Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட தனது புத்தகங்கள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தீபச்செல்வனின் முகவரிக்கு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள், கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி முதல் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகக் கூறியே இவை தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு மற்றும் கலாசார அமைச்சுக்களின் அனுமதி கிடைத்த பின்னரே இவை விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் பேச்சுவார்த்தையும் இழுபறியும்:
இது தொடர்பாகக் கடந்த 17-ஆம் திகதி கலாசார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது தனது இலக்கியச் செயற்பாடுகள் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்துத் தீபச்செல்வன் விளக்கமளித்தார். இக்கூட்டத்தில் இலங்கை கலைக் கழக உறுப்பினர்கள், சிங்கள மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் எனப் பலரும் தீபச்செல்வனுக்கு ஆதரவாகக் கலந்துகொண்டனர்.
இருப்பினும், புத்தகங்கள் எக் காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்கப்படவிலை. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்ற போதிலும், புத்தகங்களை விடுவிப்பதற்கான எந்தவொரு சாதகமான முடிவும் எட்டப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எழுத்தாளரின் குற்றச்சாட்டு:
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தீபச்செல்வன்:
"சிங்களப் படைப்பாளிகள் மற்றும் இளைஞர்கள் பலரும் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அரசாங்கம் சில மூத்த சிங்கள எழுத்தாளர்களை வைத்து இந்தத் தடையை நியாயப்படுத்த முயல்கிறது. ஒரு சிங்கள எழுத்தாளர், 'எனக்குத் தமிழ் தெரியாது, அப்புத்தகங்களை நான் வாசிக்கவும் இல்லை; ஆனால் அவற்றில் நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளன' எனக் கூறுவது எந்த வகையில் ஏற்புடையது? வாசிக்காமலேயே தீர்ப்பு வழங்குவது அப்பட்டமான இனவாதமும் பாரபட்சமுமாகும்."
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு:
தனது புத்தகங்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், இது தனது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதனைச் சுட்டிக்காட்டியும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். கருத்துச் சுதந்திரத்திற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் குறித்துச் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago