2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கொலைச் சதிக் குற்றச்சாட்டு: ‘நாலகவை கைதுசெய்க’

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார 

 

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த நாலக டி சில்வாவையும், ஊழலுக்கெதிரான இயக்கத்தின் முக்கிய உறுப்பினரான நாமல் குமாரவையும் கைதுசெய்யுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டது எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே, இவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமென, அக்கட்சி கோரியுள்ளது. 

நேற்று (24) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த, பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல். பீரிஸ், கொலை செய்வதற்காக இடம்பெற்றதெனக் கூறப்படும் இச்சம்பவத்தை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டினார். 

“ஆரம்பத்தில், நாலக டி சில்வாவைக் கைதுசெய்வதற்குப் பதிலாக, பொலிஸ் தகவல் தொடர்புப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர், அழுத்தங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அவர் அனுப்பப்பட்டார். இது வேறு யாராக இருப்பின், அதிகாரிகள் அவரை விசாரித்து, கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருப்பர்” என, பீரிஸ் குறிப்பிட்டார். 

இவ்விடயம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, இவ்விடயத்தில் இணைந்து செயற்பட்டார் என்று கூறப்படும் நிலையில், அவரும் கைதுசெய்யப்பட வேண்டுமென, பீரிஸ் கோரிக்கை விடுத்தார். 

நாமல் பெரேராவுக்கு ஏதாவது நடப்பின், இந்த முழு விடயமுமே முடங்கிப் போய்விடுமெனத் தெரிவித்த ஜி.எல். பீரிஸ், இவ்விடயத்தில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, ஆதாய நல முரண் காணப்படுகிறது எனவும், எனவே விசாரணைகள் முடிவடையும் வரை, அவர் பதவி விலக வேண்டுமெனவும் தெரிவித்தார். 

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனவும், எனவே, அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், பீரிஸ் மேலும் கோரிக்கை விடுத்தார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X