2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான் : 32 பேர் காயம்

Editorial   / 2025 ஜூன் 19 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது.

சொரோகா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மருத்துவமனைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பலரும் காயமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு இனி சிகிச்சைக்காக யாரும் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார். 1000 படுக்கைகள் வசதி கொண்ட இந்த மருத்துவமனை தெற்கு இஸ்ரேலைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு மருத்துவ சேவை வழங்கிவந்தது. இந்த மருத்துவமனை மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசுக்கு கடும் அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் பற்றி இஸ்ரேல் சுகாதார அமைச்சர் உரியல் புசோ கூறும்போது, “ஈரான் போர்க்குற்றம் புரிந்துள்ளது” என்று ஆவேசமாக தெரிவித்தார். ஈரானின் இன்றைய தாக்குதலில் மட்டும் 32 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளதாகவும், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .