2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

CTA தொடர்பான தேசிய பாதுகாப்பு குறித்து துறைசார் மேற்பார்வை

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. நிரோஷினி

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) சம்பந்தமான கொள்கை மற்றும் சட்ட வரைவுகளுக்கு, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையன்று, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், குறித்த செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை மற்றும் சட்ட வரைவுகள், தேசியப் பாதுகாப்புக்கான துறைசார்  மேற்பார்வைச் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுகளின் அங்கிகாரத்துக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், அமைச்சரவையில் இது சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தச் சட்டவரைவு, தேசிய பாதுகாப்புப் பற்றிய நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவிடமும் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது,  தொடர்பாக அவர்களது கருத்துகளை, ஒரு மாதகாலத்துக்குள் தருமாறு கோரிய பிரதமர் ரணில், அவர்களின் கருத்துகளுக்கு அமைவாக, வரைவுச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு, சட்ட வரைவாளருக்கும் பணிப்புரை விடுத்தார். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக, சட்டம் மற்றும் ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க  தலைமையில் செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பதில் அமைச்சர் பரணவிதான, பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும் மனித உரிமைகள் பொறுப்புத் தொடர்பாக இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதிசெய்வதற்கும் ஏற்றவாறு, இந்தச் சட்டமூலத்தின் வரைவு அமையுமாறு கோரப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். 

அதன்படி, குறித்த செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை மற்றும் சட்ட வரைவுகளே, அமைச்சரவையால் அங்கிகரிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைச் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும் கருத்துத் தெரிவித்த பதில் அமைச்சர் பரணவிதான, புதிய சட்டத்தின் கீழ் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து, தனது அமைச்சின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையொன்றை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவும் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை எதிர்த்துச் செயற்படும் அதே நேரத்தில், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயம் தொடர்பாக, உலகளாவிய ரீதியில் தற்போது காணப்படும் போக்குக் குறித்த விடயங்கள், அமைச்சர் மங்களவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .