2025 ஜூலை 12, சனிக்கிழமை

’அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன்’

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

கண்டி மாவட்டம் என்பது விடுபட்ட மாவட்டமாகவே உள்ளது. அந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு, தமிழ் பிரதிதிநித்துவம் ஒன்றும் அவசியம் என்பதால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ், கண்டி மாவட்டத்தில் தான் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளதாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட வேட்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள எமது மக்களுக்கு, அரசியல் ரீதியான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே, தனது எதிர்பார்ப்பு என்றும் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இம்முறைப் பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு  வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, தனக்கு அந்த மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“கண்டி மாவட்டத்திலுள்ள எமது மக்களுக்கு, அரசியல் ரீதியான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே, எமது எதிர்பார்ப்பு. நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், ஏனைய மாவட்டங்களுக்குக் கிடைக்கின்றனவா என்பது கேள்விக்குறி” என்றார்.  

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூக்கும் கண்டி மாவட்டத்துக்கும் இடையிலான இணைப்பில் விரிசலொன்றுக் காணப்படுவதாகவும் மக்களுக்கும் இ.தொ.காவுக்குமான  தொடர்பாடலிலுள்ள சிக்கலே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

நான்கு வருடங்களில் தமக்கிருந்த வழங்களைப் பயன்படுத்தியே, கண்டி மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொண்டதாகவும் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான உட்கட்டமைப்பு வசதிகளை, கண்டி மாவட்டத்தில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

அத்துடன், ஆரம்பக்கட்டமாக 500 வீடுகளைக் கட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் இந்த வீட்டுத்திட்டங்கள், கண்டி மாவட்டத்தில், புஸ்ஸல்லாவ, நாவலப்பிட்டிய, கலஹா- தெல்தொட்ட, ரங்கல, மடுல்கல, பன்வில ஆகியப் பகுதிகளில், 'மலையக எழுச்சி' எனும் தொனிப்பொருளில், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில், கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நூற்றுக்கு தொன்னூறு சதவீதமான வீட்டுத் திட்டங்களில், வெறும் வீடுகள் மட்டுமே உள்ளன என்றும் வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் எவையும் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக பாதை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில், செல்லுபடியாகின்ற காணி உறுதிப்பத்திரங்கள் எவையும் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

கண்டி மாவட்டத்தில், கடந்த அரசாங்கத்தில் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டனவேத் தவிர அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது கேள்விக் குறி என விமர்சித்த அவர், கண்டி மாவட்ட இளைஞர்களை, சுயத்தொழில் வேலைவாய்ப்புகளுக்குள் உள்வாங்குவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை,  முன்னெடுப்பதே தனது பிரதான இலக்கு என்றும் தெரிவித்தார்.

அத்துடன் பெருந்தோட்டத்தில்,  சுகாதாரத்துறையை  மேம்படுத்துவதே, தனது அடுத்த இலக்கும் என்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைவாக, பெருந்தோட்ட சிறுவர்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களின் தேவைகள், இளைஞர், யுவதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே தனது எதிர்கால இலக்கு என்றும் அதற்காக இ.தொ.கா தலைமையிலான இளைஞர் படையணி ஒன்று செயலுருவாக்கம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.  

மக்களின் அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதால், தான் விமர்சன அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றுத் தெரிவித்த அவர், பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தை  90சதவீதமான வாக்குகளால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிக்கொள்ளும் என்றும் அந்த வெற்றியிலும் இ.தொ.கா சார்பாக தானும் பங்குதாரராக அமையப்போவதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .