2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அமைச்சரவை விரிவாக்கம்:சபையில் பெருஞ் சலசலப்பு

Kanagaraj   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சும்மா அமைச்சர்கள் எத்தனைபேர்?: விமல';
எனக்குக் கணக்குத் தெரியாது: சபாநாயகர்
வாங்க கதிரைகள் இருக்கின்றன: லக்ஷ்மன்
சூத்திரத்தைப் போட்டுப் பாருங்க: விஜயதாஸ
தேசிய அரசாங்கம் போயிடுமா?: மரிக்கார்


நல்லாட்சி அரசாங்கத்தில், அமைச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதன் எண்ணிக்கையை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதனால், அவற்றை உடனடியாக சொல்லவேண்டுமென, கூட்டு எதிரணியினர் கோரியமையால் சபையில் நேற்றுப் புதன்கிழமை பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்தததன் பின்னர் எழுந்த விமல் வீரவன்சஎம்.பி, நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கின்ற இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், அமைச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இன்றைய தினமும் (நேற்று) மூவருக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எத்தனை பேர், இராஜாங்க அமைச்சர்கள் எத்தனை பேர், பிரதியமைச்சர்கள் எத்தனை பேர், சும்மா அமைச்சர்கள் எத்தனைபேர் என்பதனை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என வினவினார்.

குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் முதலாவது பிரேரணையை, மே மாதத்தில் விவாதத்துக்க எடுத்துக்கொள்ள, கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. இரண்டாவது தொடர்பில் சட்ட ஆலோசனைப் பெறவேண்டும். அத்துடன், அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான கணக்கு வழக்கு, எனக்குக் தெரியாது. அது, என்னுடைய வேலையும் இல்லை என்றார்.

இதனிடைய ஏழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்,  தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற எம்.பிக்கள், தாங்கள் சுயாதீனமாக விலகிக்கொள்வதாக அறிவித்தால், தேசிய அரசாங்கம் இல்லாமல் போகுமா என்று வினவுகையில், அவையில் கூச்சல் சத்தம் காதுகளை கிழித்துச்சென்றது.

கூச்சல்களுக்கு மத்தியில், மரிக்கார் எம்.பி கூறுவதை சபாநாயகர் ஹெட்செட்டை போட்டு கேட்டபோதும், சபாநாயகருக்கு விளங்கவில்லை போலும், சபாநாயகர் பதிலளிக்காமையால் மரிக்கார் எம்.பியும் அமர்ந்துகொண்டார்.

இந்தக் கூச்சலுக்கு மத்தியில் எழுந்த அவைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, 'எழுந்திருப்பவர்கள் எங்கள் பக்கத்துக்கு வர நினைக்கின்றீர்கள். வாங்க, வாங்க, இந்தப்பக்கத்தில் கதிரைகள் வெறுமையாகதான் இருக்கின்றன' என்றார்.

இதனிடையே, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, 'ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்)சட்டமூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றுவதற்கு ஆரம்பித்தார். எனினும், எழும்பியிருந்த கூட்டு எதிரணி உறுப்பினர்கள் விடுவதாய் இல்லை.
கூச்சலிட்டுக்கொண்டே, எண்ணிக்கையைக் கூறுங்கள், எண்ணிக்கையைக் கூறுங்கள் என்று பிடித்தபிடியாய் நின்றனர்.

'சரி கூறுகின்றேன்' எனக்கூறிய,  அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அதற்கு ஒரு சூத்திரம் இருக்கின்றது. பொது எதிரணியிலிருந்து எத்தனை பேர், அமைச்சரவையில் இருக்கின்றனர் என்பதைப் பார்த்தால் கணக்குச் சரியாகிவிடும் என்றுக்கூறி உரையை ஆரம்பித்தார்.

இதற்கிடையே எழுந்த, ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, 'அவையில் தற்போது நின்று கொண்டிருக்கின்றவர்களும் அமைச்சுப்பதவிகளைக் கேட்டனர்' என்றுகூற, எண்ணிக்கையை மறைக்கவேண்டிய அவசியமில்லை என்று கூட்டு எதிரணியின் எம்.பியான சந்திரசிறி கஜதீர கூறினார்.

சரி, சரி அமைச்சரவையின் எண்ணிக்கையை நாளை தருகின்றோம் எனக்கூறி அமைச்சர் விஜயதாஸ உரையைத் தொடர்ந்தார். அதன் பின்னரே, அவை அமைதிக்குத் திரும்பியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X