2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

Janu   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விடுவிக்கப்படாது இலங்கை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கொள்கலனை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (20) அன்று இடம்பெற்ற நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றுகையிலேயே மஸ்தான் எம்.பி இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புனித அல்-குர்ஆனை அரபு மொழியில் மீள் பிரசுரிக்கவும் ஏனைய மொழிகளில் மொழிபெயர்த்து பிரசுரிக்கும் உத்தியோகபூர்வமான உரிமை சவுதி அரேபியா அரசின் "மன்னர் பஹத் அல்-குர்ஆன் பிரசுரிப்பு நிலையம்" கொண்டுள்ளதை உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து வாழும் 200 கோடி முஸ்லிம் மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், உலகின் அனைத்து நாடுகளும் அங்கீகரித்துள்ளது.

உஸ்மானிய கிலாபத் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனிதப் பணிக்கான பதிப்புரிமையும், தனித்துவத்தன்மையும், புனிதத்துவமும் களங்கமின்றி இன்றுவரை பேணிக்காக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம், பிரேன்சு, ஜேர்மனி, ரஷ்யா, சீனா, ஸ்பானிய, ஹிந்தி, உருது. சிங்களம், தமிழ்,  ஜப்பான், மலையாளம், கொரியா, நேபாளம் உள்ளிட்ட ஐம்பதிற்கும் அதிகமான மொழிகளில் இந்த இறை வேதம் மொழிபெயர்க்கப்பட்டு எவ்வித அடிக்குறிப்புக்களோ அல்லது தனிக்கைகளோ இன்றி மக்கள் கைகளை அடைந்துள்ளது.

இந்தப் பின்னணியில் இரு புனிதத் தலங்களின் பணிப்பாளர் சவூதி அரசின் அப்போதைய மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸின் பணிப்புரையில் இஸ்லாமிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மார்க்கத் தீர்ப்புத் துறையின் பிரதம பிரசாரகர் அஷ்ஷேக் முஹம்மது இக்பால் மதனீயின் தலைமையில் இந்த தமிழ் மொழிபெயர்ப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்த தமிழ் மொழிபெயர்ப்பை ஒப்பு நோக்கிச் சரிபார்க்கும் பணியில் இலங்கையைச் சேர்ந்த தலைசிறந்த உலமாக்களான, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (மறைந்த) பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மது மக்தூம் அஹ்மது முபாரக்  உள்ளிட்ட, பேராசிரியர் அஷ்ஷேக் முஸ்தபா மௌலானா, அஷ்ஷேக் அபூபக்கர் ஸித்தீக், கபூரிய்யா அரபுக் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா முஹம்மது ஸயீத் ஆகியோர் 1993 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டமை எமது நாட்டுக்குக் கிடைத்த கௌரவமாகும்.

இந்த புனித அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர். கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் எவ்வித தடங்கலுமின்றி விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் வடிவில் பல்வேறு வலைத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன. இந் நிலையில் 2024 மே மாதம் 16 ஆம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களத்தில் புனித அல்குர்ஆன் பிரதிகளைச் சுமந்த கொள்கலன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கலனில் இருந்த ஆவணங்களில் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகளின் எண்ணிக்கை என்ன?

அவற்றில் இதுவரை எத்தனை அல்-குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன?. எத்தனை பிரதிகள் விடுவிக்கப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன? அதற்கான காரணம் என்ன? என்றும் வினவினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X