2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அரச அதிகாரிகளை கைதுசெய்வதில் சிக்கல்

Kanagaraj   / 2016 ஜூன் 09 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்காது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரச அதிகாரிகளைக் கைது செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்டும் நேரத்தில், சுனில் ஹந்துநெத்தி கேட்டிருந்த கேள்விகளை அடுத்து, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக எழுந்த சுனில் ஹந்துநெத்தி எம்.பி, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் எண்ணிக்கை, நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட கோவைகள், விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அக்கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் 44 விசாரணைகள் நிறைவடைந்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் 06 கோவைகள், நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில குட்டிபோடுகின்றன. ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் இன்னும் கையளிக்கப்படவில்லை என்றார்.

குறுக்கிட்ட அநுரகுமார திஸாநாயக்க கடந்த 18ஆம் திகதியன்று அப்பிரிவிடமிருந்து கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில், அரச அதிகாரிகள் அறுவருக்கு எதிராகச் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அதிலிருவர், உங்கள் (பிரதமர்) காரியாலயத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறானவர்களுக்கு எதிராக ஏன் இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பிரதமர் காரியாலயத்திலா வகைப்படுத்தி தேரிந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது என்று வினவினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், அவ்வாறான தேவை, பிரதமர் காரியாலயத்துக்கு இல்லை. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் கோவைகள் அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரச அதிகாரி-களுக்கு எதிராக குற்றஞ்சாட்டு நடவடிக்கைகளை எடுக்கும் போது, அரச செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்வதற்கான கையொப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த நிலைமையால் அரசாங்க பொறிமுறை செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .