2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எம்பிலிப்பிட்டிய இளைஞன் கொலை விவகாரம்: சாட்சிகள் மறுதலிப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 21 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு 

கண்ணால் கண்ட சாட்சிகள் பல இருந்தும் எம்பிலிப்பிட்டிய சுமித் பிரசன்னவின் கொலையுடன் பொலிஸார் தொடர்புபட்டிருக்கின்றனர் என்பதால் எவரும் சாட்சி சொல்ல முன்வருவதில்லை. நேரில் கண்ட சாட்சியான மனைவி, பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்தபோதிலும் சாட்சிகள் மறுதலிக்கப்பட்டு வருவதாக ஊடகவியலாளரும் சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டின் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன தெரிவித்தார்.

மருதானையில் அமைந்துள்ள சமூகம் மற்றும் மதங்களுக்கான நிறுவனத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது, 

'பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கும் பொலிஸ் மா அதிபருக்கும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்துள்;ளோம். சம்பவத்துடன் தொடர்புடைய ஏ.எஸ்.பி.க்கு இதுவரையில், தற்காலிகப் பணி நீக்கம் கூட மேற்கொள்ளப்படாத நிலையில், எவ்வாறு சாட்சிகள் தம் கண்டனதைத் தெரிவிப்பதற்கு முன்வருவார்கள்? இவ்விடயத்தை பொலிஸ் மா அதிபரிலிருந்து அடிமட்ட ஊழியர்கள் வரை தட்டிக்கழிக்கப் பார்க்கின்றார்கள்' என்று கூறினார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த சுமித் பிரசன்னவின் சார்பில் வாதாடும் சட்டத்தரணி விஜித ஜீ.புஞ்சிநிலமே தெரிவித்ததாவது,

'கடந்த கால ஆட்சியின் தொடர்ச்சியான செயற்பாட்டை இன்னமும் மறக்கவில்லை போலும், அன்று, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை இல்லாமல் செய்து, பொலிஸாரினை அரசியல் தேவைகளுக்காக கொலைசெய்யும் அடியாட்களாக பயன்படுத்தினார்கள். அவ்வாறானதொரு ஆட்சி மாற்றப்பட்டு நல்லாட்சியொன்று உருவாக்கப்பட்டதன் பின்னரும், அதனைச் செய்யவே முனைகின்றார்கள்.பொலிஸ் மா அதிபரிலிருந்து பொலிஸ் நிலையத்தில் உள்ள அடிமட்ட ஊழியர்கள் வரையில் இவ்விடயத்தை மறைக்கப்பார்க்கின்றனர். ஆனால், பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான விக்கிரமதுங்க மட்டும் பகிரங்கமான முறையில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளுகின்றார். அவரது கருத்தை நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாக ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்துக்கு ஒரு கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக' தெரிவித்தார்.

சுமித் முனசிங்கவின் மனைவி ஷஷிகா ஷாமனி முனசிங்க தெரிவித்தாவது, 'எனது கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நான் இதை ஜனாதிபதியிடம் சென்று முறையாட்டாவது அதற்கான நீதியைப் பெற்றுக்கொள்வேன். எனது கணவன் தாக்கப்பட்டமையிலிருந்து இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் சென்றமை வரையில், பொலிஸாரினால் உரிய முறையிலான அணுகுமுறையை அவர்கள் மேற்கொள்ளவில்லை. கணவனின் கொலையைக் கண்ணால் கண்ட சாட்சியிலிருந்து மற்றைய அனைத்துச் சாட்சிகளையும் மறைக்கவே முனைகின்றார்கள். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் ஏ.எஸ்.பி மீது பணி நீக்கமோ, அல்லது பணி இடை நிறுத்தி வைத்தலோ போன்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்கள் முன்னிலையில் தோன்றக்காரணம் குற்றமிழைத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு தண்டனை கிடைக்கவேண்டும். குற்றமிழைத்தவர்கள் எங்கு சென்றாலும் சுதந்திரமாக நடமாட விட முடியாது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும்.' என்றார்.

இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடலுக்கென, பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்கக்கோன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு, இன்று வியாழக்கிழமை (21) அழைக்கப்பட்டிருந்தார். 

ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் தலைமையதிகாரி பி.டபிள்யூ.எஸ். சுமனபாலவை எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அத்தியட்கராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்லப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மேலும் ஆறு பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X