2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம்: சுமந்திரன், குகதாசன் ஆய்வு

Editorial   / 2026 ஜனவரி 04 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ .அச்சுதன்  

​திருகோணமலை, கன்னியா பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலயத்தின் காணியை தொல்பொருள் திணைக்களம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள்   ஞாயிற்றுக்கிழமை (04) அன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்தனர்.

​இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கன்னியா பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்.

கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. நீண்டகாலமாக பிள்ளையார் ஆலயம் இருந்து வந்த நிலப்பகுதியை தொல்பொருள் திணைக்களம் தற்போது கையகப்படுத்தியுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் விசேட வேண்டுகோளுக்கிணங்க இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, குறித்த காணி கையகப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கேட்டறிந்தார்.

​தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக கையாள்வது குறித்தும், நீதிமன்றத்தை நாடி குறித்த காணியை மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

​மக்களின் வழிபாட்டு உரிமையையும், வரலாற்று அடையாளங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் இருவரும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .