2025 மே 19, திங்கட்கிழமை

காணாமற் போனோர் விவகாரம்: ஆணைக்குழு கலைப்பு?

Gavitha   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போனோரின் ஆணைக்குழுவைக் கலைத்துவிட்டு, அதன்செயன் முறையைத் தொடர்வதற்கான புதிய ஆணைக்குழுவை அல்லது ஏற்பாட்டை அரசாங்கம் செய்யவுள்ளது.

'காணாமற் போனோர் ஆணைக்குழு தொடர்பில் சர்வதேச சமுதாயத்துக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அது கலைக்கப்படும்' என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறினார்.

இந்த ஆணைக்குழுவின் மீது உள்நாட்டு மக்கள் பலருக்கும் திருப்தியில்லை. அவர்களுக்கு அதன் செயன்முறையில் நம்பிக்கையில்லை. எனினும், கூடுதல் வினைத்திறன் கொண்ட ஆணைக்குழு இந்த செயன்முறையை தொடர்வதற்காக நிறுவப்படும் என அவர் கூறினார்.

காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யவென முன்னைய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் நம்பகத்தன்மை தொடர்பிலும் செயற்றிறனிலும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும் தனது சேவையைத் தொடர்ந்தது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ரா அல் ஹுசைன் அண்மையில் கூறியிருந்தார்.

' இந்த ஆணைக்குழு கலைக்கப்பட்டு, அதன் வசமுள்ள தற்போதைய வழக்குகள் காணாமற்போனோரின் உறவினர்களின் ஆலோசனையோடு நியமிக்கப்பட்ட நம்பகமான சுதந்திரமான நிறுவனத்துக்கு மாற்றப்பட வேண்டுமென அவர் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கூறினார்.

ஆயினும், தன்னைவிட சிறப்பாக செய்யக்கூடிய எவரும் இல்லையென ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம கூறினார்.

' நாம் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டோம்.  மக்கள் சாட்சியமளித்த போது, அந்த அமைப்பில் ஆயுதப்படையை அல்லது பொலிஸைச் சேர்ந்த எவரும் இருக்கவில்லை.

நாம் வடக்கு, கிழக்கு, கொழும்பு ஆகிய இடங்களில் பல அமர்வுகளை நடத்தினோம். 19,000 பேரிடம் விசாரணை நடத்தினோம்.

இதில் 16,000பேர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். நாம் சாட்சியம் கூற விடுத்த அழைப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
300 பேரை அழைத்தால் 1,000பேர் வந்தனர். நாம் யாரையும் திருப்பி அனுப்பவில்லை. மாலையில் நேரம் பிந்தி சாட்சியமளித்தவர்களுக்கு வீடுசெல்ல போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தோம் என பரணகம இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரிவித்திருந்தார்.

பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்கக்கோரும் ஐ.நா.வின் முன்மொழிவையும் அரசாங்கம் கருத்தில் எடுத்துள்ளது எனவும் அமைச்சர் ராஜபக்ஷ கூறினார்.

'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி அதன்மூலம் சர்வதேச தரத்திலான கூடுதல் பொருத்தமான அமைப்பை ஏற்படுத்தவேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். அதையும் நாம் பரிசீலிப்போம் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X