2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அமைச்சரவையில் கடும் வாய்ச்சண்டை

Kanagaraj   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குமிடையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் வைத்து, பிக்கு ஒருவர் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த கருத்துக்கு, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்புக் கோரியமைக்கு, சரத் பொன்சேகா எதிர்ப்புத் தெரிவித்தையடுத்தே, இந்தத் தர்க்கம் ஏற்பட்டது.

கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் சரத் பொன்சேகா, ஓர் அமைச்சர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புணர்ச்சியை மீறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்ததையடுத்தே, இருவருக்குமிடையில் இத்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்போது, அமைச்சர் பொன்சேகா, 'பிக்குவொருவரால் முன்வைக்கப்பட்ட கருத்துத் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நான் கருத்தொன்றை முன்வைத்தேன்.

ராஜபக்ஷக்களுக்குப் பின்னால் யார் செல்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பியதாலேயே, இந்தக் கருத்தை நான் முன்வைத்தேன். எனக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தின்போது இடம்பெற்ற சில விடயங்களை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய தேவையேற்பட்டது. இன்னும் ராஜபக்ஷவுக்கு வால்பிடிக்கும் நடவடிக்கைகளைச் சிலர் மேற்கொள்கின்றனர். அவ்வாறு செய்ய முடியுமா?

ஓர் அமைச்சர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புணர்ச்சியை மீறிச் செயற்படுகின்றார் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் எனக்கு ஏற்பட்டது. இது, எங்களுடைய அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு தேவையாகும். எனினும் சில அமைச்சர்கள், ராஜபக்ஷவுக்கு வால்பிடிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. என்னுடைய இந்த உரைக்கு ஏனைய அமைச்சர்கள் மன்னிப்புக் கோரவேண்டிய தேவையில்லை' என அவர் கடுந்தொனியில் உரையாற்றினார்.

அதன்போது எழுந்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, 'அதை நான் அரசாங்கத்துக்காகவே செய்தேன். தேரர்களை ஏசிவிட்டு, அவர்களுடைய ஆசீர்வாதத்துடன் அரசாங்கத்தைக் கொண்டுநடத்த முடியுமா? நான் அரசாங்கத்தின் சார்பிலேயே மன்னிப்புக் கோரினேன். அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தான் மன்னிப்புக் கோரவேண்டியிருக்கும் என்பதால் தான், நான் மன்னிப்புக் கோரினேன். ஏனெனில், பிக்குகளின் ஆதரவின்றி அரசாங்கமொன்றை நடத்த முடியாது' என்றார்.

மீண்டும் எழுந்த அமைச்சர் பொன்சேகா, நான் எந்தவோர் அமைச்சரின் பெயரையும் பெயர்குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனினும் உண்மையை அறிந்த அவ்வமைச்சர், உண்மையை அறிந்து பதிலளித்துவிட்டார் என்று கூறுகையில், குறுக்கிட்டு எழுந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்விருவருக்குமிடையிலான வாய்த்தர்க்கத்தை நிறுத்துமாறு கூறியதுடன் இவ்விருவரின் கருத்துகளும் பெறுமதியானவை எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X