Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2016 ஜனவரி 05 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - பாகிஸ்தான் நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் எட்டு உடன்படிக்கைகள், நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில், நேற்றுக் காலை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இரு நாட்டு இராஜதந்திரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையினை அடுத்து, இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. hலி முகத்திடல் வீதியின் இரு மருங்கிலும், கண்டிய நடனக் கலைஞர்களின் வாத்தியக் கருவிகள் முழங்க, குதிரைப்படையின் அணிவகுப்புடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஜனாதிபதி செயலகத்துக்கு காலை 9.33க்கு அழைத்து வரப்பட்டார்.
ஜனாதிபதி மாளிகை வீதியிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நீண்டிருந்த தாளவாத்தியக் கலைஞர்களின் மங்கல ஓசையுடன் ஜனாதிபதி செயலகத்துக்குள் வருகைதந்த பாகிஸ்தான் பிரதமரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடும்ப சகிதம் வரவேற்றார்.
ஜனாதிபதியையும் பாகிஸ்தான் பிரதமரையும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினென் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்வாவும் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷெயித் ஷஹீல் ஹுஸைனும், பிரத்தியேக மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
பிரத்தியேக மேடைக்குச் சென்றதும், படை வீரர்களினால் இருநாட்டுத் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. முதலில் பாகிஸ்தானின் தேசிய கீதமும், அதனைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டதும், பாகிஸ்தான் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பீரங்கிப் படையினரால் 19 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன.
மரியாதை வேட்டுகள் நிறைவடைந்ததும், இரு நாட்டின் தேசிய கீதங்களும் மீண்டும் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நிகழ்வுக்கு வருகை தந்திருந்த இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையை, ஜனாதிபதி அறிமுகப்படுத்தி வைத்தார். அத்தோடு, இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளின் அறிமுகமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உட்பட பல நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அறிமுகத்தினைத் தொடர்ந்து, படையினரின் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமரும் ஜனாதிபதியும், ஓய்வறைக்குச் சென்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில், இருநாட்டு இராஜதந்திரிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்;தை, காலை 10.08 மணிக்கு ஆரம்பமாகியது.
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் மாத்திரம், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய பிரமுகர்கள் அனைவரும், அறையிலிருந்து வெயியேற்றப்பட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர், ஜனாதிபதி செயலகத்துக்குள் வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில், இலங்கை அமைச்சர்களுக்கும் பாகிஸ்தான் அமைச்சர்களுக்குமிடையில் எட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகின.
உடன்படிக்கைகள்
இரு நாட்டினதும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுகளிடையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு சம்பந்தமான உடன்படிக்கை.
இலங்கையின் தேசிய விஞ்ஞான அறக்கட்டளைக்கும் பாகிஸ்தான் விஞ்ஞான அறக்கட்டளைக்குமிடையில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சம்பந்தமான உடன்படிக்கை.
இரு நாடுக்குமிடையிலான சுகாதாரத்துறை சம்பந்தமான உடன்படிக்கை.
இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் பாகிஸ்தானின் நிதிக் கண்காணிப்பு பிரிவுக்குமிடையில், நிதிமோசடி மற்றும் பயங்கரவாத நிதியீட்டல் தொடர்பான நிதிப் புலனாய்வுத் தகவல்களை பரிமாற்றும் உடன்படிக்கை.
இலங்கையின் உள்நாட்டலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சுக்கும் பாகிஸ்தானின் தகவல், ஒலிபரப்பு மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சுக்குமிடையிலான கலாசாரத்துறை உடன்படிக்கை.
இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் பாகிஸ்தானின் வர்த்தக அபிவிருத்தி அதிகார சபைக்குமிடையில், வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை.
இலங்கை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்துக்கும் பாகிஸ்தான் புள்ளிவிவரச் செயலகத்துக்குமிடையே, புள்ளிவிவர மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுப் பகிர்வு உடன்படிக்கை.
இலங்கையின் மாணிக்கம் மற்றும் நகைகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கும் பாகிஸ்தானின் பஷென் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துக்குமிடையில், ஒத்துழைப்பு உடன்படிக்கை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே உரை
இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்ய பாகிஸ்தான், அதிகளவான உதவிகளை வழங்கியது. அந்த உதவியினால்தான், எமது வெற்றி உறுதி செய்யப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, ஜனாதிபதி செயலக முன்றலில் வைத்து அரச மரியாதையளிக்கப்பட்டது. அந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'பாகிஸ்தான் வழங்கிய அந்த உதவியினால்தான், எமது வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதனை எமது அரசாங்கம், ஒருபோதும் மறந்துவிடாது. கடந்த காலங்களில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது, எமது நாட்டின்பால் கொண்டுள்ள நல்லெண்ணத்தினால், பாகிஸ்தான் எம்மை ஆதரித்தது.
இலங்கையர்களின் சுக, துக்கங்கள் அனைத்திலும் பங்கெடுக்கும் பாகிஸ்தானிய அரசாங்கத்துக்கும் அரசுசார் அங்கத்தவர்களுக்கும் நாட்டு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வருடம் பாகிஸ்தான் சென்றிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதேபோல், தற்போது கைச்சாத்தாகியுள்ள எட்டு உடன்படிக்கைகளும் பிரயோசனமாக அமையும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. எனவே, பாகிஸ்தான் பிரதமரின் வருகையானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அத்தோடு, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு அழைப்புக் கிடைத்துள்ளது. அங்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன். தேசிய மற்றும் சர்வதேச உறவுகளை பாகிஸ்தானுடன் மேற்கொள்வதில் நாம் பெருமையடைகிறோம்' என்றார்.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .