2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா நேசக்கரம்

Thipaan   / 2016 ஏப்ரல் 07 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன்

யுத்தத்தின் பின் இலங்கை அடைந்துவரும் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க, சீன அரசாங்கம் தயாராக உள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து பேணப்படுவதோடு, இலங்கையின் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்று சீன அரசாங்கம், நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், முதன் முதலாக சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கும், சீன அரசாங்கத்துக்கும் இடையில், நேற்று வியாழக்கிழமை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சீனாவிலுள்ள மக்களின் மகத்தான மண்டபத்தில் (Great Hall of the People) வைத்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் மகத்தான மண்டபத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சீனத் தேசிய மக்கள் காங்கிரஸின் அவைத் தலைவர் சாங் டெயிஜாங்கினால் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர், இரு தரப்பினருக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

அதன்பின்னர், 4.55 மணியளவில், சீனப் பிரதமர் லீ கெகுயாங்கினால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டதோடு, 19 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இதனையடுத்து, சீன மக்கள் காங்கிரஸின் 50 அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, நிமல் சிறிபாடி டி சில்வா, சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, இலங்கைக்கான சீனத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் அடங்கலான இலங்கை உயர்மட்டக் குழுவினருக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.

இதன்போதே, யுத்தத்தின் பின் இலங்கை அடைந்துவரும் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க, சீன அரசாங்கம் தயாராக உள்ளது என்று சீன அரசாங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே, மாலை 6 மணியளவில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறைக்கைதிகளைப் பரிமாற்றல் தொடர்பான ஒப்பந்தம், தொழில்நுட்ப உதவி தொடர்பான ஒப்பந்தம், நடமாடும் சிறுநீரகப் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், சீன அபிவருத்தி வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம், விஞ்ஞானக் கற்கைநெறி தொடர்பான ஒப்பந்தங்களே இதன்போது கைச்சாத்திடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X