2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சீனா வழங்கிய நன்கொடையில் 04 துறைகளுக்கு முன்னுரிமை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 10 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

சீன விஜயத்தின் போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை,  நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லிணக்க செயற்பாடு முன்னெடுக்கப்படுவதனால், ஜூன் மாதம் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுப்போம். பலியெடுக்கும் நோக்கில், யார் பின்னாலும் ஓடவேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம், திணைக்களங்களுடன் மட்டுமே 1952ஆம் ஆண்டுகளில் தொடர்பு கொண்டிருந்த சீனா, தற்போது நிறுவன ரீதியில் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலை நிரப்பி கட்டடம் அமைக்கப்படவிருந்த துறைமுக நகர்த் திட்டத்தை நிலத்தொடர்பின் ஊடாக முன்னெடுக்க கலந்துரையாடியுள்ளோம். இத்திட் டதில் யாரும் கைகோர்த்து கொள்ளலாம்.

ஹம்பாந்தோட்டை, மத்தல ஆகிய திட்டங்களை முன்னெடுத்த அந்நிறுவனம் கடனையும் சேர்த்து 2ஆம் கட்டத்தை முன்னெடுக்க, இணங்கியுள்ளது.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அண்மித்த பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக 1,000 ஏக்கரை சீனாவுக்கு வழங்க உத்தேசித்துள்ளோம்.

இணைந்த நிறுவனச் செயற்பாட்டின் ஊடாக, 99 வருடகால குத்தகைக்கே இவை வழங்கப்படும் என்றார்.  
கடன் பெற்றால் அதனை, அபிவிருத்திக்கு பயன்படுத்தவேண்டும். வரவு - செலவுத்திட்ட பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடாது.

உலகப் பொருளாதார நிலைமைகளை மாற்றமுடியாது.எனினும், அவற்றுக்கு முகம் கொடுப்பதற்குத் தயாராக வேண்டும். 

சீனாவினால் வழங்கப்பட்ட நன்கொடையை, 10 இலட்சம் தொழில்வாய்ப்புகள், வருமானத்தை அதிகரித்துக்கொள்ளல், கிராமியப் பொருளாதார மேம்பாடு மற்றும் மத்தியதர வர்க்கத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் ஆகிய நான்கு துறைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

இந்தியாவுடனான பொருளாதார இணக்கப்பாடு இவ்வருடத்துக்குள் எட்டப்படும். சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அடுத்தவருடம் கைச்சாத்திடப்படும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்கும். 

துருக்கி, ஈரான், பாகிஸ்தானுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் அதனூடாக சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சந்தையில் நுழைவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அமெரிக்காவின் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரே அந்நாட்டுடனான பொருளாதார உறவை மேம்படுத்திகொள்வது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X