிலை வகிக்கவில்லையே என்று குறைபட்டுக்கொண்டதாகவும் முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற முறையில் பக்கச்சார்பற்று நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டியிருந்த விக்னேஸ்வரன், அவ்வாறானதொரு பிரச்சினை மீண்டும் எழாமல் இருப்பதற்காகவே நடுநிலை வகிக்கப்போவதாக விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .