2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கோமா நிலையில் அரசாங்கம்; வீதியில் மக்கள்!

Lenin Raj   / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் நீண்டகாலமாக இருந்த உயிர்ப்பு நிலை மயக்கத்திலிருந்து (கோமா) தற்போதே குணமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி பல வாக்குறுதிகளை வழங்கினார். 50 மற்றும் 100 இலட்சம் ரூபாய் நிதியுதவி மாத்திரமின்றி, காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். ஒரு கூரைத் தகடு சேதமடைந்திருந்தாலும் 10 இலட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால், தற்காலத்தில் 'தித்வா'வினால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றனர். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆகையினால், அன்றைய தினம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி தரக்குறைவானது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி தனது உரையின் வாயிலாகப் பலமுறை முயற்சித்தார். அரச தரப்பில் உள்ள பலர், நிலக்கரி தரக்குறைவானது அல்ல என்று கூறுவதற்கு எவ்வளவோ முயன்றதை அனைவரும் அறிவர். எனினும், அந்த நிலக்கரி தரக்குறைவானது என்பதை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு 10,000 கோடி (100 பில்லியன்) ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றார். ஆனால், அந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. ஆகையினால், 'தித்வா'வினால் பாதிக்கப்பட்டவர்களும் எமது மக்களே, சர்வதேச யுத்தங்களினால் பாதிக்கப்படுபவர்களும் எமது மக்களே என்பதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு புதிய கடன் திட்டத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .