2024 ஜூன் 17, திங்கட்கிழமை

கேப்பாப்பிலவில் நடந்து என்ன? களத்தில் குதித்தார் ஜனாதிபதி

Mayu   / 2024 மே 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது. ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினை என்னவென்று வினவ, அதன்போது அவர்களின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

அதனையடுத்து, வடமாகாண ஆளுநரால் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

காணிப் பிரச்சினை காரணமாக தாம் உட்பட கேப்பாப்பிலவு கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறும் குறித்த பெண்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தப் பிரச்சினையை விரைவாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வுகாணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், வடமாகாணத்தில் பெருமளவிலான காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எஞ்சியுள்ள காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட தம்மை சந்தித்து, தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தமைக்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X