2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

உப்பை மறந்த அப்பாவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ’ஆப்பு’

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, வத்துகெதர பகுதியில் அண்மையில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் ஊர் முழுக்க பேச்சாகியுள்ளது. அது ஒரு ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரின் "சமையல் கலை" பற்றியதாகும்.

குறித்த ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் இலங்கையில் இருக்க, மூத்த மகள் உயர் கல்விக்காக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். ஒரு நாள் மாலை வேளையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வீட்டிற்கு ஒரு அழைப்பு வந்தது. தாயை எதிர்பார்த்து மகளிடமிருந்து வந்த அந்த அழைப்பை, தற்செயலாக தந்தை ஏற்றுக்கொண்டார்.

"என்னம்மா... திடீரென்று போன் பண்ணியிருக்கிறாய்?" என்று தந்தை கேட்க, "ஒன்றுமில்லை அப்பா, ஒரு முட்டை ஓம்லெட் (Omelette) செய்வது எப்படி என்று அம்மாவிடம் கேட்கலாம் என்றுதான் கூப்பிட்டேன்" என்றாள் மகள்.

உடனே தந்தை உற்சாகமானார். "அதுக்கென்னம்மா... சமையலறையில் பாதி நேரம் நான் தானே ஓம்லெட் போடுகிறேன். ஒரு பேப்பரை எடுத்துக்கொள், நான் சொல்கிறேன், அப்படியே எழுதிக்கொள்" என்று ஒரு பெரிய ஹோட்டல் தலைமை சமையல்காரர் போலத் தோரணையாகத் துவங்கினார்.

"முதலில் மூன்று முட்டைகளை நன்றாகக் கழுவிக்கொள். அவற்றை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, வெள்ளைக்கருவும் மஞ்சள்கருவும் ஒன்றாகக் கலக்கும் வரை நன்கு அடிக்கவும். பின், பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், மிளகுத்தூள், மிளகாய்த் துண்டுகள் மற்றும் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாயைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை நன்றாகக் கலக்கவும். அடுப்பில் ஒரு சட்டியை வைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் இந்த கலவையை ஊற்றவும். ஓம்லெட் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுத்து, ஆறிய பின் ருசி பார்க்கவும்!"

மகளும் தந்தை சொன்னபடியே ஆர்வத்துடன் ஒவ்வொரு குறிப்பையும் எழுதி வைத்தாள். தன் அறைக்கு வரவிருந்த தோழிகளுக்கும் இந்த ஓம்லெட்டைச் செய்து கொடுத்து அசத்தலாம் என்று அவளும் மகிழ்ந்தாள்.

அன்று இரவு மீண்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்பு வந்தது. இம்முறை தாயே போனை எடுத்தார். "அம்மா! அப்பா சொன்னபடி ஓம்லெட் செய்து கடைசியில் நான் மானபங்கப்பட்டுப் போனேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை, அப்படியே குப்பையில் வீசிவிட்டோம்!" என்று மகள் புலம்பினாள்.

பதறிப்போன தாய், "ஏன் மகளே... அப்பா எப்படிச் செய்யச் சொன்னார்?" என்று கேட்க, மகள் தந்தை சொன்ன விவரங்களைக் கூறினாள். விவரத்தைக் கேட்ட தாய் கத்தத் தொடங்கினார்.

"அடிப் பாவி மகளே! ஒரு ஓம்லெட்டில் 'உப்பு' போடாமல் எப்படி ருசி வரும்? இந்த மனுஷன் எப்போதுமே இப்படித்தான்... ஏதாவது ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்து வைப்பார்!" என்று அவர் கத்திய சத்தம் வீட்டின் கூரையைப் பிளந்தது.

இதைக் கேட்டதும் வீட்டிலிருந்த மற்ற மகளும், மாமியாரும் சேர்ந்து அந்தத் தந்தையை வாட்டி வதக்கிவிட்டனர். அதுமட்டுமன்றி, மனைவி  அக்கம் பக்கத்து வீட்டாரிடமும் தன் கணவரின் "உப்பில்லாத ஓம்லெட்" கதையை சொல்ல, விஷயம் ஊர் முழுக்கக் காட்டுத்தீயாகப் பரவியது.

இப்போது அந்த நபர் வீதியில் இறங்கி நடந்தால், ஊர் இளைஞர்கள் கிண்டலாக, "என்ன அங்கிள்... ஒரு நல்ல ஓம்லெட் ரெசிபி சொல்லுங்களேன்!" என்று கேட்கிறார்களாம். அதற்கு அவர் பதில் சொல்லும் விதம், பச்சைச் சிங்களத்தில் "அர்ச்சனை"யாக (திட்டுக்களாக) விழுகிறதாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .