2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இராவணபலய, தங்கள் அமைப்பின் பெயரை மாற்ற வேண்டும்: மனோ

Thipaan   / 2015 நவம்பர் 21 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயினா தீவு பெயர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து இருக்கும்  இராவண பலய என்ற தீவிரவாத அமைப்பினர், முதலில் தங்கள் அமைப்பின் பெயரை  மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இராவண வேந்தன், இலங்கை தீவின் விபூதி தரித்த பண்டைய திராவிட சைவ மன்னன் என்பது வரலாறு சொல்லும் உண்மை.

தங்கள் அமைப்பின் பெயரையே ஒரு தமிழ் மன்னனின் பெயரில் வைத்துக்கொண்டு இருக்கும் இந்த குழுவினர் எவ்விதம், இந்நாட்டின் அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் மாற்றப்போகின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.

 நாகபூஷணி அம்மன் ஆலயமும், நாகவிஹாரையும் அமைந்துள்ள தீவின் பெயர் என்ன என்பதை 60 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் மாவட்ட செயலக நிர்வாக பதிவுகள், தபால்-தந்தி அலுவலக பதிவுகள் மற்றும் தேர்தல் செயலக நடைமுறைகள்  காட்டும். அந்த பகுதியில் நிரந்தரமாக வாழும் மக்கள் அந்த தீவை எப்படி அழைக்கின்றார்கள் என்பதையும்  நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இலங்கையில் எல்லாம் எமக்கு மட்டுமே சொந்தம் என்ற கொள்கையை இனி எவரும் முன்னெடுக்க முடியாது. இந்த  நாடு பல இனங்கள், பல மதத்தவர்கள், பல மொழிகள் பேசுபவர்கள் வாழும் நாடு என்பது ஓர் அடிப்படை உண்மை. இந்த அடிப்படையில் இருந்துதான் நாம் நாட்டை கட்டி எழுப்ப வேண்டும்.

இந்த அடிப்படையில் இருந்துகொண்டுதான் நாம் அரசுக்கு உள்ளே இருக்கின்றோம். தமிழ் இந்துக்கள் இந்த தீவின் பெயரை நயினாதீவு என்றும், சிங்கள பௌத்தர்கள் நாகதீப என்றும் பேச்சு வழக்கில் அழைத்துக்கொள்ளட்டுமே.

அதிகாரப்பூர்வ பெயர் என்ன என்பதை ஆரம்பகால அரச நிர்வாக பதிவுகள் காட்டட்டுமே. நம்நாட்டின் பெயர் சிங்களத்தில் 'ஸ்ரீ லங்கா' என்றும், தமிழில் 'இலங்கை' என்றும் அழைக்கப்படவில்லையா? எனவே இதை எல்லாம்  வைத்துக்கொண்டு இனவாத அரசியல் செய்ய எவரையும் இனி அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .