2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இலங்கைக்கு நிபுணத்துவ பயிற்சி

George   / 2016 ஜனவரி 15 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஊழலை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஊழலுக்கெதிரான பயிற்சிகளையும் இலஞ்சத்துக்கெதிரான நிபுணத்துவத்தையும் ஐக்கிய இராச்சியம், இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறது' என்று இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாடு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான இராஜாங்க அமைச்சரான ஹியூகோ ஸ்வையர் தெரிவித்தார். 

3 நாட்களுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (14) இலங்கை வந்தடைந்த அவர், பிரித்தானியாவுடன் வணிகத்துக்கான சபையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பில் இலங்கையின் நிலை எவ்வாறுள்ளது எனக் கேட்கப்பட்டபோது, 'இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம், மிகவும் ஆதரவாக இருக்கிறது. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை விடயத்தில், அதைப் பெறும் நிலையில் இலங்கை இருக்கிறது. அது கிடைப்பதற்கு, இன்னும் ஓரிரு படிகளை எடுக்க வேண்டியிருக்கிறது' என அவர் பதிலளித்தார்.

முன்னதாக, அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஸ்வையர், ஒரு வருட காலத்துக்குள், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையிலான உறவில், பாரியளவிலானதும் வரவேற்கத்தக்கதுமான சூழல் மாற்றமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் வைத்து, கடந்தாண்டு செப்டெம்பரில், மனித உரிமைகளுக்காக இலங்கை வழங்கிய அர்ப்பணிப்புகளை ஞாபகமூட்டிய அமைச்சர், அந்த அர்ப்பணிப்புகள், உண்மையையும் பொறுப்புக் கூறலையும் நோக்கிய பயன்மிகு படிகளை எடுத்துவைக்க உதவுமென்பதோடு, அவையிரண்டும், நீடித்திருக்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுமெனத் தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்கால பொருளாதார வெற்றிக்கு, நல்லிணக்கமே அடிப்படையாக அமையுமெனத் தெரிவித்த அவர், மோல்டாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் டேவிட் கமரோனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு, 6.6 மில்லியன் பவுண்ட்ஸை வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதையும் அவர் நினைவூட்டினார்.

அதேபோல், அந்தச் சந்திப்பின் காரணமாக, இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஆலோசகர் நியமனத்தையும் சுட்டிக்காட்டிய அவர், இராணுவத் துறையில், இருநாடுகளுக்கும் இடையிலான உறவு, இருநாட்டு இராணுவத்தாலும் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தனது பேச்சின் இறுதியில் அவர், 'பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியன தொடர்பாக வழங்கிய அர்ப்பணிப்புகளை நிறைவேற்றுவதில் இலங்கை, காத்திரத்துடன் செயற்படுகின்றது என்பதை, இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள படிகள் மூலமாகத் தெளிவாகத் தெரிகிறது. கடந்தகாலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு நீக்குதல், எதிர்காலத்தில் சிறப்பான செழிப்புக்கான சரியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்' எனக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (15) இடம்பெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவுக்காக வடக்குக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள், சிவில் சமூகங்களின் அங்கத்தவர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோரிடம், நல்லிணக்கம் தொடர்பாகவும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X