Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அநுராதபுரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள், தங்களது விடுதலை தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்தப்போக்குத் தொடர்வதாகத் தெரிவித்து, இன்று (28) முதல்,
அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவிகளையும் தவிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புத் தெரிவித்துள்ளதோடு, அரசாங்கத்துக்கு அரசியல் கைதிகள் வழங்கியுள்ள இறுதி சிவப்பு எச்சரிக்கை இதுவெனவும், இவர்களின் விடுதலை தொடர்பில் அசமந்தப்போக்குத் தொடருமாயின், நீராகாரத்தையும் அவர்கள் புறக்கணிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பால், கொழும்பில் காலி முகத்திடலுக்கு முன்பாக மாபெரும் போராட்டம் ஒன்று நேற்று (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் தொடர்பில் தமிழ் மிரருக்கு கருத்துரைக்கும்போதே அந்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அசமந்தப் போக்கு தொடருமாயின் நாட்டில் ஏற்படப்போகும் அரசியல் கொந்தளிப்புக்கு, அவர் முகங்கொடுக்கத் தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சிரித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகள், 14 நாள்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், எழுந்து நிற்கவும் பேச முடியாத நிலையிலும் அவர்களின் உடல் நிலை படுமோசடைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நிலை படுமோசடைந்திருக்கும் இவர்கள், மருத்துவ உதவிகள், நீராகாரங்களைத் தவிர்த்துப் போராட்டத்தில் ஈடுப்படப்போவதால், பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எடுத்துரைத்தார்.
வாழ்க்கையின் பாதிநாள்களை சிறைச்சாலையில் கழித்த அவர்கள், மீதி நாள்களையாவது வாழ விரும்பி ஆரம்பித்திருந்த போராட்டம், அவர்களின் மரணத்தில் முடிவடைந்துவிடுமோ என்ற பயம், ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் தொற்றியுள்ளதாகவும் இதன்போது அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக்கைதிகள் தொடர்பான முடிவை, 2 அல்லது 3 நாள்களுக்குள் வழங்குவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற கூட்டத்தில், சட்டமா அதிபரால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும், அவரின் வாக்குறுதியை நம்புவதற்கு அரசியல் கைதிகள் தயாராக இல்லை என, அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும், அவர்களுக்கு இருக்கும் இறுதி நம்பிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே எனவும் தெரிவித்த அவர், ஆகவே ஜனாதிபதியும் அவர்களை ஏமாற்றிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் பின்னர், ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டதெனவும், ஜனாதிபதி வெளிநாடு சென்றிருப்பதால், குறித்த மகஜர், ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் அருனி சோமாரட்ணவிடம் கையளிக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால் கூட, இத்தனை ஆண்டுகள் அவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டிய தேவை வந்திருக்காது எனவும், ஆகவே எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவர் மேலும் கோரினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago