2025 மே 17, சனிக்கிழமை

சு.க பிரச்சினை ஏற்படுத்தினால் ஐ.தே.க தனியாட்சி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தின் கீழ், வழங்கப்படவுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் மோதல்கள் உருவெடுத்துள்ள நிலையில், தேசிய அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை வழங்க சு.க தவறும் பட்சத்தில் அக்கட்சியை விட்டுவிட்டு தனியொரு அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசியல்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு தேசிய அரசாங்கத்தின கீழ் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குமாறு ஜனாதிபதியும் சு.க.வின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடம் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

இது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அதனாலேயே அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கியமற்ற அமைச்சுகளை சு.க உறுப்பினர்களுக்கு வழங்குவதாக அக்கட்சி கருதுகின்றது. இதனால் அக்கட்சியினர், அரசியல் விவகாரங்கள், நிதி, மின்சாரம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி போன்ற அமைச்சுகளை கோருவதாக தெரியவருகிறது. 

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் திருப்தியடையவில்லையாயின் தேசிய அரசாங்கம் குறித்த முக்கிய தீர்மானமொன்றை தமது கட்சி எடுக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினால் சுதந்திரக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஸீம், 'தேசிய அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை வழங்க சு.க தவறும் பட்சத்தில் அக்கட்சியை விட்டுவிட்டு தனியான அரசாங்கமொன்றை அமைக்க தமது கட்சியினால் முடியும்' என்று குறிப்பிட்டார். அத்துடன், தனியாட்சி நடத்தக்கூடிய வல்லமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாகவும் கபீர் ஹஸிம் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை, நேற்று செவ்வாய்க்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்த போதிலும், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாளை வியாழக்கிழமையும் (27) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையுமே (28) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசிய அரசாங்கத்துக்கான அமைச்சரவை விடயதானங்களை நியமிப்பது தொடர்பான பணிகள் தற்போது பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. இதற்கானப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றன. 

இருப்பினும், அமைச்சரவைக்கான விடயதானங்கள் குறித்து தொடர்ந்தும் ஆழமாகச் சிந்தித்து திர்மானம் எடுக்க வேண்டி உள்ளதாகவும் இதனாலேயே அமைச்சரவைப் பதவிப்பிரமாணம் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் பிரதான கட்சிகளிலிருந்து தெரிவாகும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 45க்கு மட்டுப்படுத்தவும் 40 பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளை நியமிக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .