2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’ஆறுமுகனின் மறைவு மலையக தமிழ் சமூகத்தை வாட்டுகின்றது’

Editorial   / 2020 மே 27 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஆறுமுகன் தொண்டமானும், நானும் வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரே இலக்கை கொண்ட நதிகள். இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்” என,  முன்னாள் அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார். 

அத்துடன், “மறைந்த நண்பர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடும்படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தோழர்களையும், அனைத்து  மக்களையும் கோருகிறேன்” என,  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் தமுகூ தலைவரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள இந்நாட்டில், பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள், கட்சிகள், அரசாங்கங்கள் மத்தியில் நாம் சுழியோடி எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எமது மக்களுடைய எதிரிகளுடன், எமக்கு உடன்பாடுள்ள அனைத்து வழிமுறைகளிலும் நாம் போராடுகிறோம், சண்டையிடுகிறோம், முரண்படுகிறோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரசின் மறுவடிவம். அந்த உறுதியான ஆரம்பமே இன்று ஒரு தொழிற்சங்கமாகவும், அரசியல் கட்சியாகவும் இதொகாவை நிலைநிறுத்தி  இருக்கிறது. 

இலங்கை இந்திய காங்கிரஸ் காலத்தில் இருந்தே அதற்குள், நிகழ்ந்து வந்த கோட்பாட்டு முரண்பாடுகள் காரணமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிறந்தது. 

அந்த சிந்தனையே இன்று ஜனநாயக மக்கள் முன்னணியாக, இன்று சகோதர கட்சிகளுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியாக பரிணமித்துள்ளது.

இதொகாவை விட்டு, பலர் பல காரணங்கள காரணமாக பிரிந்து சென்ற போதெல்லாம், அதை பலவீனமடைய விடாமல் கொண்டு நடத்தியவர் ஆறுமுகன் தொண்டமான். 

மலையக தமிழ் மக்களின் நலன்களை தனக்கே உரிய, தான் நம்பும் வழிமுறைகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.

அவர் இந்த வயதில் இறந்திருக்க கூடாது. இன்னமும் வாழ்ந்து இருக்க வேண்டும்.  நமது மக்கள் எதிர்நோக்கும் சவால் மிக்க இன்றைய காலகட்ட பின்னணியை கணிக்கும் போதே ஆறுமுகன் தொண்டமானின் திடீர் இழப்பின் ஆழம் புரிகின்றது. வேதனை விளங்குகிறது. 

அவருடன் அரசியல்ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது இன்றைய மறைவின் வெறுமை தெரிகின்றது.

கடந்த வருடம் இதே மே மாத இறுதியில் புது டில்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று அன்றைய நமது நாட்டு ஜனாதிபதியின் தூதுக்குழுவில் நாம் இருவரும் பயணித்தோம். 

அதுவே நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் ஒன்றாய் கலந்துக்கொண்ட இறுதி வெளிநாட்டு நிகழ்வு.

இதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன், 2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இலங்கையின் அனைத்து தமிழ் பேசும் அரசியல் கட்சி தலைவர்களின் மாநாட்டில் நானும், அவரும் கலந்துக்கொண்டோம்.

இந்நிகழ்வுகளில், நமது மக்களின் நல்வாழ்வு தொடர்புகளிலும், அரசியல் முரண்பாடுகள் மத்தியில் எங்கெங்கே இணைந்து செயற்படலாம் என்பது பற்றியும், நண்பர் ஆறுமுகமும், நானும் நடத்திய கலந்துரையாடல்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.  

2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகள் மாநாட்டில், நண்பர் பெரியசாமி சந்திரசேகரனும் கலந்துக்கொண்டார். 

இன்று சந்திரசேகரனும் இல்லை. அவரும் தனது 53 வயதில் இறந்து போய் விட்டார்.  இன்று நண்பர் ஆறுமுகன் தொண்டமானும் தனது 56 வயதில் இறந்து போய் விட்டார். 

இந்த வெறுமை இன்று மலையக தமிழ் சமூகத்தை வாட்டுகின்றதை நான் உணருகின்றேன். இந்த சவால்களை நாம் ஒருமுகமாக எதிர்கொள்ள திடசங்கற்பம் பூணுவோம்” என, மனோ கணேசன் கூறியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .