2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

‘கோட்டாவுக்கு உயிர் அச்சுறுத்தல் என்றால் நாட்டை விட்டு வெளியேறலாம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஷ் மதுஷங்க

 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது உயிருக்கு அஞ்சுகிறார் என்றால், அவர் நாட்டை விட்டு வெளியேற முடியுமெனத் தெரிவித்துள்ள, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவரிடம், ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரஜாவுரிமை இருப்பதை ஞாபகப்படுத்தியுள்ளார். 

ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் கொல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இருவரின் பாதுகாப்புத் தொடர்பாகவும் அதிக கவனமேற்பட்டுள்ளது. 

இந்நிலையில், வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் பொன்சேகா, வவுனியாவின் நந்திமித்ரகம பகுதிக்கு நேற்று முன்தினம் (22) விஜயம் செய்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார். 

அதிக பாதுகாப்புக்குப் பெறுவதற்கு, கோட்டாபய பொருத்தமற்றவர் எனக் குறிப்பிட்டார். அமைச்சராகத் தான் உள்ள நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விட, முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகமானது என, அவர் குறிப்பிட்டார். 

“எனக்கு, 17 பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கோட்டாபயவுக்கு, போதுமான பாதுகாப்பு உள்ளது. நானறிந்தவகையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு, இராணுவம், விசேட அதிரடிப்படையினர், கொமாண்டோக்கள் என, 25 பேரின் பாதுகாப்பு உள்ளது” என, அமைச்சர் குறிப்பிட்டார். 

கோட்டாபய ராஜபக்‌ஷ, தற்போது சாதாரண பிரஜையே எனக் குறிப்பிட்ட அமைச்சர், அரசாங்கத்திலோ அல்லது மக்களுக்காகவோ, எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை எனவும், அவருக்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்ற சட்டரீதியான கடப்பாடு இல்லையென்றும் குறிப்பிட்டார். 

இந்நாட்டைச் சேர்ந்த பலருக்கு, மரண அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், அவர்கள் அனைவருக்கும், குண்டு துளைக்காத வாகனங்களை வழங்குவதாயின், நாட்டிலுள்ள பணம் போதாது என்றும் குறிப்பிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X