2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காலி முகத்திடலில் கறுப்புச்சட்டை ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 07:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்கவேண்டுமென வழியுறுத்தி, கொழும்பு - காலி முகத்திடலில் கறுப்புச்சட்டைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

சமூக வலைத்தளங்களில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய, கொழும்பு உள்ளிட்ட தலைநகர் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் கடமையாற்றும், மலையகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும், போராட்டத்துக்கு ஆதரவளிப்போரும், ஊடகத்துறை உள்ளிட்ட சமூகநலன்சார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

“முடியட்டும் இனி விடியட்டும்”, “வியர்வைக்கான விலையைத் தா” என்ற கோஷங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் வழமையாகக் குடைகளால் நிரம்பிவழியும், காலிமுகத்திடல், நேற்றையதினம் கறுப்புச்சட்டைகளால் நிரம்பிவழிந்தன. இளைஞர், யுவதிகள் என்ற வேறுபாடுகளை மறந்து, கறுப்புச் சட்டையை அணிந்து பங்கேற்றது மட்டுமன்றி, கறுப்புக் கொடிகளையும் பலர் ஏந்தியிருந்தனர்.

“1,000 ரூபாய் சம்பளத்தை ​வழங்கு”, “கையொப்பமிடும் தொழிற்சங்கங்களே, உங்களுக்கு முதுகெலும்பு இல்லையா”, “தோட்டங்களிலிருந்து கம்பனிகளை விரட்டியடிப்போம்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், காலிமுகத்திடலையே அதிரச் செய்தனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர், கொழும்பு - காலி வீதிக்கு ஏறியமையால், அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதேவேளை, மலையகத்திலிருந்து கொழும்பை நோக்கிவந்த பேரணியால், ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது. மேலதிக பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தண்ணீர் பீச்சியடிக்கும் இயந்திரங்களுடன் கூடிய பொலிஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இதேவேளை, கறுப்புச்சட்டைப் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து வந்தவர்களில் சிலர், ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்வதற்கு, நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் முயற்சித்துள்ளனர். இதனால், அங்கு சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. எனினும், அரசியல் கட்சியொன்றின் இளைஞர்களே, கறுப்புச்சட்டைப் போராட்டத்தைக் குழப்பும் வகையில், இவ்வாறு நடந்துகொண்டதாக அறியமுடிகின்றது.

இதனால், ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜ​ரொன்றைக் கையளிக்கவிருந்த, கறுப்புச்சட்டை அணியின், முயற்சியும் கைகூடாமல் போய்விட்டது. எனினும், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கும் வரையிலும், இந்த “ஒக்டோபர் -24, கறுப்புச்சட்டைப் படையின் போராட்டம் ஓயாது, என அங்கிருந்தவர்கள் உறுதியளித்தனர்.

 


You May Also Like

  Comments - 1

  • A INDRARAJA Thursday, 25 October 2018 02:37 AM

    MALAYAGA ARASIYALVATHIHAL MALAYAGA ILAJARHALAI MUNNERA VIDA MAATTARHAL....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .