2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அநாமதேய ஆதாரங்களுடன் அறிக்கை தயாரிப்பு: இணைந்த எதிரணி குற்றச்சாட்டு

Gavitha   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

மனித உரிமைகளின் ஐக்கிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கு வழங்கப்படுவதற்கான கடிதமொன்றை, இலங்கையின் இணைந்த எதிரணி நேற்றுச் சமர்ப்பித்துள்ளது.

இணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்களால் கையொப்பமிடப்பட்ட இந்தக் கடிதம், கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டதோடு,  ஊடகங்களிடமும் வழங்கப்பட்டது. எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, சிசிர ஜயக்கொடி ஆகியோர், இந்தக் கடிதத்தை வழங்கினர். அதன் பின்னர், ஊடகங்களிடமும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

ஆயுதப் படைகளுக்கெதிராக, கடுமையான குற்றச்சாட்டுகளைக் கொண்ட அறிக்கையொன்றை, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தயாரித்துள்ளதாக, இந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினர், போர்க் குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டுமென்பதற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க நிலவரம் காணப்படுவதாக, குறித்த அறிக்கையின் பின்பகுதியில் காணப்படுவதாகவும், இக்கடிதம் தெரிவிக்கிறது. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் இணைந்த எதிரணி, அநாமதேய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறான முடிவுகளுக்கு வருவது, சர்வதேச சட்டத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நெருக்கடிகளைச் சந்தித்த நாடுகளோடு ஒப்பிடும்போது, இலங்கை மீது முன்வைக்கப்பட்ட அழுத்தம், நியாயப்படுத்தப்பட முடியாத அளவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கும் இக்கடிதம், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை, அதனது ஆணையை மீறிச் செல்வதாகவும், அதனை ஊடுருவும் ஒன்று என வர்ணித்துள்ளது.

'தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களைக் கையாள்வதில், சம அளவிலான செயற்பாடு காணப்படவில்லை. இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, வைத்தியசாலைகளையும் ஏனைய சுகாதார வசதிகளையும் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது என்ற முற்றிலும் முரணான கண்டுபிடிப்பு மூலம், இது உறுதிப்படுத்தப்படுகிறது' என, அக்கடிதம் மேலும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X