Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 மார்ச் 18 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டிலுள்ள கொரோனா அச்சத்தையடுத்தான ஜனாதிபதியின் முதலாவது பேச்சு, பொறுப்பானதாக அமைந்திருக்கவில்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது என்றும் எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறிய அவர், இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அரசாங்கத்தால் சுயமாக மாத்திரம் செயற்பட முடியாது என்றும் கூறினார்.
இதற்காக, தேசிய அளவிலாள நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தைத் தவிர்ந்த மற்றைய அரசியல் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு செயற்பட்டால், இதை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி தற்போது சிந்திப்பதை விடுத்து, நாட்டு மக்களின் உயிரையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பதே, தற்போதுள்ள முக்கிய தேவையாக உள்ளது என்று கூறிய அவர், நேற்றைய தின ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரையாடல், பொறுப்பற்ற தன்மையாகவே காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டமை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஆகியவற்றை பற்றி மாத்திரம் உரையாடிய அவர், இறுதியில், பருப்பு, டின்மீன்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்தமை, தற்போதுள்ள சூழ்நிலையக்கு உகந்தது இல்லை என்றும் கூறினார்.
இதற்கிடையே பொதுத் தேர்தலின் மூலம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தார் என்றும் அச்சத்தில் இருக்கும் மக்கள், பாதுகாப்புத் துறையினர், சுகாதாரப் பிரிவினக்கு தைரியம் கொடுக்கவேண்டிய தருணத்தில், தேர்தல் பற்றி உரையாடுவது, பொறுத்தமானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
டின்மீன்கள் பல வகைகளிலும் பல கிராம், கிலோகிராம் வகைகளிலும் இருக்கும் நிலையில், எந்த டின்மீன் 100 ரூபாய்க் குவிற்பனை செய்யப்படும் என்று ஜனாதிபதி கூறினார் என்பது விளக்கமில்லாமலே உள்ளது என்று கூறிய அவரை, கொரோனா பாதிப்புக்கான தீர்வாக அன்றி, இது ஒரு பொதுத் தேர்தல் உறுதிமொழியாகவே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன்களை, 6 மாதங்களுக்கு வசூலிக்கவேண்டாம் என்று ஜனாதிபதி கூறியுள்ளமையைக் குறிப்பிட்ட அவர், அப்படியாயின், இந்த 6 மாதத்துக்கான வாடிக்கையாளர்கள் வழங்கும் வட்டித் தொகையை, அரசாங்கம் வங்கிக்கு வழங்குமா என்றும் கேள்வியெழுப்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையம் வழியாகவும் துறைமுகம் வழியாகவும் மாத்திரமே, வெளிநாட்டவர்கள் உள்நுழைய முடியும் என்ற நிலையில், விமானநிலையத்தில் இருந்து, இத்தாலியர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்று கூறுகின்றமையானது, அரசாங்கத்தின் இயலாமையையே எடுத்துக் காட்டுவதாகவும் இதற்கு, அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, 19ஆம் திகதி வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தேர்தலை நடத்துவதாக இல்லையா எனும் முடிவை தேர்தல்கள் ஆணையகம் எடுத்தாலும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படாத பட்சத்தில், தற்போதைக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இந்த அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறிய அவர், மாறாக, நாடாளுமன்றம் இன்றி, தற்போதைக்கு நாட்டை வழிநடத்தவேண்டும் என்பதிலேயே கருத்தாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025