2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கதிகாவத் சட்டமூலத்தில் குறைபாடுகள் இருந்தன

Thipaan   / 2016 ஜனவரி 18 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் சட்டமூலத்தில், குறைப்பாடுகள் இருந்தன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சட்டமூலம் மூன்று நிக்காயக்களினதும் மஹா நாயக்க தேரர்களின் அனுமதியுடனேயே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிக்குகள் தொடர்பான சட்டமூலம் இறுதி வரைபு அல்லவென்றும் அதனை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வது மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மஹா சங்கத்தினரின் அனுமதியுடனேயே இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அமரபுர நிக்காயவின் பழைய எழுத்தாசிரியர்களை நினைவுகூரல் மற்றும் அமரபுர நிக்காயவின் துறவற, இல்லறவாசிகளுக்கான பாராட்டு விழாவில், நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வரையப்பட்ட ஒன்று அல்ல என்றும் 25 வருடங்களுக்கு முன்னர் மஹா சங்கத்தினரின் வேண்டுகோளின்படி வரையப்பட்ட ஒன்று என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்த ஒவ்வாரு அரசாங்கமும் அது தொடர்பில் சிற்சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் புதிய அரசாங்கமும் மஹா சங்கத்தினரின் வழிகாட்டலின்பேரில் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இச்சட்டமூலம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் மஹா சங்கத்தினருக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என அறியக் கிடைப்பதோடு, இச்சட்டமூலத்தை மீண்டும் மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மஹா சங்கத்தினருக்கு சமர்ப்பித்து அவர்களது பூரண அனுமதியுடன் அதனை மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதமர், புத்தசாசன அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பிலான விடயங்களை மென்மேலும் பலப்படுத்தி புத்தசாசனத்தை மேம்படுத்துவதற்கு முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X